full screen background image

35 – சின்ன விஷயம் இல்லை – விமர்சனம்

35 – சின்ன விஷயம் இல்லை – விமர்சனம்

S Originals Waltair Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் Srujan Yarabolu and Siddharth Rallapalli இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரியதர்ஷி, நிவேதா தாமஸ், விஷ்வா தேவ், கே.பாக்யராஜ், கெளதமி, கிருஷ்ண தேவ், அருண் தேவ், அபய், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வழங்கியவர் – ராணா டக்குபதி, ஒளிப்பதிவு – நிகேத் பொம்மி, இசை – விவேக் சாகர், படத்தொகுப்பு – டி.சி.பிரசன்னா, உடை வடிவமைப்பு – பிரின்சி வைத், விளம்பர வடிவமைப்பு – சக்தி கிராபிக்ஸ், பத்திரிக்கை தொடர்பு – வம்சி சேகர். எழுத்து, இயக்கம் – Nanda Kishore Emani.

தெலுங்கு மொழியில் படமாக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

திருப்பதியில் வசிக்கும் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் விஷ்வா தேவும், நிவேதா தாமஸூம். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த பையனான அருண் தேவ்வும், இரண்டாவது மகனும் ஒரே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுவன் அருண் தேவுக்கு கணிதப் பாடம் மட்டும் கசப்பானதாக இருக்கிறது. அதில் அவனுக்கு நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பூஜ்ஜியம் என்பது ஒரு மதிப்பற்றதாக இருக்கிறது. அதுக்கு முன்பாக ஒன்றை சேர்த்தால் அது 10 ஆகி விடுகிறது. 10 என்பது, ஒன்பதைவிட அதிகமாகிறது. இது எப்படி சாத்தியமாகும்..? என்ற வித்தியாசமான ஒரு சந்தேகம் அந்தப் பையனுக்குள் எழுகிறது.

அதை ஆசிரியரிடமும் கேட்கிறான் அருண். அந்த சந்தேகத்தை எந்த ஆசிரியராலும் தீர்த்து வைக்க முடியவில்லை. கணிதவியல்படி அது அப்படித்தான் இருக்கும் என்பதை அருணாலும் ஏற்க முடியவில்லை.

தன்னுடைய சந்தேகம் பூர்த்தியாகும்வரையில் தான் கடிதப் பாடத்தை படிக்க மாட்டேன் என்று சொல்லி வேண்டுமென்றே அந்த கணிதப் பாடத்தை புறக்கணித்ததில் ஜீரோ மதிப்பெண்ணை வாங்கிக் கொண்டிருக்கிறான் அருண் தேவ்.

புதிய கணித ஆசிரியராக வருவோமா பிரியதர்ஷி புலி கொண்டால் அருண் தேவியின் இந்தக் கணித சந்தேக டார்ச்சர் தாங்க முடியாமல் அவனை வேறு வகையாக பழி வாங்க ஆரம்பிக்கிறார். அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றுகிறார். வகுப்பறைக்குள் இருந்தால் நெஞ்சில் ஏறி நிற்க வைத்து தண்டனை கொடுக்கிறார்.

ஆனாலும் அருணை பள்ளியில் இருந்தே வெளியேற்றிவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு சிறுவன் அருண் தேவும் ஆசிரியர் பிரியதர்ஷி புலி கொண்டாவுக்கு எதிராக சில செயல்களை செய்துவிட பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறான் மாணவன் அருண் தேவ்.

இப்பொழுது பெற்றோர்களான விஸ்வ தேவுக்கும், நிவேதா தாமஸூக்கும் இடையில் இந்த மகனால் பெரும் சண்டைகள், சச்சரவுகளும் எழுகின்றன. இதோடு இவன் படித்தது போதும். இவனை பேசாமல் வேதம் கற்க அனுப்பிவிடலாம் என்று அப்பா நினைக்கிறார். ஆனால் அம்மா நிவேதாவோ தன் பையன் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார்.

எனவே அதே பள்ளியில் அதை ஆசிரியரை வைத்து எப்படியாவது அருண் தேவுக்கு பாடத்தை கற்றுக் கொடுத்து அவனை ஜஸ்ட் பாஸாக 35 மார்க்காவது எடுக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார் அம்மா நிவேதா தாமஸ். அதில் அவர் ஜெயித்தாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை திரைக்கதை.

