full screen background image

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – சினிமா விமர்சனம்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – சினிமா விமர்சனம்

கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என்று தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து சினிமாவிற்குள் வந்த ஏழு வருடங்களில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் இது.

இந்தப் படத்தின் கதை 2040-ல் நடக்கிறது. சென்னைதான். ஆனால் சென்னை இன்னும் 14 வருடங்களில் மெட்ரோ ரயில்கள் எல்லாம் தாண்டி ஏர் டாக்ஸிகளும் அதிகமாக பறந்து கொண்டிருக்க சென்னை முழுவதும் பூங்காக்களாக மாறி கூறும் மனிதர்களும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்.

தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட திருமணம் முறிவினால் கடும் மனக் கசப்படைந்த எஸ்.ஜே.சூர்யா திருமணத்திற்கு முன்பே காதலிக்கும்பொழுது காதலர்கள் ஒருவரையொருவர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு கான்செப்ட்டை மனதில் வைத்து LIK என்ற பெயரில் ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அப்ளிகேஷன் மூலமாக காதலர்கள் ஒருவரை ஒருவர் கனெக்ட் செய்து கொண்டு பேசலாம்… பழகலாம்.. அதே சமயம் ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதை இன்னொருவர் தெரிந்து கொள்ளலாம்.. யாரும் யாருக்கும் துரோகம் செய்ய முடியாது. அவர்கள் இடையில் பொய் சொல்ல முடியாது. ஒரு நேர்மையான காதலாக இது இருக்கும் என்று நினைத்து சூர்யா இந்த அப்ளிகேஷனை உருவாக்கி இருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் செல்போன் என்பது தடிமனான பொருளாக இல்லாமல் வெறும் அலைக்கற்றை வரிசையை மட்டுமே பயன்படுத்தி பார்க்கக் கூடிய, பேசக் கூடியதாக இருக்கும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் காட்டியிருக்கிறார்.

பிரதீப்பின் அப்பாவான சீமான் இதே சென்னையில் ஒரு பசுமை குடில் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த குடிலில் செல்போன் கிடையவே கிடையாது. யாரும் பயன்படுத்த முடியாது. அங்கே இயற்கையான விஷயங்கள் மட்டுமே இருக்கும். இயற்கையோடு இணைந்து வாழ முடியும்.

இப்படி ஒரு இயக்கத்தை நடத்தி வரும் சீமானின் மகனான பிரதீப், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியை பார்த்தவுடன் காதலில் விழுந்து தன்னுடைய அப்பாவின் கண்டிப்பான எதிர்ப்பையும் மீறி செல்போனை வாங்கி அதில் லைக் அப்ளிகேஷன் மூலமாக கீர்த்தியுடன் கனெக்ட்டாகி பேச ஆரம்பிக்கிறார். பழகவும்  ஆரம்பிக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் ஒரு எல்லைக்கு போக அந்த இடத்தில் பிரதீப் ஒரு சிறிய தவறை செய்துவிட கீர்த்தி ஷெட்டி கோபம் ஆகிறார். அதனால், “இனி உன்னுடன் எந்த பழக்கமும் இல்லை. பேச்சுவார்த்தையும் இல்லை” என்கிறார் கீர்த்தி.

அதே சமயம் பசுமைக் குடிலில் இருக்கும் கௌரி கிருஷ்ணன் பிரதீப்பை தீவிரமாக காதலித்து வருகிறார் அது ஒன் சைடு காதலாகவே தெரிகிறது.

இப்போது தன்னுடைய காதலி பிரிந்து போனதால் கோபமான பிரதீப் எஸ்.ஜே.சூர்யாவிடம் இந்த அப்ளிகேஷன் போலியானது என்று சண்டை இடுகிறார். வாதாடுகிறார்.

