full screen background image

வேம்பு – சினிமா விமர்சனம்

வேம்பு – சினிமா விமர்சனம்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வேம்பு’.

அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ்’(ஜானி), ‘தங்கலான்’, ‘கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘டூலெட்’, ‘மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மாரிமுத்து, ஜெயராவ், ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷ் நடித்த தங்க மகன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த A. குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அதோ முகம்’, G.V.பிரகாஷ் நடித்த ரபேல் படத்திற்கு இசை அமைத்த மணிகண்டன் முரளி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ‘மிருதன் படத்திற்கு படத் தொகுப்பு செய்த KJ . வெங்கட்ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.  ‘துணிவு’, ‘வலிமை போன்ற முன்னணி படங்களில் பணிபுரிந்த ராம்ஜி சோமா இப்படத்திற்கு ஒலிக்கலவை செய்துள்ளார்.

பெண் தன்னையே பாதுகாத்துக் கொள்தல், கூடவே அரணாக நிற்கும் சரியான ஆண் துணை பற்றிய நிகழ்வுகளுடன் இப்படம் நகர்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.

அந்தக் கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளையில் வேலை செய்பவரின் மகள் வேம்பு.

இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். சிலம்பம் கற்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் திறமையுள்ளவர். இப்போது மாவட்ட அளவில் சிலம்ப விளையாட்டு போட்டியில் முதலிடத்தைப் பெற்று பரிசு வென்றவர்.

இவருடைய சொந்த அத்தை மகன்தான் படத்தின் நாயகன் வெற்றி என்ற ஹரி கிருஷ்ணன். அவர் உள்ளூரிலேயே போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நட்பும் இருக்கிறது. அதே சமயம் வெற்றிக்கு வேம்பு மீது ஒரு காதல் இருக்கிறது. வேம்புவுக்கோ சிலம்பு துறையில் மிகப் பெரிய சாதனை செய்ய வேண்டும். மிகப் பெரிய போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என்று தலையாய ஆசை. அந்த ஆசைக்காக முனைந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய அப்பாவுக்கு வேம்புவின் கனவெல்லாம் தெரிந்திருந்தாலும் அந்த கிராமத்து மக்களின் வாழ்வியலோடு ஒத்துப் போக வேண்டிய சூழலில் இருப்பதால் வேம்புவுக்கு திருமணம் செய்து வைக்க முனைகிறார்.

வேம்பு முதலில் இதற்கு மறுத்தாலும் பின்பு தன்னுடைய அப்பாவின் ஆசைக்காக, தன்னுடைய அப்பாவின் கண்ணீருக்காக, அப்பாவுக்காக தன்னுடைய கனவை ஒத்தி வைத்துவிட்டு திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

ஆனால், அந்த திருமணம் நடந்த அன்றைய நாள் இரவில் அவருடைய வாழ்வில் ஏற்படும் ஒரு மிகப் பெரிய இடி அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.

அது என்ன அடி?.. அந்த இடியிலிருந்து வேம்பு தப்பித்தாளா?.. இல்லையா?.. அவளுடைய சிலம்பக் கனவு என்ன ஆனது?.. என்பதுதான் இந்த ‘வேம்பு’ என்கின்ற படத்தின் திரைக்கதை.

தொடர்ச்சியாக பெண்ணியம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களிலேயே நடித்து வரும் நாயகி ஷீலா, இந்தப் படத்திலும் ஒரு அழகான வேம்பு’ என்கின்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று இந்த படத்திற்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறார்.

தன்னுடைய கனவு சிலம்பம் தான் என்பதை அவருடைய தந்தை, தாய், அத்தை, உற்றார், உறவினர்கள், பாட்டி அனைவரிடமும் அவர் சொல்லிச் சொல்லி ஓய்ந்து போனாலும் அந்த சிலம்பம் ஆடுகின்றபொழுது அவர் காட்டுகின்ற அந்த வேகமும், பெருமிதமும் அவருடைய முகத்திலேயே தெளிவாக தெரிகிறது.

