‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘சாட்டை’, ‘அப்பா’, சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி – தம்பி ராமையா கூட்டணியில் இந்தப் படம் உருவாகிறது. ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியிருக்கிறார்.
கதையின் நாயகனாக தம்பி ராமையா நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய வேடங்களில் பழ.கருப்பையா, ஆடுகளம் நரேன், பிரவின்.G, இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், அருள்தாஸ், டேனியல் அனி போப் விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – சுரேஷ் காமாட்சி, திரைக்கதை, இயக்கம் – உமாபதி ராமையா, கதை, வசனம், பாடல்கள், இசை – தம்பி ராமையா, பின்னணி இசை – தினேஷ், ஒளிப்பதிவு – கேதர்நாத், கோபிநாத், படத் தொகுப்பு – R.சுதர்ஷன், கலை இயக்கம் – உமேஷ் ஜே.குமார், சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, நடன இயக்கம் – பிருந்தா, சாண்டி, ஆடை வடிவமைப்பு – நவதேவி, தயாரிப்பு மேற்பார்வை – ஜெகதீஷ் ஜெகன், பிரவின்.G, Ksk செல்வா மற்றும் மாலிக், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்திதான் உருவாகியுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு நமக்குள் ஏற்படும்.
2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தையே ஒலுக்கி எடுத்த ஒரு கொலை சம்பவத்தின் பின்னணிதான் இந்தப் படத்தின் கதை திரைக்கதை.
சென்னை மற்றும் உலக நாடுகளில் மிகவும் பிரபலமான சரவண பவன் குழும ஹோட்டல்களை நிறுவியவரும், மிகப் பெரிய தொழிலதிபருமான ராஜகோபால் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமார் என்ற இளைஞரை தனது அடியாட்களை வைத்து கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடைசியாக சுப்ரீம் கோர்ட்டிலும் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தீர்ப்பு வந்த சில நாட்களிலேயே இவர் உயிரிழந்துவிட்டார். இவருடைய வாழ்க்கைக் கதைதான் இத்திரைப்படம்.
சமுத்திரக்கனி, ஆதரவற்றோருக்கும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்குமான ‘அன்னை மடி’ என்ற கருணை இல்லத்தை நடத்தி வருகிறார். ஒரு நாள், ரோட்டோரக் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் தம்பி ராமையாவை மீட்டு அழைத்து வந்து தனது கருணை இல்லத்தில் அடைக்கலம் தந்து பராமரிக்கிறார்.
அப்போது தம்பி ராமையா கையில் வைத்திருந்த துணி மூட்டையிலிருக்கும் ஒரு டைரியை எடுத்து படிக்கும் சமுத்திரக்கனிக்கு தம்பி ராமையாதான் தமிழகத்தின் மிகப் பெரிய தொழிலதிபரான முருகப்பன் என்று தெரிய வருகிறது. தம்பி ராமையா தற்போது ஒரு கொலை வழக்கில் சிக்கி போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியென்பதும் தெரிகிறது.
தம்பி ராமையா அந்த டைரியில் தனது வாழ்க்கைக் கதையை எழுதி வைத்திருக்கிறார். சமுத்திரக்கனி அதைப் படிக்கப் படிக்க பெரும் அதிர்ச்சியாகிறார். சமுத்திரக்கனியின் பார்வையிலிருந்தே இந்தப் படத்தின் கதையும் விரிகிறது.
முருகப்பன் என்ற தம்பி ராமையா தமிழகத்தில் மிகப் பிரபலமான தொழிலதிபர். கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கிறார். பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் தனியார் பஸ், கல்லூரிகள் மற்றும் கட்டிட நிறுவனங்கள் பலவற்றையும் நடத்தி வருகிறார்.
அவருடைய மனைவி தெய்வானை என்ற தீபா. இவருக்கு ஒரே ஒரு மகன். முருகப்பன் தீவிரமான முருக பக்தர். இப்போதுவரையிலும் ஒழுக்கமானவராக இருந்து வந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் இதுவரையில் இறங்காத துணிக் கடையில் தொழிலில் கால் பதிக்கிறார் முருகப்பன். அந்த துணிக்கடையில் வேலை பார்க்கும் வெள்ளி மயில் என்ற ஒரு இளம் வயது பெண் முருகப்பனை கவர்கிறார்.
தன்னுடைய மனைவி தன்னை தொடர்ந்து ஊதாசீனப்படுத்துவதாலும், தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பதாலும், தன்னை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருப்பதாலும் குடும்ப வாழ்க்கையில் ஒரு நிம்மதி இழந்த நிலையில் இருக்கிறார் முருகப்பன்.
