நடிகர்கள் :-
மதும்கேஷ் – சித்தார்த்
ஜியா சங்கர் – அதிதி
அர்ஜுன் அசோகன் – ஹரி@ஹரிச்சந்திரன்
எம். எஸ். பாஸ்கர் – பால் மாணிக்கம்
விஜி சந்திரசேகர் – சித்தார்த் அம்மா
ஜெயப்பிரகாஷ் – அதிதி அப்பா
தொழில்நுட்ப குழு:-
தயாரிப்பு – டி ஸ்டூடியோஸ், சன்னி டென்வி (டென்வி புரொடக்ஷன்)
பேனர் – டி ஸ்டூடியோஸ் – மாலி – மான்வி மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – விஜய்
கதை – ஏ. மகாதேவ் – விஜய்
திரைக்கதை – ஏ. மகாதேவ்
வசனம் – இயக்குநர் விஜய்
இணை தயாரிப்பு – பிரபா பிரேம்குமார்
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
எடிட்டிங் – ஆண்டனி
கலை இயக்கம் – சரவணன் வசந்த்
சண்டை இயக்கம் – மனோஹர் வர்மா
ஆடை வடிவமைப்பு – ருசி முனோத்
பாடல்கள் – வைரமுத்து, கார்க்கி ரூ ஆர்கஸ் ஆர்யன்
நடன அமைப்பு – சாண்டி மாஸ்டர் ரூ ரகு தாபா
பப்ளிசிட்டி டிசைன் – வின்சி ராஜ்
பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்
இயக்குநர் விஜய் அதாவது ஏ.எல்.விஜய் இதுவரையிலும் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே ஏதோ ஒரு ஹாலிவுட் படம் அல்லது வேற்று மொழி படத்தின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் ஆகவே அமைந்திருந்த்து. இதற்கு இந்தப் படமும் உதாரணமாகிவிட்டது.
2004-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஹாலிவுட்டில் வெளியான ‘50 FIRST DATES என்ற திரைப்படம், 2004–ம் ஆண்டின் நவம்பர் 5-ம் தேதியன்று வெளியான கொரியப் படமான ‘A MOMENT TO REMEMBER’ திரைப்படம், மற்றும் 2012-ம் ஆண்டு மார்ச் 09–ம் தேதி, வெளியான ‘THE WOV’ ஆகிய திரைப்படங்களின் கதை, திரைக்கதையில்தான் இந்த ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் உருவாகியுள்ளது.
ஹீரோயின் அதிதி என்ற ஜியா சங்கர், ஊட்டியில் 4 எஸ்டேட்டுகளை வைத்திருக்கும் பெரும் தொழிலதிபரான ஜெயப்பிரகாஷின் ஒரே மகள்.
இவர்களுடைய எஸ்டேட்டிலேயே நானூறு பேர் வேலை பார்க்கும் நிலையில், ஜியா சங்கர் இசைத் துறையில் ஒரு மிகப் பெரிய ஆளாக வர வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார்.
முழுமையாக இசை துறைக்கு வருவதற்கு முன்பாக அப்பாவை ஏமாற்றுவதற்காக ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு மாலை நேரங்களில் இசை பயிற்சியும் எடுத்து வருகிறார்.
ஜியா சங்கரை பள்ளி பருவத்தில் இருந்தே பார்த்து அவருடன் படித்த மதும்கேஷ் இப்போதுவரையிலும் ஜியா சங்கரை ஒருதலையாய் காதலித்து வருகிறார். ஜியாவின் அலுவலகம், அவருடைய வீடு இருக்கின்ற பகுதிகளில் அதிகமாக தன்னுடைய நேரத்தை செலவழித்து எப்படியாவது ஜியா சங்கரிடம் தன்னுடைய காதலை சொல்லிவிடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் மதும்கேஷ்.
ஜியா சங்கரின் அப்பாவான ஜெயபிரகாஷ் ஜியா சங்கருக்கு கல்யாணத்தை நிச்சயம் செய்து விடுகிறார். அந்த நேரத்தில் ஜியா சங்கர் தன்னுடைய இசைக் குழுவில் இருக்கும் அர்ஜுன் அசோகனை காதலித்து வருகிறார்.
ஜியா சங்கரின் இசைக் குழுவை அயர்லாந்தில் இருக்கும் ஒரு அமைப்பு இசை போட்டிக்கு தேர்வு செய்திருக்கிறது. ஆனால், இந்தக் குழுவுடன் ஜியா மட்டும் செல்லவில்லை. அதனால் மற்றவர்கள் எல்லாம் ஸ்காட்லாந்துக்கு சென்றுவிட்டார்கள்.
இந்த நேரத்தில் அப்பா, அம்மாவின் இந்த திடீர் திருமண முன்னேற்பாடுகளில் பயந்து போன ஜியசா சங்கர் சென்னையில் இருந்து ஸ்காட்லாந்துக்கு செல்கிறார். ஆனால், அங்கே போய் பார்த்தால் அர்ஜுன் அசோகன் இவருடைய இசைக் குழுவில் இருக்கும் இன்னொரு பெண்ணிடம் காதல் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஜியா சங்கருடனான காதல் உண்மையல்ல.. அவள் வரவில்லை என்றால் அடுத்தாளைப் பார்த்து போய்க் கொண்டே இருப்பேன் என்று தான் காதலித்த ஒருவனின் உண்மை குணம் தெரிய வர ஜியா சங்கர் பெரும் அதிர்ச்சியாகிறார்.