கணக்கு என்றாலே இன்றைக்கும் பல மாணவர்களுக்கு எட்டாக்கனிதான். புரியாத புதிர். அந்த அளவுக்கு கணிதம் இப்பொழுதும் பல மாணவர்களை பாடாய்படுத்துகிறது.

அப்படியொரு கணித பாடத்தில் இருக்கும் தன்னுடைய சந்தேகத்துக்கு யாரும் நான் திருப்தி ஆகும் வரையிலும் பதிலளிக்கவில்லை என்பதால் அதைப் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் காட்டும் அந்த சிறுவனாக அருண் தேவ் அட்டகாசமாக நடித்திருக்கிறான்.

பள்ளியில் ஆசிரியர்களிடம் சரிக்கு சரியாக பேசி தன்னுடைய சந்தேகத்தை கிளப்பி அவர்கள் டென்ஷன் ஆக்கும்போதும், பள்ளியில் மாணவர்களிடம் இதேபோல் பேசி பழகி தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் ஆக்ரோஷமாகப் பேசும் காட்சிகளிலும் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் அவனைப் பெரிதும் ரசிக்க முடிகிறது.

அதே சமயம் வீட்டிலும் அவன் ஒரு அம்மா பிள்ளையாக.. அம்மாவான நிவேதாவிடம்  பேசும் பேச்சு, அடப்பாவமே… இவ்ளோ நல்ல பையனா இருக்கானே என்று ஒரு சொல்லவும் வைத்திருக்கிறது.

படத்தின் கதை அருண் தேவையே சுற்றி சுற்றி வந்தாலும் அம்மா கதாபாத்திரத்தில் சரஸ்வதி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிவேதா தாமஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

அவருடைய அந்த அழகான வட்டமான முகம் ஒரு பிராமண பெண்ணுக்குரிய அடையாளமாகிவிட்டது. படத்தின் மொத்தக் கதையும் அவரே நகர்த்தி சென்று இருக்கிறார். ஒரு மனைவியாக, தாயாக தனது கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ். பல காட்சிகளில் இவருடைய சில, பல முக பாவனைகளும் அவருடைய அட்டகாசமான நடிப்பும் ஸ்கிரீனை விட்டு நம் கண்களை அகற்ற முடியாமல் செய்திருக்கிறது.

அருண் தேவின் அப்பாவாக நடித்திருக்கும் விஷ்வ தேவ், ஒரு சராசரி தந்தையாக தன் மகன் மீது ஒரு கோவமாக இருந்தாலும், மகனுக்கு ஒரு நல்வழி காட்ட விரும்பும் அப்பாவாக தன் நடிப்பை மென்மையாகவும், கண்டிப்பான அப்பாவாகவும் காட்டியிருக்கிறார்.

அவனுக்கு பிடிக்காத விஷயத்தை ஏன் அவனிடம் திணிக்க வேண்டும் என்று சொல்லி வேத பாடசாலையில் சேர்க்க நினைத்து அது முடியாத்தால் மனைவி மீது கோபம் கொண்டு பேசாமல் இருக்கும் தோரணையும், கடைசியில் உண்மை தெரிந்து, தன் மனைவியிடம் மறைமுகமாக மன்னிப்பு கேட்டு சேருகின்ற இடத்திலும் ரொம்பவும் அழகாக தன்னுடைய திரை நடிப்பை காண்பித்திருக்கிறார்.

வில்லனைப் போன்ற கதாப்பாத்திரத்தில் கணித ஆசிரியராக நடித்திருக்கும் பிரியதர்ஷி பள்ளிகொண்ட தன்னுடைய வில்லத்தனத்தை முகத்தில் காட்டாமல் தன்னுடைய வார்த்தைகளாலேயே அருண் தேவின் மனதை சிதைக்கின்ற அளவுக்கு தன்னுடைய வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.

பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பாக்யராஜ், தான் எப்போதும் நடுநிலைமையோடு இருக்க வேண்டிய கட்டாயத்தை படத்தில் காண்பித்திருக்கிறார். சரஸ்வதியின் சகோதரராக நடித்த கிருஷ்ண தேஜி பல கட்சிகளில் வேகவேகமான தன்னுடைய வசனத்தின் மூலம் கொஞ்சம் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

கிரண் வேடத்தில் நடித்திருக்கும் சிறுமி அனன்யா, அருண் தேவை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி,  அன்பு காட்டி, பாசம் காட்டி, நேசம் காட்டி அவனை வழிக்குக் கொண்டு வர நினைக்கும் அவருடைய நடிப்பும் பாராட்டுக்குரியது.

“உன் பையன் படிக்க வேண்டும் என்றால், நீ முதலில் படித்து அவனுக்கு சொல்லிக் கொடுத்தால் நிச்சயமாக அவன் படித்து முடித்து விடுவான்” என்று சொல்லி நிவேதா தமாஸூக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து அவளை ஒரு ஆசிரியர் ஆக்கி அந்தக் குடும்பத்திற்கு நல்வழி காட்டும் கௌதமியின் கேரக்டரும், நடிப்பும் சுவாரசியமானது.

ஒளிப்பதிவாளர் நிகெத் மூவி தன் கேமராவில் அந்த வீட்டை கொத்து புரோட்டாவே போட்டு இருக்கிறார். அந்த சின்னஞ்சிறிய வீட்டில் அவ்வளவு காட்சிகளை எப்படித்தான் எடுத்தார்களோ தெரியவில்லை.. ஆனால் காட்சிகளின் கோணங்கள் ரிப்பீட் ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரொம்பவும் அழகாக அந்த வீட்டை வடிவமைத்து கொடுத்திருக்கும் கலை இயக்குநருக்கும் நம்முடைய பாராட்டுக்கள். இசையில் பாடல்கள் நம்மை கவர்கின்றது. பின்னணி இசையும் மிகவும் சன்னமாக ஒலிக்க வைத்து வசனங்களையும், காட்சிகளையும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் இசையமைப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.

படத் தொகுப்பாளர் பிரசன்னா இதுவொரு குடும்பக் கதை என்பதால் அந்த குடும்பக் கதைக்கு ஏற்றபடியான படத் தொகுப்பினை செய்து ரசிக்க வைத்திருக்கிறார்.

உண்மையில் இத்திரைப்படம் இந்திய சினிமாவிலேயே மிக மிக வித்தியாசமான ஒரு கதை. இப்படியான கதையில் எந்தவொரு திரைப்படமும் இதற்கு முன் வந்ததாக நமக்கு தெரியவில்லை.

கணித பாடத்தின் மீது நம்முடைய மாணவர்களை கொண்டிருக்கும் ஒரு ஒவ்வாமையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே இது மாதிரியான ஒரு கதையை தயார் செய்து கொடுத்திருக்கும் கதாசிரியர்கள் பிரசாந்த் நந்தகிருஷ்ணரின் அமராவதி ஆகிய மூன்று பேருக்கும் நமது பாராட்டுக்கள்.

மாணவர்கள் பள்ளியில் கேட்கின்ற கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு தகுந்த முறையில் அவர்கள் திருப்தியாகும் வகையில் பதில் அளிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை.

ஆசிரியர்கள் தன்னுடைய அந்தக் கடமையிலிருந்து விலகினால் அது அந்த மாணவனை மட்டுமல்ல.. அந்த வகுப்பறையை மட்டுமல்ல… அது வெளியில் இருக்கின்ற சமூகத்தையும் பாதிக்கும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள். இதை நிச்சயமாக நாமும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

ஒரு ஆசிரியர் நினைத்தால்.. ஒரு மாணவனை மட்டுமல்ல.. ஒரு ஊரல்ல.. ஒரு சமூகத்தையே திருத்தி விடலாம்.

கணிதம் அப்படிங்கிற ஒரு பாடத்தின் மீதான ஒரு பயமுறுத்தலை அது இல்லாமல் செய்து விட்டால் நிச்சயமாக மாணவர்கள் கணிதத்தில் மிகப் பெரிய திறமைசாலிகளாக வருவார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

நிச்சயமாக இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும். அதிலும் உங்களுடைய குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் நிச்சயமாக அவர்களை அழைத்துக் கொண்டு சென்று இந்தப் படத்தை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RATING : 4 / 5

Our Score