இந்த நேரத்தில் வள்ளி மயிலின் நட்பும், சிநேகமும் முருகப்பருக்குக் கிடைக்க இந்த வள்ளிக்கும் தாலியைக் கட்டி அவரை இரண்டாம்தாரமாக்கி அவருக்கும் தனியாக 3 கோடி ரூபாயில் வீடு வாங்கி கொடுத்து அந்த வீட்டில் இவரும் செட்டில் ஆகிறார்.
இந்த இரண்டாவது மனைவியுடன் முருகப்பரின் வாழ்க்கை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது மூன்றாவதாக ஒரு குடும்பமே பிளான் செய்து முருகப்பரை கவிழ்க்கிறார்கள்.
ரேஷ்மா தன்னுடைய மகளான விசாகாவை, முருகப்பரிடம் காட்டி அவரை மடக்குகிறார். இந்தக் குடும்பத்துக்காக முருகப்பர் ஈசிஆர் ரோட்டில் ஒரு மிகப் பெரிய பங்களாவை லீசுக்கு எடுத்துக் கொடுக்கிறார். மேலும் அந்த வீட்டில் தன் மகளை தினமும் வந்து சந்தித்து போகும் ஏற்பாட்டையும் செய்து தருகிறார் விசாகாவின் தாயான ரேஷ்மா.
முருகப்பரின் குடும்பத்தில் நடக்கின்ற இந்த குழப்படியும் அவர் அத்துமீறிய இந்த நிகழ்வுகளும் அவருடைய தொழிலையும் பாதிக்கிறது. அதை சமயம் அப்போதைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் இவருடைய தொழிலை அபகரிக்கும் நோக்கத்தோடு டார்ச்சர் செய்கிறார்கள். அவர்களது மிரட்டலுக்கு பயப்படாமல் அவர்களுக்கு அடிபணிய மறுக்கிறார் முருகப்பர்.
இந்த நேரத்தில் விசாகா ஒரு ஜிம் டிரெயினரை காதலித்து கல்யாணம் செய்துகொள்ள இது முருகப்பருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது இந்தக் கோபத்தின் விளைவாக அந்த ஜிம் டிரெயினர் கொல்லப்பட.. பழி முருகப்பர் மீது விழுகிறது. முருகப்பர் கைதாகிறார். ஜெயிலுக்குப் போகிறார்.
இதையடுத்து முருகப்பரின் குடும்பம் என்ன ஆனது… அவருடைய தொழில் சாம்ராஜ்யம் என்ன ஆனது.. உண்மையில் அந்த ஜிம் டிரெயினரை கொலை செய்தது யார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
படத்திற்கு கதை, வசனம் எழுதி பாடல்களையும் எழுதி இசையும் அமைத்திருக்கும் தம்பி ராமையாவுக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். இந்தப் படத்தில் அவருடைய நடிப்புக்கு நிச்சயமாக பல விருதுகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முருகப்பராக நடித்திருக்கும் தம்பி ராமையாவின் நடிப்பை பற்றி நாம் சொல்லித் தரத் தேவையில்லை. தமிழ் சினிமாவில் இன்றைக்கு இருக்கும் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் அவரும் ஒருவர். இந்தப் படத்தில் தனது அற்புதமான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
அதிலும் கோடான கோடிகளில் புரண்டு கொண்டிருந்தவர்… செல்வத்தில் திளைத்துக் கொண்டிருந்தவர்… ஒரு மன நலம் பாதித்து, பைத்தியக்காரனாகி, பிச்சைக்காரன் வேடத்தில் குப்பைக் கூளங்களில் கொட்டப்பட்டிருக்கும் சாப்பாட்டை எடுத்து சாப்பிடக் கூடிய அளவுக்கு இருப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. இந்தப் பரிதாபத்தை வரவழைக்கும் அளவுக்கு அந்தப் பிச்சைக்காரன் தோற்றத்தில் சிறப்பாக நடித்துள்ளார் தம்பி ராமையா.
மூச்சுக்கு மூச்சு, முருகா முருகா என்று சொல்லிக் கொண்டு முருகன் அருளால் மட்டுமே தான் இந்த அளவுக்கு உயர்ந்திருந்தாலும், தன்னுடைய உழைப்பு மட்டுமே தன்னை உயர்த்தி இருக்கிறது என்பதை சொல்லி சொல்லி பெருமைபடும் காட்சிகளெல்லாம் படம் பார்க்கின்ற புதிய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த கோட் வேர்டாக இருக்கும்.
