வைத்தியலிங்கம் பிலிம் கார்டன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பழனிவேல் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் ஜீவன் ஹீரோவாக நடித்துள்ளார். அப்பா ஜீவன்(மாணிக்கவேல்), மகன் ஜீவன்(சரவணன்), மல்லிகா ஷெராவத்(மங்கம்மா தேவி), ரித்திகா சென்(ராதிகா), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா(நாகமணி), வடிவுடையான்(காளி), சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, ‘பருத்தி வீரன்‘ சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான், ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சண்முகம், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், நடன இயக்கம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு – பண்ணை இளங்கோவன், தயாரிப்பு – ஏ.பழனிவேல், பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் துவங்கிய கதையை நிகழ் காலத்தில் முடிவதுபோல எடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியை ஆண்டு வரும் ராணி மங்கம்மா தேவி. அவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை ஜனித்த ஜோதிடர் குழந்தைக்கு நாக தோஷம் இருப்பதால் குழந்தைக்கும், ராணி மங்கம்மாதேவிக்கும் சர்ப்பம் தீண்டலால் சாவு ஏற்படும் என்று உறுதியாய் சொல்கிறார்.
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத ராணி, இதனால் கோபம் அடைந்து ஜோதிடரை சிறை வைத்த கையோடு அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார்.
படை வீரர்களும் பாம்புகளை விரட்டி, விரட்டி கொலை செய்கிறார்கள். இருந்தும் அதிலிருந்து ஒரு பாம்பு மட்டும் தப்பித்து வந்து ராணி மங்கம்மா தேவியை கொன்று விடுகிறது.
ராணி மங்கம்மா தேவியின் மகள் இளவரசி நாகமணிக்கும், இதேபோல நாகத்தால் ஆபத்து உள்ளது என்பதை நம்பும் இளவரசியின் தந்தை மகளை அழைத்துக் கொண்டு நியூஸிலாந்துக்கு தப்பியோடுகிறார்.
இதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனைக்குள் இருப்பதாகவும், அந்த அரண்மனைக்கு அத்துமீறி சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை எனவும் மக்களால் பேசப்படுகிறது. இதனால் யாருமே இல்லாத அந்த அரண்மனை, தடை செய்யப்பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பல வருடங்கள் கழித்து இளவரசி நாகமணி தனது தந்தையுடன் நாடு திரும்புகிறார். அரண்மனைக்குள் காலடி எடுத்து வைக்கும் இளவரசி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களைக் கட்டித் தரப் போவதாக அறிவிக்கிறார்.
ஆனால் இது நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே அரண்மனைக்குள் இளவரசி நாகமணியும், அவரது தந்தையும் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இப்போது ராணியின் ஆவி இருப்பதாக நம்பப்படும் அந்த அரண்மனையைச் சுற்றி உள்ள மர்மங்களை விசாரிக்க திறமையான போலீஸ் அதிகாரியான மாணிக்கவேல் என்ற ஜீவனை, போலீஸ் கமிஷனரான காளி நியமிக்கிறார்.
இதே நேரம் போலீஸ் அதிகாரி மாணிக்கவேலின் மகனான சரவணன் என்ற ஜீவன் ஒரு கொலை குற்றத்திற்காக கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார். தன் மகன் நிரபராதி என்பதை அறியும் மாணிக்கவேல் அவனை ஜாமீனில் எடுக்கிறார்.
அடுத்து தனது தந்தை அரண்மனைக்குள் போகப் போவதை அறியும் மகன் சரவணன், தந்தையை ஏமாற்றி தனது காதலி மூலம் அவரைக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு, அவருக்கு பதிலாக தானே அந்த அரண்மனைக்குள் செல்கிறார்.
தன்னுடைய நண்பர்களுடன் அரண்மனைக்குள் நுழையும் சரவணன் எதிர்ப்படும் நாகங்களை சமாளித்து பல தடைகளைத் தாண்டி தேடுதல் வேட்டையை நடத்துகிறார்.
