full screen background image

கர – சினிமா விமர்சனம்

கர – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து & இயக்கம்: விக்னேஷ் ராஜா,  தயாரிப்பு: ஐசரி K. கணேஷ்,  இணை தயாரிப்பு: குஷ்மிதா கணேஷ்,  தயாரிப்பு நிறுவனம்: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & திங்க் ஸ்டூடியோஸ், கூடுதல் திரைக்கதை & வசனங்கள்: ஆல்ஃபிரட் பிரகாஷ், விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங், கலை இயக்கம்: மாயபாண்டி, ஆடை வடிவமைப்பு: காவ்யா ஸ்ரீராம், பப்ளிசிட்டி டிசைன்: கபிலன் செல்லையா, மியூசிக் லேபிள்: வெல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல், பத்திரிக்கை தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (AIM).

நடிகர்களில் தான் ஒரு தனி ரகம் என்பதே காட்டுவதற்காகவே தனுஷின் பல திரைப்படங்கள் இப்போது தொடர்ச்சியாக சீரியஸ் படங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் அடக்கம்.

வளைகுடாவில் 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி ஈராக் தன் அண்டை நாடான குவைத்தை ஆக்கிரமித்த காலக்கட்டத்தில்தான் இந்த படமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயணிக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீஜாரவியின் ஒரே மகனான கரசாமி என்ற தனுஷின் வாழ்க்கையில் நடக்கும் சில அசம்பாவித சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

கரசாமி சிறு வயதிலிருந்தே திருடுவதில் ஆர்வம் காட்டுகிறார். அது அவருக்கு ஒரு மிகப் பெரிய கிறக்கத்தை தருகிறது. அதனால் திருடனாகவே மாறிவிட்டார்.

தன்னுடைய சொந்த வீட்டிலேயே அப்பா சேமித்து வைத்திருந்த பத்தை திருடி கொண்டு வெளியேறுகிறார் தனுஷ். ஊரே அவரை திட்டித் தீர்க்கிறது. அம்மாவும், அப்பாவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தன்னுடைய அடுத்த ப்ராஜெக்டாக திருச்சி அருகே இருக்கும் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை அடிக்கிறார் தனுஷூம், அவரது உறவு முறை தம்பியுமான பிரித்வி ராஜனும்.

இந்தக் கொள்ளை சம்பவம் கொஞ்சம் ஸ்லீப் ஆகிவிட தனுஷ் மாட்டிக் கொள்கிறார். ஆனால், அவருடன் வந்திருந்த பிருத்வி ராஜன் தப்பித்து விடுகிறார்.

இந்த வழக்கை டிஎஸ்பியான சூரஜ் வெஞ்சாரமூடு தன்னிடம் கொடுக்கும்படி எஸ்.பி.யிடம் கெஞ்சிக் கேட்கிறார்.

“தான் இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறவிருப்பதால் அதற்குள்ளாக ஏதாவது ஒரு பெரிய கேசை முடித்துவிட்டு பத்திரிகைகளில் எனக்கு பெயர் வரும்படி செய்துவிட்டு தன் வீட்டுக்கு போக விரும்புவதாக எஸ்.பி.யிடம் சூரஜ் சொல்ல, எஸ்.பி.யும் அதற்கு சம்தித்து சூரஜிம்  இந்தத் திருட்டு கேசை ஒப்படைக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் தனுஷ் மீது இன்னும் பெண்டிங்கில் இருக்கும் பல வழக்குகளையும் சேர்த்து போட்டு அவரை ஜாமினில் வர முடியாத அளவுக்கு செய்யலாம் என்று சூரஜ் சொல்கிறார்.

இதை கேட்டு ஆவேசமாகும் தனுஷ் ஸ்டேஷனில் சூரஜை அவரை அடித்து விரட்டி விட்டு தப்பி ஓடுகிறார்.