“30 நாட்களுக்குள் உன்னுடைய அப்ளிகேஷன் அனைத்தும் ஃபிராடு என்பதை நாம் மக்களிடம் நிரூபிப்பேன்” என்று பிரதீப் சவால் விடுகிறார். “அப்படி நீ நிரூபித்துவிட்டால் நான் நிறுவனத்தை மூடி விட்டு போகிறேன்” என்று எதிர்சவால் விடுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

இதற்குப் பின்பு என்ன நடந்தது?.. இந்த சவாலில் யார் ஜெயித்தார்கள்?.. யார் தோற்றார்கள்?.. பிரதீப்பின் காதல் ஜெயித்ததா? அல்லது அவர் யாரை திருமணம் செய்தார் என்பதெல்லாம் இந்தப் படத்தின் திரைக்கதை.

இன்றைய இளைஞர்களுக்கு பிரதீப்பை பிடித்துப் போனதற்குக் காரணமே அவருடைய தோற்றமும், நிறமும், அவருடைய நடிப்பும்தான். இந்தப் படத்திலும் அதையே கவசமாக வைத்துக் கொண்டு அப்படியே படம் நெடுகிலும் பேசிக் கொண்டே இருக்கிறார் பிரதீப். எங்கேயாவது கொஞ்சம் கேப் கிடைத்தால்தான் நாமே கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. அந்த அளவுக்கு ஹீரோ பிரதீப் பேசிப் பேசியே நம்மை கொல்கிறார்.

பிரதீப்பின் இதற்கு முந்தைய படங்களில் எல்லாம் ஏதோ ஒரே ஒரு கட்சியில் ஹிஸ்டாரிக் நோயாளிபோல கத்த வேண்டும். அப்படி கத்தினால் அந்த காட்சி அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது எழுதப்படாத ஒரு விதி.

அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தன்னுடைய நடிப்பு வெறி அத்தனையும் ஒன்று சேர்த்துக் கொண்டு வசனம் பேசி நடித்திருக்கிறார் பிரதீப். நிச்சயம் இது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்புகிறோம்.

மற்றபடி அவருடைய இயல்பான நடிப்பினைத் தொலைத்துவிட்டு சினிமாவுக்காக அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது திரையில் தெரிகிறது. இது எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியவில்லை. வேறு யாராவது ஒரு இயக்குநர் தன்னுடைய ஸ்டைலில் பிரதீப்பை நடிக்க வைத்தால்தான் அவரது இன்னொரு முகம் நமக்கு தெரியவரும். அதுவரையில் நாம் காத்திருப்போம்.

ஹீரோயின் கீர்த்தி செட்டி ரொம்ப சின்ன பெண் போலவே இருக்கிறார். தெரிகிறார். மிக அழகாகவும் இருக்கிறார். மிக அழகாக நடனமும் ஆடியிருக்கிறார். முதல் டூயட் பாடலில் இருவரும் சேர்ந்து ஆடும் அந்த ஆட்டம் இன்றைய இளசுகளை கவர்ந்துவிட்டது. பாராட்டுக்கள்.

அதேபோல் இடைவேளைக்கு பின்பான காட்சிகளின் கொஞ்சம் நடிப்பு திறமையும் காட்டியிருக்கிறார். அந்த நடிப்பெல்லாம் பிரதீப்பையும் தாண்டி நமக்கு பிடிக்கிறது.

இன்னொரு ஹீரோயினான கௌரி கிஷன் இனிமேலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் நமக்கு வாய்ப்புகள் வராது என்று நினைத்தாரோ என்னவோ இந்தப் படத்தில் சில காட்சிகளில் ஓவர் கிளாமரையும் காட்டியிருக்கிறார். சந்தோஷம். இதை வைத்து அவருக்கு இன்னும் நான்கு படங்கள் கிடைத்தால்கூட நாம் பாராட்டலாம்.