வெற்றியை மனதுக்குள் காதலித்தும் வெளியில் சொல்ல முடியாமல் தன்னுடைய கனவுக்காக காதலை ஒழித்து வைத்துவிட்டு பேசுவதும்… காதலா? சிலம்பமா? என்கின்ற ஒரு பட்டிமன்றத்தில் கடைசியில் காதலே ஜெயித்தது என்பதுபோல பாடல் காட்சிகளில் அவர் காட்டுகின்ற  சின்ன சின்ன ஆக்சன்களாலும் அவரை வெகுவாக ரசிக்க முடிகிறது.

இடைவேளைக்குப் பின்பு தன்னுடைய கணவன் வெற்றியை அவர் தாங்கின்ற தாங்கலும், அந்தக் குடும்பத்தை இனி தான்தான் தோளில் வைத்து சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருகிறோம் என்பதை உணர்ந்து ஒரு பொறுப்பான மருமகளாகவும், பொறுப்பான மனைவியாகவும் அவர் மாறிவிடும்  காட்சிகள் நமக்குள் லேசாக கண்ணீரை வரவழைத்திருக்கிறது.

வெற்றியிடம் “நான் வேலைக்கு போகட்டுமா மாமா” என்று கேட்டு வீட்டு சுமையை தான் சுமப்பதற்கு அவர் தயாராக இருப்பதும், தான் கற்றுக் கொண்ட சிலம்பத்தையே கண்காட்சியாக வைத்து அதை வைத்து பணம் சம்பாதிக்க முயலும் அந்த நேரத்தில் அவர் படும் துயரத்தையும் பார்க்கின்றபொழுது நமக்கே அச்சச்சோ என்ற ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்திவிட்டார் ஷீலா.

இறுதி வரையிலும் நாயகி ஷீலா சில காட்சிகளில் நாயகனாகவும் மாறி இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன் “நடிப்பு அரக்கன் நான் இல்லை” என்று அவர் சொன்னாலும் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் கண்களை உருட்டி, உருட்டி வைத்துக்கொண்டு பரிதாபமாக அவர் பேசுகின்ற பல வசனங்களாலும், முக பாவனையாலும் ஒரு பரிதாப உணர்வை நம்மிடமிருநது பெற்றுக் கொண்டுவிட்டார்.

வேம்புவிடம் தன்னுடைய காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று அவர் துடியாய் துடிக்கின்ற காட்சிகளிலும், அவரை ரசிக்க முடிகிறது. அதேபோல் பரிதாபமாக வீட்டில் அமர்ந்திருந்த நிலையிலும் வேம்பு தன் சிலம்ப கனவை விட்டுவிடக் கூடாது என்பதை அழுத்தி அழுத்தி சொல்லும் பொழுது இப்படி ஒரு கணவன் கிடைக்க வேம்பு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நமக்கே சொல்லத் தோன்றுகிறது.

ஷீலாவின் அப்பாவாக நடித்தவர் சின்ன சின்ன விஷயங்களில்கூட அழகாக கச்சிதமாக செய்து நம்மைப் பெரிதும் கவர்ந்து இருக்கிறார். அதிலும் தன் மகள் அத்தனை ஊர்க்காரர்கள் மத்தியில் சிலம்பத்தை செய்து அதில் பணம் சம்பாதித்ததை அறிந்து வீடு தேடி வந்து விசும்பலோடு அழுகின்ற காட்சிகள் உண்மையில் நம் மனதை பிசைந்து செய்ய வைத்துவிட்டது அவருடைய இயல்பான நடிப்பு.