தன்னுடைய காதலியான செல்லி என்ற மீதாவை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவின் ரேணுகுண்டா நகரத்தில் ஒரு ஹோட்டலில் வெயிட்டர் வேலை பார்க்கிறார் தனுஷ். மமிதாவும் அதே ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலையும் செய்து கொண்டிருக்கிறார்.

“இங்கு வந்து ஆறு மாதங்களாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இதே வேலையை செய்வது?” என்று நினைத்த தனுஷ் தான் மீண்டும் ஊருக்கு திரும்பி தன்னுடைய அப்பாவிடம் சொல்லி குடும்ப சொத்தாக இருக்கும் 2 ஏக்கர் நிலத்தை விற்று அதில் வரும் பணத்தை கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்து தனி ஹோட்டல் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்புகிறார்.

ஊரிலோ அவருடைய குடும்ப சொத்து வங்கியில் அடமானமாக உள்ளது. அதன் கடன் இன்னும் வட்டிகூட கட்ட முடியாமல் இருக்கிறது. அந்த நிலத்தை மீட்டால் தான் விற்க முடியும் என்ற நிலைமை தனுஷுக்கு.

இந்த இக்கட்டான நேரத்தில் தனுஷின் அப்பாவும் இறந்து போய்விட அடுத்து தனுஷ் என்ன செய்கிறார்? ஹோட்டல் வைத்து நடத்தினாரா? அல்லது பழைய வழக்குகளுக்காக போலீஸ் அவரை கைது செய்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்தக் ‘கர என்ற படத்தின் திரைக்கதை.

தனுஷ் உருவத்தில் சிறியவராக இருந்தாலும் நடிப்பில் பிரம்மாண்டமாக தெரிகிறார். அவருக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் அவருடைய உடல் அமைப்பும், முக அமைப்பும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அவருக்குக் கச்சிதமாக பொருந்தி விடுகிறது. அவருக்குள் இயல்பாகவே இருக்கும் நடிப்புத் திறனும் பல திரைப்படங்களில் தனுஷ் என்ற மாபெரும் நடிகனை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தப் படமும் அதையேதான் காட்டி இருக்கிறது.

பல காட்சிகளில் தனுஷ் என்ற நடிகனின் நடிப்பை பார்த்து நம் அப்படியே திகைத்துப் போய் அமர்ந்திருக்கும் சூழலில் கதையும், திரைக்கதையும், வசனமும் வேகவேகமாக ஓட ஆரம்பிக்க அந்த லாஜிக், இந்த லாஜிக் என்று எந்த லாஜிக்கையும் பார்க்க முடியாத அளவுக்கு படம் மொத்தத்தையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார் தனுஷ்.

நீண்ட காலம் கழித்து தனுஷ் தன் அப்பாவை பேருந்தில் பார்த்ததும் சட்டென்று இறங்கி ஓடி ஒளிய நினைக்கும் தருணத்திலும், அதற்குப் பிறகு அப்பாவிடம் முகத்தைக் காட்டி பாசத்தோடு நிற்கும் காட்சியிலும் இசையோடு சேர்ந்து அந்த காட்சியை திரையில் பார்க்கும் பொழுது நமக்கே மெய்சிலிர்க்க வைத்தது.

வந்த காரியத்தை சொல்லாமலேயே அப்பாவுக்கு துணை போவது போலவே பேசி கடைசியாக அந்த நிலத்தை கேட்க வந்த தருணத்தில் இவரும் அப்பா கே.எஸ்.ரவிக்குமாரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.

அப்பாவின் சாவுக்கு நான்தான் காரணம் என்று அம்மாவின் காலில் விழுந்து கதறி அழுகும் காட்சியிலும். மமிதாவிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சியிலும் நடிப்பை முழுமையாகக் காட்டியிருக்கிறார் தனுஷ்.

தன்னுடைய அப்பாவை எப்பாடுபட்டாவது தங்களுடைய நிலத்தில் புதைத்துவிடவேண்டும் என்று நினைக்கும் அவருடைய துடிப்புதான் படத்தின் பிற்பகுதியில் நம்மை படத்தோடு கொஞ்சமேனும் ஒன்ற வைத்திருக்கிறது.