அதேபோல் நடிப்பிலும் குறை இல்லாமல் செய்திருக்கிறார். பிரதீப்பிடம் “உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் கரெக்ட்டா இருக்கு. அதைத்தான் அந்த அப்ளிகேஷன் சொல்லுது நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என்று அவர் கோபத்துடன் பேசுகின்ற காட்சிகள் எல்லாம் நிஜமாகவே ஒரு உண்மையை சொல்வது போல தெரிகிறது.

பிரதீப்பின் பாசமான அப்பாவாக சீமான். தன்னுடைய மகன் தனக்கு திரும்ப கிடைக்க வேண்டும். அவன் பாசத்தை என் மீது கொட்ட வேண்டும் என்று பிரதீப்பின் நண்பன் சாராவிடம் பேசுகின்ற அந்த ஒரு காட்சி நம் மனதைத் தொடுகிறது சீமானின் ஸ்பெஷலாட்டியான சில வசனங்களை பிரதீப் கிண்டலாகப் பேசி நம்மை கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.

பிரதீப்பின் நண்பனாக நடித்திருக்கும் ஷாரா, கீர்த்தியின் அம்மாவாக நடித்திருக்கும் வாளமீனு மாளவிகாவும் தங்களுடைய கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து இருக்கிறார்கள். மாளவிகா ஹீரோயினாக நடித்தபோது இருந்ததைவிடவும் இப்போது மிக அழகாக தெரிகிறார்.

வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல தன்னுடைய உயரிய நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய வசன உச்சரிப்பும், நடிப்புமே அசத்துகிறது. இந்தப் படத்தில் பிரதீப்பைவிடவும் மிக சிறப்பாக நடித்திருப்பவர் எஸ்.ஜே.சூர்யாதான்.

அந்த அப்ளிகேஷன் தயாரிப்பின் பின்னணியில் இருக்கும் அந்தக் கதையை அவர் சொல்லும் பொழுது பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய அப்ளிகேஷனை காப்பாற்றுவதற்காக அவர் போடுகின்ற திட்டமும், அத்திட்டமெல்லாம் பனலாகும்போது அவர் காட்டும் நடிப்பு  நம் கண்களை திரையை விட்டு அகல விடாமல் நம்மை பார்த்துக்கொண்டது. பாராட்டுக்கள் சார்.

ஒரு சிறிய கால்ஷீட்டை யோகி பாபுவிடமிருந்து வாங்கி இருக்கிறார்கள் போலும்! அதனால் அவர் அவ்வப்பொழுது வந்து போவது போலவே காட்சிகளை அமைத்து யோகி பாபுவை திரையில் காட்டி இருக்கிறார்கள்.

அவரும் பிரதீப்பிடம் கீர்த்தியை காதலிக்கும் விஷயத்தை சொல்லி அதற்கு ஒரு உடன்படிக்கை பேசுகின்ற இடம் உவ்வே ரகம். இப்படியெல்லாமா சிந்திப்பார்கள். கருமம்டா சாமி..!

எஸ்.ஜே.சூர்யாவின் அல்லக்கைகளாக நடித்திருக்கும் ஆனந்தராஜூம், சுனில் ரெட்டியும் கொஞ்சம் கொஞ்சம் புன்னகைக்க வைக்கும் அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.

50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோவின் படம் என்பதால் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களும் மிக உயரிய அளவிலேயே இந்த படத்தில் வேலை செய்து இருக்கிறார்கள்.

அதிலும் ஒளிப்பதிவு தரம். 2040-ல் சென்னை எப்படி இருக்கும் என்பதை  பிரம்மாண்டமாக காட்டுவதற்காக நிறைய சிஜி காட்சிகளும், விஎஃப்எக்ஸ் காட்சிகளும் படத்தில் நிரம்பி வழிகின்றன முதலில் இருந்து கடைசிவரையில் இருக்கின்ற அந்த கலர் கலர் கலவைகள்தான் படத்தின் மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம்.