மற்றும் வேம்புவின் அம்மாவாக நடித்தவரும் ஹரி கிருஷ்ணனின் அம்மாவாக நடித்த ஜானகி.. இருவருமே போட்டி போட்டு செண்டிமெண்ட் காட்சிகளில் மிக இயற்கையாக, மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.வாக நடித்திருக்கும் மாரிமுத்து மிகச் சிறந்த நடிகர்தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் விடை பெற்று இருக்கக் கூடாது. தன்னுடைய எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில்  இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்து படத்தின் முடிவை ஒரு அழகான முடிவாக முடித்து வைத்திருக்கிறார்.

படத்தை முழுமையாக மலைப் பிரதேசத்திலேயே எடுத்திருப்பதால் இயற்கை அழகுள்ள காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.

லே பொன்னம்மா என்ற பாடல் இன்னமும் உன் காதில் ரீங்காரமாய் ஒழித்துக் கொண்டே இருக்கிறது. மற்றைய பாடல்களும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையில் கொஞ்சம் அடித்து ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர்.

சின்ன பட்ஜெட் படம் என்பதால் நிறைய காட்சிகளை விட்டுவிட்டு எடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் ஹரிக்கு மறுபடியும் பழைய வாழ்க்கை கிடைத்தவுடன் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டிய சென்டிமென்ட் காட்சிகள் மிஸ்ஸிங் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இது போன்ற சின்ன பட்ஜெட் படமாகவே இருந்தாலும் சில காட்சிகளை தவிர்க்கவே முடியாதது. இதில் வேறு வழியில்லாமல் எடுக்காமல் விட்டு விட்டார்கள் போலும்.. இருந்தாலும் இயக்குநரை இந்தக் காரணத்திற்காகவே நாம் கண்டிக்கிறோம்.

இப்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு நிச்சயமாக தற்காப்பு கலை ஒன்று தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகியுள்ளது. அது கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும், மெட்ரோபாலிட்டன் சிட்டியாகவே இருந்தாலும் சரி… நிச்சயமாக அவர்களுக்கு அது தேவையானது. ஏனெனில் அவர்களுடைய எதிரிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள் என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட அவர்கள் கற்றுக் கொள்ளும் ஒரு ஆயுதம்தான் தற்காப்பு கலை. நிச்சயமாக அவர்களுக்கு என்றேனும் ஒரு நாள் அவருடைய வாழ்வில் நிச்சயம் அது உதவி செய்யும்.

அந்த வகையில் இந்த திரைப்படம் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படமாக அவர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் படமாக அமைந்துள்ளது.

பெண்களுக்கு எப்போதும் தேவையான அத்தியாவசியமான தேவை கல்வி. அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிப்படையே அவர்கள் பெறும் கல்விதான் என்பதையும் இத்திரைப்படம் மறைமுகமாகவும் நேரடியாகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜஸ்டின் பிரபுவிற்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். தன்னால் முடிந்த அளவுக்கு இத்திரைப்படத்தில் மிகச் சிறப்பான வகையில் உருவாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர். அந்த இயக்கத்திற்கு நமது பாராட்டுக்கள். அனைத்து நடிகர் நடிகைகளும் மிக சிறப்பான முறையில் நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் நமது பாராட்டுக்கள்.

இது போன்ற திரைப்படங்களை நமது தமிழ் சினிமா ரசிகர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு இது மாதிரியான சிறந்த திரைப்படங்கள், சின்ன பட்ஜெட்டில் உருவாகும் சிறந்த திரைப்படங்கள் நிறைய வரும். அப்படி வந்தால்தான் தமிழ் சினிமாவிற்கு ஒரு ஆறுதலாகவும், உத்வேகமாகவும் இருக்கும்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை நாம் மனமார்ந்து வரவேற்க வேண்டும். தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயமாக தியேட்டருக்கு ஓடோடி வந்து இத்திரைப்படத்தை பார்த்து இந்த தயாரிப்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசும் இத்திரைப்படத்திற்கு நிச்சயமாக பல விருதுகளை வழங்க வேண்டும். அதற்கு முன்பாக இத்திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 4 / 5

Our Score