தனுஷின் அப்பாவாக நடித்த கே.எஸ்.ரவிக்குமாரின் அற்புதமான நடிப்பு பாராட்டத்தக்கது. ரொம்பவும் அதிகமாப் போகாமலும், நடிப்பே இல்லை என்று சொல்ல முடியாத நிலைமைக்கும் இடையில் நடுநாயகமாக தன்னால் அந்த சின்ன கதாப்பாத்திரத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அழகாக செய்திருக்கிறார் கே.எஸ்ரவிக்குமார். அதோடு அவர் பிணமாக நடித்திருக்கும் காட்சிகளில்கூட சவம் அப்படியே படுத்திருக்கிறது என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறார்.

தனுஷின் அம்மாவாக நடித்த ஸ்ரீஜா ரவியின் அம்மா நடிப்பு ஒரு பக்கம் ம்மைக் கவர்ந்திழுக்கிறது. இறுதியில் மகனை பார்த்து வெறுப்படைந்து முகம் காட்டும் அந்தக் காட்சியிலும் அவருடைய நடிப்பிலேயே அந்தக் காட்சியை விளக்கிவிட்டார்.

மிகக் குறைவான காட்சிகளே இருந்தாலும் மமிதா பைஜு நம்மை கவர்கிறார். ‘செல்லி என்ற அந்த கதாபாத்திரத்தில் திருடன் என்று தெரிந்தும் தனுஷின் மீது காதல் கொண்ட எதுவும் தெரியாத கிராமத்து பெண்ணின் கதாப்பாத்திரத்தை மமீதா தன்னுடைய நடிப்பினால் அழகுபடுத்தி இருக்கிறார். ஆனால், இவ்வளவு அழகான தேவதையை  ஒரு கிராமத்து அழகில்லாத நாயகியாக பார்க்க நமக்குத்தான் ஒரு மாதிரியாக இருக்கிறது.

தனுஷின் தாய் மாமாவாக நடித்திருக்கும் கருணாஸூம் பல்வேறு காட்சிகளில் நம்மை ஒன்றிப் போகவைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

தனுஷூடன் போட்டி போட்டு நடித்திருப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் டி.எஸ்.பி.யாக நடித்திருக்கும் சூரஜ் வெஞ்சாரமூடு. இன்னொருவர் வங்கியின் மேனேஜராக நடித்திருக்கும் ஜெயராம்.

சூரஜின் நடிப்பை தற்போது பல திரைப்படங்களில் பார்த்துவிட்டோம். ஒரு வித்தியாசமான முகபானையோடு அழகாக தன்னுடைய நடிப்பை காட்டும் சூரஜ், தான் ஏற்றிருக்கும் டி.எஸ்.பி. கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

எஸ்.பி.யிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்கும்போதே நமக்கு லேசாக சிரிப்பு வருகிறது. ஆனால், இப்படியும் சில அதிகாரிகள் காவல் துறையில் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தனுஷ் மீது எப்படி எஃப்..ரில் குற்றச்சாட்டுக்களை எழுத வேண்டும் என்பதை சூரஜ் வரிசையாக சொல்லும் பொழுது தப்பி தவறி எவனும்  போலீசில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் நமக்கே வந்துவிட்டது. அந்த அளவுக்கு ஸ்டடி செய்து இந்தக் காட்சியை எழுதியிருக்கிறார் இயக்குர்.

அதோடு அவ்வப்பொழுது தனுஷை தேடி சூரஜ் அலைகின்ற அந்த அலைச்சல்.. அதில் இருக்கும் உண்மைத்தனம். அந்த நடிப்பு.. இதுவே இடைவேளைக்கு பின்பான காட்சிகள் பரபரப்பாக ஓடுவதைப் போல நகர்ந்து இருக்கிறது.