25 கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரான அனிருத்தும் இந்தப் படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கான இசையை போட்டுக் கொடுத்திருக்கிறார். அதில் அடித்து ஆடியும் இருக்கிறார். முதல் பாடல் கேட்கும் ரகம். அதற்கடுத்த பாடல்கள் எல்லாம் வந்த வேகத்தில் சென்றன. ஆனாலும் அவை அனைத்துமே ஏற்கனவே கேட்ட அனிரூத்தின் பாடல்கள் போலவே இருந்தது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தை முதல் பெஞ்ச் ரசிகர்களும் நம்புகின்ற வகையிலும் தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனாலும், சில காட்சிகளை நீங்கள் திரையில் பார்க்கவில்லை என்றால் அதற்கு பின்பு கதை உங்களுக்கு புரியாது. அந்த வகையில் படத்தொகுப்பாளர் கச்சிதமாக தனது வேலையை செய்திருக்கிறார்.

கலை இயக்கம் செய்தவரையும் மனதார பாராட்ட வேண்டும். இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்துக்கு எப்படியெல்லாம் டிசைனிங்கை யோசித்து செய்தார்களோ.. தெரியவில்லை ஆனால் அனைத்தும் கலர்ஃபுல். பாராட்டுக்கள். மேலும் அழகழகான டிரஸ்களை தேர்வு செய்து கொடுத்திருந்த உடை அலங்கார நிபுணர்களையும் மனதார பாராட்டுகிறோம்.

ஒரு உண்மையான காதலை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அல்லது மின் காந்த அலைகளோ தீர்மானித்து விட முடியாது என்பதை சொல்வதற்காக இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

காதலர்கள் உண்மையான காதலை அனுபவிக்க முடியாமல் பிரிகிறார்கள் அல்லது இறக்கிறார்கள் என்பதுதான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு இன்றைக்கு நாட்டில் இருக்கும் பெரிய விஷயமாக தோன்றுகிறது போலும்!

எடுக்க வேண்டிய கதைகள் எவ்வளவோ இருக்க… இப்படி ஒரு புரிந்து கொள்ள முடியாத ஒரு கதையை வைத்து அதையும் இத்தனை கோடிகள் செலவில் எடுத்திருக்கும் விக்னேஷ் சிவனுக்கு ரொம்பவே தைரியம்தான்.

இப்போதைய திரைப்பட இயக்குநர்கள் எதற்காக காதலிக்க வேண்டும் என்கின்ற ஒரு உண்மையைகூட சொல்லத் தெரியாமல் தவிக்கிறார்கள். காதல் என்பது திருமணத்தின் முதல் படியாக இருக்க வேண்டும் என்பதைகூட இவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். அவர்கள் செய்த காதலைப் போலவே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதான் மிகப் பெரிய கொடூரம்.

பிரதீப் நினைத்தால் அவர் இன்னொரு தனுஷ் ஆக வரும் ஒரு வாய்ப்பு நிச்சயமாக உண்டு. அவர் இனிமேல் தேர்ந்தெடுக்க போகின்ற களம் இந்தக் காதலை விட்டுவிட்டு வேறு ஏதாவது இருக்க வேண்டும்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளாக இருக்க வேண்டும் அல்லது தியேட்டருக்கு வீட்டிலிருந்து பணத்தை திருடி கொண்டு ஓடிவரும் சின்னஞ்சிறியவர்களின் கதையாக இருக்க வேண்டும். காதலை தூர போட்டுவிட்டு வாழ்வியல் சம்பவங்களை படமாக்கி அதில் இளைஞர்களின் பிரதிநிதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அவர் கதைகளை செய்தால் நிச்சயமாக இன்னொரு தனுஷாக வரக் கூடிய வாய்ப்பு பிரதீப்புக்கு நிறையவே இருக்கிறது. 

புரிந்து கொண்டு செயலாற்றுவார் என்று நம்புகிறோம்..!

RATING : 3.5 / 5

Our Score