இந்தப் படத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கந்த், ரவி மரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து மற்றும் இயக்கம்: ஆர்.காந்தி கிருஷ்ணா, இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர்: கவிஞர் வைரமுத்து – விவேக், தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ், திரைக்கதை, வசனம் – ஆர்.காந்தி கிருஷ்ணா, ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம், எடிட்டிங்: எஸ்.பாஸ்கர், ரூ.சுஜித், கலை இயக்குநர் : ஆர்.கே.நாகு, ஸ்டண்ட்: ஸ்ரீதர், தயாரிப்பு நிர்வாகி: சங்கர் ஜி, காட்சி விளைவுகள் : துவாரகநாத் பாபு, வண்ணம்: ஜி.எஸ். முத்து, ஒலி வடிவமைப்பு: லட்சுமி நாராயணன் ஏ.எஸ்., இணை தயாரிப்பாளர்: தினேஷ் குமார் கே.வி., பத்திரிக்கை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர்.
இப்போதைய யூத்துக்கள் திருமணத்திற்கு முன்பாகவே குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது சேர்ந்து வாழ்வோம். முடியலைன்னா பிரிந்து விடுவோம் என்றெல்லாம் முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக முதலிலேயே பேசி வைத்துக் கொண்டுதான் தாலி கட்டுகிறார்கள். அல்லது தாலியை ஏற்றுக் கொள்கிறார்கள்.
திருமணம் முடிந்த முதல் இரண்டு வருடங்களுக்கு உள்ளேயே டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு வரும் இளைஞர்களும், இளைஞிகளும் இப்போது அதிகமாக இருக்கிறார்கள்.
அது மாதிரியான ஒரு தம்பதிகளின் கதையை சொல்லி அவசரத்தனமான காதலும், அவசரத்தனமான திருமணமும் நீடித்து நிலைத்து நிற்காது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கும் படம் இது.
அமிதாவும், கிருத்திக்கும் திடீரென்று நேரில் பார்த்து. சந்தித்து, பேசிப் பழகி, திடீரென்று காதல் செய்து, திடீரென்று திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
எல்லாம் நன்றாக போனாலும் மூன்றே மாதத்தில் இவர்களுடைய சாயம் வெளுத்து விட்டது. ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்கிறார்கள். சண்டை இடுகிறார்கள். இருவருக்குமே பொறுப்பு என்பது சுத்தமாக இல்லை. “உன்னால் நான் இல்லை; என்னால் நீ இல்லை.. நம் இருவரும் தனித்தனியே போவோம்.. நிம்மதியாக இருப்போம்..” என்று தங்களுடைய திருமணத்தை ஏதோ விளம்பரப் பட சூட்டிங் போல நினைத்து காதலைத் தூக்கி போட்டு காலில் மிதித்துவிட்டு, குடும்ப நீதிமன்றத்தில் டைவர்ஸுக்காக வந்தும் விட்டார்கள்.
விவாகரத்து வழக்கின் முதல் படியாக இருவரும் மன நல மருத்துவரிடம் கவுன்சிலிங் செல்லுமாறு நீதிபதி உத்தரவிடுகிறார்.
இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் கொடுக்கும் கஸ்தூரியிடம் வந்து அமர்கிறார்கள் அமிதாவும், அர்ஜூனும். இவர்களது பொறுப்பற்ற பேச்சுக்களையும், ஒன்றுமே இல்லாத பிரச்சனையையும் ஊதிப் பெருக்கும் இவர்களது ஈகோவினால்தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்ட கஸ்தூரி இவர்களிடம் தனக்குத் தெரிந்த ஒரு காதல் ஜோடியின் கதையை சொல்கிறார்.
ராணவ், ரோஸ்மின் இருவரும்தான் அந்தக் காதல் கதையின் ஹீரோ ஹீரோயின்கள். ராணவ் பி.இ. மெக்கானிக்கல் படித்தும் அதற்கு சரியான வேலை கிடைக்காமல் கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் வேலைக்குக்கூட செல்கிறார்.