ஜியா சங்கரைத் துரத்திக் கொண்டு மதும்கேஷூம் ஸ்காட்லாந்துக்கே வந்து விடுகிறார். அவரும் அங்கே ஜியா சங்கரின் பின்னாடியே செல்கிறார்.
காதல் என்ற பெயரால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை ஏற்க முடியாமல் தவிக்கும் ஜியா சங்கர் திருமண அழுத்தத்தில் ஒரு மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அவரைக் காப்பாற்றும் பொருட்டு மதும்கேஷும் கீழே குதிக்க இருவரும் பலத்த காயங்களுடன் காப்பாற்றப்படுகிறார்கள்.
ஆனால் ஜியா சங்கருக்கு மெமரி லாஸ் ஏற்படுகிறது. இதனால் கடைசி 24 மணி நேரத்தில் நடப்பது மட்டுமே ஜியாவுக்கு தெரியும். அவர் இரவில் தூங்கி காலையில் கண் முழித்தால் அவருக்கு யாரையும் அடையாளம் தெரியாது. இதற்க முந்தைய நாள் என்ன நடந்தது என்பது அவருக்கு சுத்தமாக தெரியாது.
ஜியா சங்கர் தற்கொலை செய்யும் பொழுது அந்தப் பகுதியில் வசித்த எம்.எஸ்.பாஸ்கரின் டென்ட் கொட்டகை மீது விழுந்துதான் ஜியா சங்கர் உயிர் பிழைக்கிறார். அதனால் எம்.எஸ்.பாஸ்கர், ஜியா சங்கரை மருத்துவமனையில் அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் தங்க வைத்து பராமரிக்கிறார். கூடவே மதும்கேஷம் இருக்கிறார்.
ஜியா சங்கர் ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்தவுடன் எம்.எஸ்.பாஸ்கரையும் மதும்கேஷையும் “யார் நீங்கள்” என்று மிரட்டுவதும் ஆயுதங்களால் தாக்கப் போவதும், கத்திக் கூப்பாடு போடுவதுமாக ஜியா சங்கரின் சில நாட்கள் கழிகிறது.
இன்னொரு பக்கம் அந்த இசை போட்டி விழா நடைபெறும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயபிரகாஷ் தன்னுடைய மகளை மீட்பதற்காக அயர்லாந்துக்கு ஓடி வருகிறார். அர்ஜுன் அசோகன் ஒரு கட்டத்தில் ஜியா சங்கரை பார்த்தவுடன் அவளை வைத்து போட்டியில் ஜெயித்துவிடலாம் விடலாம் என்றும் நினைக்கிறார்.
இந்தப் பிரச்சனைகளின் முடிவுதான் என்ன? ஜியா சங்கர் முற்றிலும் குணமடைந்தாரா? அவர் யாரை காதலித்தார்? யாரை திருமணம் செய்யப் போகிறார்? என்ற திரைக்கதைகளுக்கு விடைதான் இந்தப் படம்.
இயக்குநர் விஜய், சிறந்த இயக்குநர்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கதையை மட்டுமே மற்றவர்களிடமிருந்து தெரியாமல் எடுத்துக் கொள்வார். என்றாலும், இயக்கத்தில் அவர் ஒரு சிறந்த இயக்குநர்தான். இந்தப் படத்திலும் அவ்வளவு அழகாக நடிகர், நடிகைகளை நடிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக ஜியா சங்கர் தமன்னாவிற்கு ஒன்றுவிட்ட தங்கை போலவே காட்சியளிக்கிறார். இன்னொரு பக்கம் தமன்னாவை வைத்து AI-யில் படமாக்கியிருக்கிறாரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு படத்தில் ஹீரோயினை அவ்வளவு அழகாகக் காட்டி இருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் காலையில் கண் முழித்தவுடன் உடன் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரையும் மதும்கேஷையும் பார்த்து “யார்ரா நீங்க?” என்று கத்திக் கூப்பாடு போட்டு ஜியா சங்கர் காட்டுகின்ற இந்த நடிப்பு அசத்தல். அவ்வளவு அழகாக இருக்கிறது அவருடைய அந்த ஆர்ப்பாட்டமான நடிப்பு.
மேலும் தன்னுடைய அப்பாவை அவர் சமாளிக்கும்விதமாக எப்படியாவது இசைத் துறையில் மிகப் பெரிய ஆளாக வலம் வர வேண்டும் என்று அவர் நினைக்கின்ற அவருடைய இசை வெறியும் அவருடைய நடிப்பிலேயே தெரிகிறது.