இறுதி காட்சியிலும் சூரஜ், “உன்னை சாதாரணமாக கைது செய்து மக்கள் முன் நிறுத்துவதில் அர்த்தமே இல்லை. எனக்கு எந்த பெயரும் கிடைக்காது என்று சொல்லிவிட்டு தனுசை கைது செய்யாமல் போவது மாபெரும் லாஜிக் எல்லை மீறல் என்று நமக்கு தெரிந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை பொருத்தமட்டில் அதுதான் மிக சரி.

வங்கி மேலாளராக நடித்திருக்கும் ஜெயராம் அப்பொழுது கெட்டவனாகவும், சில நேரங்களில் நல்லவனாகவும் முகம் காட்டி அவர் அடிக்கடி அந்நியனாகவும் ரெமோவாகவும் மாறி மாறி வருகின்ற பொழுது நம்மை திகைக்க வைத்திருக்கிறார். அவருடைய அந்த வில்லத்தனமான நடிப்பும் நம்மைக் கவர்கிறது.

கடைசியில் அவர் ஏற்பாடு செய்த குழுவினர் பேங்க்குள் வந்து நம்ம போலீசா?” என்று ஜெயராமிடம் கேட்கும்போது, தியேட்டரில் அப்படி ஒரு கை தட்டல் கிடைத்தது.

யாரும் சட்டென்று கண்டு பிடிக்க முடியாத ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், டயலாக்குகளையெல்லாம் பேசி முடித்துவிட்டு கடைசியாக அவருக்கு ஒரு குளோசப் வைக்கும்போதுதான் இது எம்.எஸ்.பாஸ்கர் என்று நமக்கு தெரிகிறது. அந்த வகையில் அவரை உருமாற்றியிருக்கும் இயக்குருக்கும், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

தேனி ஈஸ்வரின்ளிப்பதிவு அபாரம். முதல் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் இந்தப் படம் 1990-களில் நடப்பது போலவே மிகவும் பிரயத்தனப்பட்டு காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். அதோடு திருவெறும்பூரில் எம்.எல்.. வீட்டில் தனுஷ் திருடுகின்ற அந்தக் காட்சியில் நடக்கும் சண்டையையும் அவ்வளவு அழகாக பிரமாதமாக படமாக்கி இருக்கிறார் ஈஸ்வர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் எளிமையான வார்த்தைகளால் இருந்தாலும் சின்ன சின்ன துணுக்குகளாக படம் முழுவதும் நகர்ந்து இருப்பது நமக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால்,தே சமயம் பின்னணி இசையில் விளையாடி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

பரப்பரப்பாக ஓடுகின்ற காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணி இசையை அமைத்து நம்மையும் அந்தப் படத்துடன் கூடவே ஓடவும் வைத்திருக்கிறார்.

ஒரு பக்கம் வங்கியின் வாசலில் சூரஜ் காரில் காத்திருக்க, இன்னொரு பக்கம் தனுஷூம் காரில் வந்து காத்திருக்க அப்பொழுது நடக்கின்ற காட்சிகளில் பின்னணி இசை படத்தை நம்மை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. பாராட்டுக்கள் ஜி.வி.பிரகாஷ்.

1990களின் அப்போதைய காலகட்டத்தில் நடக்கின்ற கதை என்பதால் அதற்கேற்றவாறு இடம், பொருட்கள் என்று அத்தனையையும் பார்த்து பார்த்து செய்திருக்கும் கலை இயக்குர் மாய பாண்டிக்கும் நமது வாழ்த்துக்கள்.

வெற்றிமாறன் ஸ்டைலில் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குர் விக்னேஷ் ராஜா என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. படத்தின் முதலில் வரும் அந்த திருட்டு காட்சியை படமாக்கிய விதம் அந்த இடத்தில் படம் பரபரப்பாக ஓடியதைப் போல படம் முழுவதும் நிரவி இருந்தால் படம் பெரும் பெயரைப் பெற்றிருக்கும். ஆனால் அந்தத் தொனி சட்டென்று தனுஷ் ஊர் திரும்பியவுடன் மாறிவிட்டது பெரும் சோகம்தான்.

