full screen background image

நடிகர் மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம்!

நடிகர் மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இன்று மாலை 6 மணியளவில் திடீர் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 48.

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான பாரதிராஜா, சந்திரலீலா தம்பதியினருக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர்.

மனோஜ் தனது சிறுவயதில் தனது தந்தை பாரதிராஜா இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பு மற்றும் இசையார்வம் கொண்ட அவர், தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பு குறித்த படிப்பை முடித்தார்.

பிறகு சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் மணிரத்னத்தின் படங்களிலும், பாரதிராஜா இயக்கிய படங்களிலும் உதவி இயக்குநராக பணியாற்றினார். பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

கடந்த 1999-ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், சாதுரியன், அன்னக்கொடி, பேபி, கதிர்வேல் காக்க, என்னமா… கத வுடுறானுங்க…!, வாய்மை, சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்தார். ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்த அவர், ‘தாஜ்மஹால்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருந்தார்.

திரைப்படம் இயக்க வேண்டும் என்பதற்காக நடிப்பை குறைத்துக்கொண்ட மனோஜ், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து இயக்குநராக திட்டமிட்டார். ஆனால், அப்படம் ஆரம்ப நிலையிலேயே கை விடப்பட்டது.

பிறகு 2023 அக்டோபர் 27ம் தேதி வெளியான ‘மார்கழி திங்கள்’ என்ற தமிழ் படத்தின் மூலம் ‘மனோஜ் பாரதிராஜா’ என்ற பெயரில் இயக்குனராக அறிமுகமானார். இதில் ஷ்யாம் செல்வன், ரக்‌ஷணாவுடன் பாரதிராஜாவும் நடித்திருந்தார்.

மலையாள நடிகையான நந்தனா, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ‘சாதுரியன்’ படத்தில் இணைந்து நடித்தபோது மனோஜும், நந்தனாவும் காதலித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2005 நவம்பர் 19-ம் தேதி தனது காதலியும், நடிகையுமான நந்தனாவை திருமணம் செய்த மனோஜுக்கு  ஹர்ஷிதா, மதிவதனி ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மனோஜ். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு உடனேயே இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். இதையடுத்து கடந்த வாரம் சென்னை அமைந்தகரையில் இருக்கும் மருத்துவமனையில் மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சை முடிவடைந்து வீட்டுக்குத் திரும்பி ஓய்வு எடுத்து வந்தார் மனோஜ். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்த மனோஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மனோஜின் மறைவுச் செய்தி தமிழ்த் திரையுலகத்தை பேரதிர்ச்சியாக்கியுள்ளது. பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோஜின் உடல் நீலாங்கரையில் இருக்கும் பாரதிராஜாவின் வீட்டுக்கு இன்று இரவு கொண்டு செல்லப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் இடுகாட்டில் அவரது இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score