அர்ஜுன் அசோகன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதை உணர்ந்த உடன் அந்த சோகத்திலேயே அவர் நடந்து வருகின்ற காட்சிகளில் அவருடைய முகம் காட்டும் அந்த விரக்தி, ஏமாற்றம்… இது இரண்டுமே அந்தக் காட்சியை கூர்ந்து கவனிக்க வைத்து ஜியா சங்கரைப் பாராட்ட வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.
நேரில் காதலை சொல்லாமல் மௌனமாகவே தன்னுடைய காதலை மனதுக்குள் வைத்து ஹீரோயின் பின்னாடியே அலையும் மதும்கேஷின் அமைதியான நடிப்பும் ரசிக்க வைத்திருக்கிறது.
அர்ஜுன் அசோகன் ஒரு புத்திசாலித்தனமான ஒரு காதலனாக அவள் இல்லாவிட்டால் இவள் என்று சட்டென்று இடம் மாறும் அந்தக் குணத்துடன் வாழ்ந்து இருக்கிறார். கடைசியாக ஹீரோயினை எப்படியாவது கொண்டு சென்று விடலாம் என்று அவர் போடும் பிளானிங்கும், அவருடைய நடிப்பும் ரசிக்க கூடியதாகவே இருக்கிறது.
தன்னுடைய பெண்ணை பார்க்க அவசரம், அவசரமாக ஸ்காட்லாந்துக்கு வரும் ஜெயபிரகாஷ் அங்கே நடக்கின்ற கூத்துக்களை எல்லாம் பார்த்து உண்மையை உணர்கின்ற அந்த தருணத்தில் “என் பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருந்த போதும்” என்று நினைக்கின்ற அந்த நினைப்புதான் பல காதலர்களை காப்பாற்றியிருக்கிறது.
எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல தன்னுடைய குணச்சித்திர நடிப்பை காண்பித்திருக்கிறார். இவரால்தான் இடைவெளிக்கு பின்னான காட்சிகளை நம்மால் மொத்தமாக ரசிக்க முடிகிறது.
ஸ்காட்லாந்தின் அழகை அங்குலம் அங்குலமாக படம் பிடித்து கண் குளிர நம்மை பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா. வெளிப்புற காட்சிகளை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு நாளாவது இந்த இடத்தில் கால் பதித்து விட வேண்டும் என்ற ஆசை நமக்கும் தோன்றுகிறது அந்த அளவுக்கு ஸ்காட்லாந்து பகுதியின் அழகு இந்தப் படத்தில் பதிவாகி இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜூக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவருடைய இசையில் ஒலித்த மூன்று பாடல்களுமே இளையராஜாவின் பாடல்களின் காப்பியாகவே நமக்கு தெரிகிறது. கதைதான் காப்பி என்றால் பாடல் மெட்டுக்களையுமா காப்பியடிப்பார் விஜய்? என்ன கொடுமைடா சாமி இது!?
படத் தொகுப்பாளர் ஆண்டனி, இயக்குநருக்கு பிடித்த வகையிலும், காட்சி அமைப்புகளுக்கு சேதாரம் இல்லாத வகையிலும் படத்தை தொகுத்து அளித்திருக்கிறார்.
போட்டி நிகழ்வன்று அழைப்பு இல்லாததால் உள்ளே போக முடியாமல் தவிக்கும் ஹீரோயின், தெருவில் இசைத்துக் கொண்டிருக்கும் இசை கலைஞர்கள் உதவியுடன் தன்னுடைய பாடலை பாடி அரங்கத்தில் உள்ளே இருந்தவர்களையும் வெளியில் வரவழைத்து அவர்களை கை தட்ட வைத்து தன்னுடைய குரல் வளத்தை காட்டி முதலிடம் பெரும் ஹீரோயினின் நடிப்பு இயக்குநர் விஜய்யின் இயக்கத்தால் அழகாக பதிவாகி இருக்கிறது.
ரொம்பவே லாஜிக் இல்லை மீறிய திரைக்கதை என்றாலும் இயக்குநர் விஜய்யின் சீரிய இயக்கத்தால் இந்தக் காட்சியை நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.
முக்கோண காதல் கதையாக இந்தப் படத்தை வடிவமைத்திருக்கும் இயக்குநர் விஜய், படத்தின் அடிநாதமான “தூங்கி எழுந்தால் இதுவரையில் நடந்ததெல்லாம் மறந்து போகும்” என்கின்ற அந்த ஒற்றை கான்செப்ட்டை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
காதலை சொல்லக்கூட தைரியம் இல்லாத ஒரு ஆண். இன்னொரு பக்கம் வருகின்ற காதல்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் புத்திசாலி ஆண்.. இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொள்ளும் ஒரு அபலைப் பெண் என்று இந்த கதை மாந்தர்களுடன் இரண்டு மணி நேரம் பொழுதைப் போக்கும்வகையில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
கதை, திரைக்கதையை காப்பியடித்த உலகத் திரைப்படங்களுக்கு நன்றி கார்டாவது டைட்டிலில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் எஸ்கேப் ஆயிருக்கும் இயக்குநர் விஜய்யை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
RATING : 3 / 5