தான் ஒரு திருடன் என்பதை தனுஷ் ஒத்துக் கொண்ட உடனேயே இந்தப் படத்தில் அவருடன் நாம் ஒன்றிப் போகின்ற உணர்வு நம்மிடம் இருந்து போய்விட்டது. ஒரு திருடன் மீது நாம் ஏன் பாசம் வைத்துக் கொள்ள வேண்டும்? நாம் ஏன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும்? அவனுக்கு என்னவானால் நமக்கென்ன? என்ற எண்ணம்தான் ரசிகர்களுக்கு வந்து சேரும். அதை இயக்குvர் கவனிக்க தவறிவிட்டார் என்று நினைக்கிறோம். இதனாலேயே கடைசிவரையிலும் தனுஷின் அந்த கொள்ளை முயற்சிகளை நம்மால் ஆதரிக்கவும் முடியவில்லை. கை தட்டவும் முடியவில்லை.

வங்கியில் கடனை வாங்குங்கள் வாங்குங்கள் என்று முலாம் பூசிய வார்த்தைகளால் கொஞ்சிப் பேசி, கெஞ்சிக் கூத்தாடி படிப்பறிவற்ற ஏழை விவசாயிகள் தலையில் கடனை அடைத்துவிட்டு அதன் பிறகு அவரிடம் இருந்து கடனை வசூலிக்க செய்யும் கொடுமைகளை இந்தப் படம் படத்தின் பிற்பகுதியில் பேசியிருக்கிறது.

உண்மையில் இந்தக் கதைதான் படத்தின் மையப் பகுதியாக இருந்திருக்க வேண்டும்! கடன் வசூலிப்பில் அவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை அவரை வேறுவிதமாக மாற்றி விட்டது என்று கதையை எழுதி இருந்தால் இந்தப் படத்தை நாம் இன்னமும் ரசித்து இருக்கலாம்.

விவசாயிகளிடம் கடனை வசூல் செய்ய கெடுபிடிச் செய்யும் அதிகாரிகள், டிராக்டரை பறிமுதல் செய்யும் வங்கிகள் இவர்களினால் விவசாயிகள் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். சில பேர் வங்கியின் முன்பாகவே தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் நடந்த இந்த சம்பவங்களை வைத்து அந்த ஊர் மக்களிடையே ஒரு பரப்புரையை நடத்தி அவர்கள் விழிப்புணர்வை கொடுத்ததுபோல இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கலாம். ஆனால் இயக்குர் எதற்காக தனுஷுக்கு திருடன் கதாப்பாத்திரத்தைக் கொடுத்தார் என்றுதான் தெரியவில்லை.

படத்தில் பல லாஜிக் ல்லை மீறல்கள் இருந்தாலும் சஸ்பென்ஸ், திரில்லராக எப்படி வங்கி பணத்தை கொள்ளை அடிக்கப் போகிறார்கள் என்ற விஷயத்தை திரும்பத் திரும்ப நமக்குள் புகுத்தியிருக்கிறார் இயக்குர்.

அதிலும் உடனுக்குடன் பத்தைக் கொள்ளையடித்த கையோடு அனைத்து விவசாயிகளையும் வங்கிக்கு வரவழைத்து பணத்தை கட்ட வைத்து பத்திரத்தை திருப்பி கொடு என்று கேட்பதெல்லாம் கண்டிப்பாக சினிமாத்தனம்தான். இந்த இடத்தில் இயக்குரின் திரைக்கதை சரிந்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும், இயக்குநர் கிளைமாக்ஸ் கட்சியை ஏன் இப்படி சீக்கிரமாக முடித்தார் என்று தெரியவில்லை.

இதுபோல் சில, பல பிரச்சினைகளும் படத்தில் இருந்தாலும் இந்தப் படம் தனுஷின் நடிப்புக்கு மிக அழகாக தீனி போட்டிருக்கிறது. அவருடைய நடிப்புக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்தான்!

RATING : 3.5 / 5

Our Score