இவருடைய கார்டியனான ரவி மரியா “என்னுடைய அலுவலகத்தில் ஒரு மெக்கானிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் வேலை செய்யவில்லை. உனக்கு தெரிந்தால் வந்து முடித்துக் கொடு” என்று அழைக்கிறார். அதற்காக செல்லும் வழியில் ஹீரோயினுடன் ஒரு மோதல் சம்பவம் நடக்கிறது.
ராணவ் அந்த ஆலைக்கு வந்து அந்தப் பிரச்சினையை உடனுக்குடன் சரி செய்கிறார். அப்போதுதான் தான் வழியில் பார்த்த பெண்தான் இந்த நிறுவத்தின் எம்.டி. என்று தெரிந்து கொள்கிறார் ராணவ். இந்த அறிமுகத்துக்குப் பின்னும் இவர்கள் மேலும் மோதலை நடத்தி பிறகு வழக்கமான சினிமா பாணியில் இந்த மோதல் காதலில் போய் நிற்கிறது.
நாயகி ரோஸ்மினின் அப்பாவான சம்பத் இந்த காதலை கண்முடித்தனமாக எதிர்க்கிறார். “இந்தக் காதல் செட் ஆகாது. நாம் பரம்பரை பணக்காரர்கள். அவன் பரம்பரை பிச்சைக்காரன். இதனால் இந்தக் காதல் வேண்டாம்” என்று தடுத்து பார்க்கிறார். ஆனால், ரோஸ்மின் அதை கேட்கவில்லை. ஒரு சுபயோக சுப தினத்தில் இருவரும் ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்கிறார்கள்.
அதன் பிறகு தனி வீட்டில் இவர்கள் தங்களது காதல் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அப்போது ராணவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரை கிராமத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வருகிறார் ராணவ்.
ராணவ்வின் பெற்றோர் கிராமத்துலேயே பிறந்து வளர்ந்தவர்களாததால்அவர்களுடைய எளிமையான வாழ்க்கை மருமகள் ரோஸ்மினுக்கு முட்டாள்தனமாக இருக்கிறது. அதனால் ராணவ்விடம்கூட சொல்லாமல் தன்னுடைய மாமனார் மாமியாரை அழைத்துப் போய் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார் ரோஸ்மின்.
இது ஒரு பெரும் பிரச்சனையாகி நீயா.. நானா.. என்று பார்த்து விடுவோம் என்று ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டே கலகம் செய்கிறார்கள். பிரச்சனை பெரிதானவுடன் இருவரும் பிரிகிறார்கள்.
அந்த நேரம் ரோஸ்மின் கர்ப்பிணியாகவும் இருக்கிறார். அவருக்கு குழந்தை பிறந்தவுடன் “அந்தக் குழந்தை எனக்கு வேண்டாம். அவனிடமே கொடுத்துவிடுங்கள்” என்று ரோஸ்மிக் உறுதியாக சொல்கிறார். இதனால் மருத்துவமனைக்கு வந்து தன்னுடைய குழந்தையை பெற்றுக் கொண்டு போகிறார் ராணவ்.
இதுவரையிலும் கஸ்தூரி கதையை சொல்லி முடித்தாலும் கவுன்சிலிங் வந்திருக்கும் இருவரும் “அடுத்து என்ன; அடுத்து என்ன?” என்று ஆர்வமாக்க கேட்கிறார்கள்.
உண்மையாக இதற்குப் பிறகு என்ன நடந்தது? ராணவ்வும், ரோஸ்மினும் இணைந்தார்களா.. இல்லையா? அவர்களது குழந்தை என்ன ஆனது? இந்தக் கதையை கேட்டுவிட்டு கிருத்திக்கும், அமிதாவும் என்ன செய்தார்கள்? இவருடைய விவாகரத்து வழக்கு என்ன ஆனது?.. இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்த ‘பிரேக் ஃபாஸ்ட்’ என்ற திரைப்படம்.
‘பிக்பாஸ்’ மூலமாக மட்டுமே வெளியில் தெரிந்த ராணவ், இந்தப் படத்தில் முதல்முறையாக கதாநாயகன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய தோற்றத்திற்கு இந்தக் கதாப்பாத்திரம் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது. அவரும் தன்னுடைய நடிப்பில் எதிலும் குறை வைக்காமல் நிறைவாகவே செய்திருக்கிறார்.