தன் மனைவி தன்னை உதாசீனப்படுத்துவதை ஏற்க முடியாமல் தவிப்பதும் முருகனிடம் புலம்புவதும் எந்த ஒரு தவறான செயல்களுக்கு தான் துணை போக மாட்டேன். முருகன் தன்னுள் இருந்து தன்னை இயக்குகிறான் என்று புலம்பும்போது அவருக்குள் இருக்கின்ற அந்த நேர்மையின் திறனும், பக்தியும் தெளிவாகத் தெரிகிறது.
அதற்குப் பிறகு தானே சிற்றின்பத்தில் விழுந்து 2, 3 என்று மனைவிகளை பிடித்துக் கொண்டு அவர்களுடன் சல்லாபக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் இன்றைய யூத் நடிகர்களுக்கு சவாலே விட்டிருக்கிறார்.
அதிலும் மூன்றாவது காதலியுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். பாடல் காட்சிகள் அவர் ஆடுகின்ற ஆட்டம் நிச்சயம் இன்றைய இளைய கதாநாயகர்களுக்குப் பொறாமையைக் கூட்டியிருக்கும்.
இத்தனைக்கும் இவருடைய சொந்த மகன்தான் படத்தை இயக்கியுள்ளார். தன்னுடைய தகப்பனாகவே இருந்தாலும் மிக அழகாக அவரிடம் இருந்து ஒரு மன்மத ராசா வேலையை வெளிக் கொண்டிருந்திருக்கிறார் இயக்குநர்.
மற்ற நடிகர்களில் சமுத்திரக்கனி கவனிக்க வைத்திருக்கிறார். அவ்வப்பொழுது சமுத்திரக்கனி அந்தப் புத்தகத்தை படித்துவிட்டு நமக்குக் கதையை சொல்கிறார். அவர் கதையை சொல்லச் சொல்ல படமும் விரிகிறது .அந்த வகையில் சமுத்திரக்கனி முதல் கட்சியிலிருந்து கடைசி வரையில் நம் உடனையே பயணிக்கிறார் அதிலும் கடைசியாக அவர் பேசுகின்ற வசனங்கள்தான் இந்தப் படத்தின் உயிர் நாடி என்றே சொல்லலாம்.
“பிள்ளைகள் தப்பு செய்து பெற்றோர்கள் அதை மன்னித்தால் அது நியாயம். ஆனால் அதே சமயம் பெற்றோர்கள் தவறு செய்து பிள்ளைகள் அதை மன்னித்தால் அது தியாகம். ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்தத் தியாகத்தைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்” என்று இந்தப் படத்தின் மூலமாக நமக்குச் சொல்கிறார் சமுத்திரக்கனி. நிச்சயம் படம் பார்க்கும் அத்தனை பேரும் தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது.
தன்னுடைய கணவர் எப்போது வேண்டுமானால் தன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணின் பின்னால் போய்விடலாம் என்ற சந்தேகத்துடன் குத்திக் குத்தி காட்டி திட்டிக் கொண்டேயிருக்கும் மனைவி தெய்வானை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா வசனம் பேசியே கொல்கிறார்.
இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் சுபா என்ற வள்ளி மயில் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். முருகப்பரைப் பற்றி தனது கணவரிடம் போற்றிப் புகழ்ந்து சொல்லிக் கொண்டேயிருந்துவிட்டு கடைசியில் தன் கணவரை வைத்தே முருகப்பரிடம் வந்து சேர்வதெல்லாம் செம காமெடி.
மூன்றாவது நாயகியாக நடித்த ஸ்வேதாதான் நடனம், பாட்டு, ரொமான்ஸ் மற்றும் அனைத்திலுமே ஒரு கை தேர்ந்த வித்தைக்காரியாக நடித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் போதுமான அளவுக்கு கிக்கை ஏற்றியிருக்கிறார்.
வாலிப வயோதிகளை கவரும் வண்ணம் ரேஷ்மாவை மிக அழகான ஆண்டியாகவும் காட்டி ஒரு பக்கம் ஸ்கிரீனிலிருந்து நம்முடைய கண்களை எடுக்கவிடாமல் சதி செய்து இருக்கிறார் இயக்குநர்.
ஜிம் டிரெயினராக நடித்திருக்கும் கிரிஷூக்கு பொருத்தமான கேரக்டரை கொடுத்துள்ளனர். ஸ்வேதாவுடனான காதல் காட்சிகளில் நிஜமாகவே கச்சிதமானப் பொருத்தமான காதலர்போல் தோன்றுகிறார். தம்பி ராமையாவின் வக்கீலாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில காட்சிகளில் கம்பீரமாக வசனம் பேசி நடித்திருக்கிறார். வெல்கம் டூ இண்டஸ்ட்ரீ..!
