full screen background image

‘ஹிட் லிஸ்ட்’ – சினிமா விமர்சனம்

‘ஹிட் லிஸ்ட்’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர்  கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். கிராண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ஜி.சி., ரமேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரான விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், கருடா ராம், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் : சூர்யகதிர் காக்கல்லர், கே.கார்த்திகேயன், இசை : சி.சத்யா, ஒளிப்பதிவு – கே.ராம்சரண், படத் தொகுப்பு : ஜான் ஆபிரகாம், திரைக்கதை, வசனம் – சூர்யகதிர் காக்கல்லர், கதை : எஸ்.தேவராஜ், கலை : அருண்சங்கர் துரை, சண்டைப் பயிற்சி : விக்கி – ஃபீனிக்ஸ் பிரபு, பாடல்கள் : கார்த்திக் நேத்தா, ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மி நாராயணன்.ஏ.எஸ், ஆடை வடிவமைப்பு : கவிதா.ஜே, ஆடைகள் : வி.மூர்த்தி, ஒப்பனை : கோதண்டபாணி, படங்கள் : விஜய், விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக், தயாரிப்பு நிர்வாகி : ஜே.வி.பாரதி ராஜா, பத்திரிக்கை தொடர்பு : ரியாஸ்.K.அஹ்மத்.

ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நாயகனின் அம்மாவையும், தங்கையையும் ஒரு மர்ம மனிதன் கடத்திச் செல்கிறான். தான் சொல்லும் வேலைகளையெல்லாம் செய்தால் மட்டுமே அம்மா, தங்கையைவிட முடியும் என்கிறான் கடத்தல்காரன்.

போலீஸுக்கு செல்கிறான் நாயகன். போலீஸ் உதவி கமிஷனரான சரத்குமார் தனிப் படைகளை அமைத்து அவர்களைத் தேடி வருகிறார். அதற்குள்ளாக உடனடியாக தனக்காக ஒரு கொலையை செய்யாவிட்டால் நாயகனின் அம்மா, தங்கையை கொலை செய்யப் போவதாக கடத்தல்காரன் மிரட்ட.. வேறு வழியில்லாமல் அவன் சொன்னதுபோலவே காவல்துறையின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் மிகப் பெரிய ரெளடியான கருடா ராமை படுகொலை செய்கிறான் நாயகன்.

இந்த வழக்கில் நாயகன் கைதாகி விசாரணையில் இருக்கும்போதே அடுத்த அஸைன்மெண்ட்டைத் தருகிறான் முகமூடி  மனிதன். இந்த முறையும் இன்னொருவரை கொலை செய்யும்படி சொல்ல நாயகன், போலீஸ் பார்வையில் இருந்து தப்பித்து ஓடுகிறான்.

இதன் பின் என்னவானது.. இரண்டாவதாகவும் கொலை செய்தானா.. யார் அந்த மர்ம மனிதன்.. அவனுக்கும் கொலை செய்யப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு.. முகமூடி மனிதனுக்கும் நாயகனுக்கும் என்ன தொடர்பு.. நாயகனின் அம்மாவும், தங்கையும் மீட்கப்பட்டார்களா.. இல்லையா.. போலீஸ் என்ன செய்த்து.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

தனது முதல் படத்திலேயே தனது சக்திக்கு மீறியா கதாப்பாத்திரத்தில் நடித்துக் காண்பித்திருக்கும் நாயகன் விஜய் கனிஷ்காவின் தைரியத்திற்கு முதற்கண் நமது பாராட்டுக்கள்.

இதுதான் அவரது முதல் படம் என்பதால் அவரது நடிப்பைப் பற்றி விமர்சிப்பது நாகரீகமல்ல என்பதால் விமர்சிப்பைத் தவிர்த்துவிட்டு நிறைவாக அவர் செய்திருக்கும் நடிப்பைப் பாராட்டுவோம்.

கோபம், இயலாமை, விரக்தி, வருத்தம், ஏமாற்றம் என்று அனைத்து வகையான உணர்வுகளையும் தன் முகத்தில் காட்டி நடித்திருக்கிறார் கனிஷ்கா. சண்டை காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் ஈடுபாடும், முழு அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.

நாயகன் விஜய் கனிஷ்கா அடுத்தடுத்தப் படங்களில் காதல், ரொமான்ஸ் என்று வித்தியாசம் காட்டி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்திழுத்து திரையுலகத்தில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

போலீஸ் உதவி கமிஷனரான சரத்குமார் அடக்கமாக நடித்து அசத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அந்த முகமூடி மனிதர் யார் என்பதை அவர் சொல்லும்போது அந்த அதிர்ச்சியை நம்மை உணர வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார் சரத்குமார்.

கொள்ளைக்கார மருத்துவராக நடித்திருக்கும் கெளதம் மேனன் கூடுதலாக சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறார். பாவப்பட்ட பெண் மருத்துவராக நடித்திருக்கும் ஸ்முருதி வெங்கட் தன்னுடைய இயல்பான நடிப்பினால் அந்தக் கேரக்டரையும், படம் சொல்லும் நீதியையும் நிலை நாட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

ரவுடிக் கூட்டத்தின் தலைவனாக கருடா ராம், அம்மாவாக சித்தாரா, தங்கையாக அபி நட்சத்திரா என்று மேலும் பலரும் கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்துள்ளனர்.

ராம்சரணின் ஒளிப்பதிவில் இரவு, பகல் காட்சிகள் என்று படம் முழுவதும் மாறி, மாறி காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். சண்டை இயக்குநரின் திறமையான இயக்கத்தினால் அனைத்து சண்டை காட்சிகளும் அபாரம் என்று சொல்லுமளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கேற்ற வகையில் படத்தொகுப்பும் தந்திரமான வகையிலேயே அமைந்துள்ளது.

சி.சத்யாவின் இசையில் பாடலும், மெட்டும் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் சத்யா.

அறிமுக இயக்குநர்கள் இருவரும் வித்தியாசமான கதை, திரைக்கதை, இயக்கத்தைக் கொடுக்க நினைத்து, இப்படியொரு யாருமே நினைத்துப் பார்க்காத படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

பழிக்குப் பழி வாங்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இப்படியொரு கொடூர வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமா இயக்குநர்களே… இந்தப் பழி வாங்குதலுக்கு அம்மாவும், தங்கையும் ஒப்புக் கொண்டார்கள் என்பதே நம்ப முடியாத கதைதான்.

எடுத்தாச்சு. பார்த்தாச்சு. விமர்சனம் செஞ்சாச்சு என்ற ரீதியிலேயே இந்தப் படத்தை முடிக்க வேண்டியிருப்பது கொஞ்சம் வருத்தத்தைத் தருகிறது. எப்படியிருந்தாலும் முதல் பட நாயகனாக விஜய் கனிஷ்கா தனது வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். இதில் மாற்றுக் கருத்தில்லை..!

அடுத்தடுத்தப் படங்களில் வித்தியாசத்தைக் காட்டி அவர் தமிழ்த் திரையுலகத்தில் மேலும் முன்னேற வாழ்த்துகிறோம்..!

Our Score