ஹீரோயினுடன் முதல் முறையை சந்திப்பிலேயே சண்டையிடுவதும், பின்பு அவருடைய அறைக்கு வந்து கிண்டல் செய்துவிட்டு போகும்பொழுதும் ஒரு சுவையான கலகலப்பை கொடுத்திருக்கிறார். அதற்கு பின்பு தன்னுடைய அம்மா, அப்பாவை அவமானப்படுத்தும் மனைவியைக் கண்டிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் குழப்பமடையும் காட்சிகளில் எல்லாம் பாவம்யா என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.
பணக்காரியாகவே வளர்க்கப்பட்டு இருக்கும் தன்னுடைய மனைவி திருமணத்திற்கு பின்பும் அதே தோற்றத்தில் இருக்க விரும்புவதை ஏற்க முடியாமல் தவிக்கும் கணவனாக தன்னுடைய உளவியல் சார்ந்த பிரச்சனைகளை வெளிக்காட்டுவதிலும் ராணவ் மிகச் சரியாக செய்திருக்கிறார்.
இவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் தன்னுடைய முதல் படத்திலேயே மிகப் பெரிய இடத்தைத் தொட்டிருக்கிறார் ஹீரோயின் ரோஸ்மிக். பணக்காரர்களுக்கு இருக்கின்ற அந்த தெனாவெட்டு பார்வை, முறைப்பு, திமிர்… என்று அத்தனையை குணங்களையும் ஒவ்வொரு காட்சிகளிலும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் ரோஸ்மின். அதிலும் ராணவ்வின் அம்மா, அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டேன் என்று அலட்சியமாக சொல்லும்விதமும், இதைக் கேட்டு ராணவ்வின் கோபப் பேச்சுக்களுக்கு பதில் சொல்லும் நடிப்பிலும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.
தனக்கு பிறந்த குழந்தையை தனக்கு வேண்டாம் என்று ஒரு புதுமையான பெண்ணாக மருத்துவமனை காட்சிகளில் தன்னுடைய கோபத்தையும், ஈகோவையும் வெளிக்காட்டி இருக்கிறார். இந்த வருடத்தின் சிறந்த புதுமுக நடிகையாக ரோஸ்மின் பல விருதுகளைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.
இவருடைய கதையை ஆர்வமாக கேட்கும் கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாதன் ஒரு அவசர குடுக்கை தம்பதிகளாக படம் முழுவதும் காண்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். சாதாரண, சின்ன பிரச்சனையைக்கூட புரிந்து கொள்ளாமல் இருவருமே லபோ திபோ என்று அடித்துக் கொள்ளும்பொழுது டைவர்ஸ் கொடுத்து தொலைங்கப்பா என்று நம்மையே சொல்ல வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இருவரின் முட்டாள்தனமான நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
தன்னுடைய மகள் கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் ஒருவனை திருமணம் செய்து கொள்கிறார் என்ற செய்தியை கேட்டால் எந்தப் பணக்கார தகப்பனுக்குத்தான் நெஞ்சு வலி வராது. இதில் மிகவும் துன்பப்பட்டு போய் அப்பாவான சம்பத் படுகின்ற அந்த அவஸ்தையும் அவரது நடிப்பும் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமான பொருத்தம் என்று சொல்ல வைத்திருக்கிறார்.
மற்றைய கதாபாத்திரங்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தப் படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக தங்களுடைய வேலையை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.பி.பன்னீர்செல்வம் தன்னுடைய குளு குளு என்ற ஒலிப்பதிவில் மூலம் நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகளையே பார்க்க வைத்திருக்கிறார். சில சென்டிமென்ட் காட்சிகளில் நம் மனதை டச் செய்யும் அளவுக்கான கேமரா கோணங்கள் அழகாக இருக்கின்றன. திறமைசாலிகள் எப்போது வந்தாலும் தங்களுடைய பெயரை அழுத்தமாக பதிவு செய்வார்கள். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் நீண்ட நாட்கள் கழித்து பீல்டுக்கு வந்திருந்தாலும் தன்னுடைய ஒளிப்பதிவினை சிறப்பாக செய்து இருக்கிறார்.