“ஆத்தாளும், மகளும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். எனக்கு வீட்டில் இருக்க இடமும் சாப்பிடுவதற்கு மிச்சம் கொடுத்தால் போதும்” என்ற எண்ணத்தில் எதற்கும் பயன்படாத ஹஸ்பண்டாக நடித்திருக்கும் பிச்சைக்காரன் மூர்த்தியின் கதாப்பாத்திரமும் சிரிக்க வைக்கிறது.
தம்பி ராமையாவின் கைத்தடிகளாக வரும் வெற்றிக் குமரன், ஆண்ட்ரூஸ், மாலிக் மற்றும் பலரும் அந்தந்த கேரக்டர்களுக்கான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கும் கேதார்நாத், கோபிநாத் இருவருமே மிகச் சிறந்த ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்கள். மீடியம் பட்ஜெட் படம் என்றாலும் அதில் எந்தவிதமான ஒரு சின்ன குறைகூட இல்லாமல் பாடல் காட்சிகளைகூட மிக அழகாக படமாக்கி நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.
ரொமான்ஸ் பாடலான ரவுண்ட் தி கிளாக் இந்த வருடத்தின் மிகச் சிறந்த ரொமான்ஸ் பாடல் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது, அதே போல் சோக பாடலான ஆண்டவனே.. ஆண்டவனே.. பாடல் நம் மனதைத் தொடும் வகையில் நம்முடைய காதுகளில் நுழையும் அளவுக்கு, மிக அழகான குரலில் நம் மனதைத் தொடுகிறது.
கலை இயக்குநர்களான வைரபாலன், வீரசமர் என்ற இரண்டு தாதாக்களின் கை வண்ணத்தில் காட்சிகள் ஒவ்வொன்றுமே மிகப் பிரமாண்டமான அளவுக்கு நமக்கு கண்கட்டு வித்தையாக கட்டப்பட்டிருக்கின்றன. அதிலும் தம்பி ராமையாவின் அலுவலகம் மற்றும் அவருடைய வீடுகள் அனைத்துமே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடனப் பயிற்சி அளித்திருக்கும், பிருந்தாவுக்கும், சாண்டிக்கும் தனியாக சால்வை போர்த்தி பாராட்ட வேண்டும். குறிப்பாக சாண்டிக்கு.. அந்த ரவுண்ட் தி கிளாக் பாடலில் தெலுங்கு பாலையாவின் ஸ்டெப்ஸ்களை போல தம்பி ராமையாவுக்கு வைத்திருக்கும் நடன அசைவுகள் சூப்பர்ப்..! எப்படி வடிவமைத்தார் என்று தெரியவில்லை. இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ இருந்தால் அதை உடனேயே வெளியிட்டால் படத்திற்கு மிகச் சிறந்த விளம்பரமாக இருக்கும்.
இன்றைக்கு இந்தியா முழுவதுமே… ஏன்… உலகம் முழுவதுமே பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்தில் எழுவதற்கு காரணம்… குடும்பத்தில் ஆணை, பெண்ணோ.. பெற்றோர்களில் கணவனோ, மனைவியோ தங்களுடைய குடும்ப உறவை மீறி வெளியில் உறவு வைத்துக் கொள்வதுதான்.
இப்படி உறவு வைத்துக் கொள்வது என்பது ஏன்? எதனால்? என்பது அந்த தம்பதிகளுக்கு மட்டுமே தெரியும். உண்மையான பிரச்சினையை வெளிப்படையாகப் பேசி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், அந்த வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ஒரே குடும்பத்திற்குள் நிம்மதியாக வாழலாம்.
மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் எல்லாம் கடைசியாக ஒரு பெண்ணாசையால் வீழ்த்த கதையெல்லாம் உலக வரலாறுகளில் நிறையவே உண்டு. அந்த வரலாறில் ஒன்றாக இந்த முருகப்பரின் கதையையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் நடந்த கதையிலிருந்து இந்தப் படம் அப்படியே தலைகீழாக மாற்றி சொல்லப்பட்டிருப்பதால், உண்மைக் கதை இப்படியும் இருந்திருக்கலாமோ என்று சொல்லும் அளவுக்கு யோசிக்க வைக்கிறது..!
சில, பல லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும், இந்தப் படம் நிச்சயமாக பார்வையாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
RATING : 3.5 / 5