இசை ஜி.வி.பிரகாஷா? இந்தப் படத்திற்கு மட்டும் என்னவானது? என்று தெரியவில்லை. பாடல்களும், பின்னணி இசையும்கூட கேட்கும் ரகமாக இல்லை. ஏனோ தானோ என்று இருக்கிறது.
ஒரு காதல் ஜோடி, தங்களுடைய முட்டாள்தனமான அவசர நடவடிக்கைகளினால் டைவர்ஸ் கேட்டு நீதிமன்றத்திற்கு வந்து… பேமிலி கவுன்சிலிங்கில் இன்னொரு காதல் கதையை கேட்கும்விதமாக திரைக்கதை நகர்ந்து இருப்பதால் எந்தக் கதையும் போர் அடிக்காமல் போகும் வண்ணம் முன் பின் காட்சிகளை மிக அழகாக கத்தரி போட்டு இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள் படத் தொகுப்பாளர்களான எஸ்.பாஸ்கரனும், சுஜித்தும்.
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
பி.இ. படித்த பொறியியல் பட்டதாரி வேலை கிடைக்காமல் கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் வேலைக்குப் போகிறார் என்பது சற்றும் பொருந்ததாக திரைக்கதையாகத் தெரிகிறது.
ஒரேயொரு போல்ட் நட்டை டைட் செய்து கொடுத்ததற்காக நட்பாகி, பின்பு காதலாகி சட்டென அந்த நிறுவனத்தின் எம்.டி.யாகவே ஹீரோ அமர்வதெல்லாம் ரொம்பவே டூ மச்சான திரைக்கதை.
அவசரத்தனமாக காதல் செய்து அதைவிட அவசரமாக திருமணம் செய்து கொள்ளும் இன்றைய தலைமுறையினரின் திருமண வாழ்க்கை மிகக் குறுகிய காலத்தில் முறிந்து போவதற்கு என்ன காரணம் என்பதை இந்தப் படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு சொல்லியிருக்கிறார் இயக்குநர் காந்திகிருஷ்ணா.
25 வருடங்களுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இவர் இப்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற சிச்சுவேஷனுக்கு ஏற்றபடி கதையை தயார் செய்திருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சமும் புதுமை இல்லாமல் காலம்காலமாக பெண்களுக்கு எதிராக சொல்லப்படும் வார்த்தைகளும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி கல்யாணம் ஆனாலும் சரி செய்யப்படாது என்கின்ற உண்மையையும் மறுபடியும் இந்தக் கதாபாத்திரங்கள் மூலமாக சொல்லியிருக்கிறார்.
உப்பு சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று காட்சி அமைத்திருந்தாலும் அதில் வசனத்தின் மூலமாக உடனடியாக யார் மீது தவறு என்பதை சொல்லாமல் கடைசி வரைக்கும் எடுத்து வைத்திருக்கும் ஒரு நீட்டமான திரைக்கதையும் மிகவும் போர் அடிக்க வைக்கிறது.
இன்னும் கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதையோடு மற்றவர்கள் நம்பும்விதமாகவும் யோசித்து எழுதியிருக்கலாம். கதை, திரைக்கதை, வசனத்தை வேகமாக எழுதி படப்பிடிப்பை மற்றும் வெகு நாட்களாக நடத்தி இருக்கிறார்கள் போலும்!
இந்தக் காலத்து இளைஞர்களும் இளைஞர்களும் அவசியம் பார்க்க வேண்டிய பட லிஸ்ட்டில் இந்தப் படமும் இடம் பிடித்துவிட்டது. குடும்பத்தினர் மட்டுமல்லாமல் இனிமேல் கல்யாணம் செய்ய போகிறவர்களும்.. கல்யாணம் செய்தவர்களும்.. புதுமண தம்பதிகளும்… அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமாக இது வந்திருக்கிறது.
அவசியம் பாருங்கள்! பிரியாமல் வாழ்வீர்கள்!
RATING : 3 / 5