அப்போது பாம்பு கடித்து இறந்துவிட்டதாக வெளியுலகத்தால் நம்பப்படும் இளவரசி நாகமணி, அரண்மனையில் இருக்கும் பாதாள அறையில் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்.
இளவரசி நாகமணி சரவணனிடம், அந்த அரண்மனைக்குள் நடக்கும் மர்மமான விஷயங்களையும், தங்களைச் சுற்றி நடக்கும் சதி வேலைகளையும் சரவணனிடம் சொல்லித் தன்னைக் காப்பாற்றுபடி சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து அதே அரண்மனைக்குள் வாழும் 60 அடி நீளமுள்ள கொடூர அமேஸான் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பாம்பிடமிருந்து இளவரசியும், சரவணனும் எப்படித் தப்பினார்கள்…? உண்மையில் அந்த அரண்மனைக்குள் நடப்பது என்ன..? இளவரசியைக் கட்டிப் போட்டது யார்..? இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்..? என்பதுதான் மீதிக் கதை.
அப்பா மாணிக்கவேல் மற்றும் மகன் சரவணன் என இரண்டு கதாபாத்திரங்களில் ஜீவன் நடித்துள்ளார். மகனைவிட அப்பா ஜீவன் தனது கதாப்பாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்தி உள்ளார். இருவரின் மேக்கப்பும் குறைவாக இருப்பதாலும், ஒளிப்பதிவின் தரமும் குறைவாக இருப்பதால் ஜீவன் நடித்த படங்களிலேயே அவருடைய தோற்றம் கேவலமாக இருப்பது இந்தப் படத்தில்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
நடிப்பென்று பார்த்தால் நடிப்புக்குத் தனியாக ஸ்கோப் இல்லாத காட்சிகளே படம் முழுவதும் விரவியிருப்பதால் ஜீவன் பெரிதாக நடிப்புக்கு மெனக்கெடவில்லை. இயல்பாக வந்து போயிருக்கிறார் ஜீவன்.
இந்தப் படத்திற்கு எதற்காக மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்தார்கள் என்று தெரியவில்லை. இருக்கும் காட்சிகளிலும் கோப ஆவேசத்தில் கத்திக் கொண்டேதான் இருக்கிறார் மல்லிகா. எந்த கவன ஈர்ப்பும் இல்லை.
ரித்திகா சென் மகன் ஜீவனின் காதலி ராதிகாவாக காதலனின் துப்பறியும் வேலைக்குத் துணை நின்று கடைசியில் பரிதாபமாக உயிரைவிடும் கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தின் இயக்குநரான வடிவுடையான் போலீஸ் கமிஷனராக ‘காளி’ என்ற கதாப்பாத்திரத்தில் சைக்கோ, சாடிஸ்ட்டாக நடித்துள்ளார். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் இந்தப் படத்திற்கு எதற்கு என்றுதான் தெரியவில்லை. வேறொரு நடிகரை நடிக்க வைத்திருந்தாலாவது, படத்திற்குக் கூடுதலாக கவனமாவது கிடைத்திருக்கும்.
மேலும் போலீஸ் அதிகாரி சுமன், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன், யாஷிகா ஆனந்த், பருத்தி வீரன் சரவணன், ரமேஷ் கண்ணா என்று முக்கிய நடிகர், நடிகைகளும் வந்து போயுள்ளனர். யாருக்குமே அழுத்தமான, நடிப்புத் திறமையைக் காட்டும்படியான காட்சிகளே இல்லாததால் அனைத்தும் வீணான நிலைமைதான்.
நடிகர், நடிகைகள்தான் இப்படியென்றால் தொழில் நுட்பம் அதைவிட மோசம். இது போன்ற மிஸ்டரி, சஸ்பென்ஸ். திரில்லர், ராஜா காலத்துக் கதைகளில் இருக்க வேண்டிய கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு இதில் மொத்தமாக மிஸ்ஸிங். இரவு நேரக் காட்சிகளில் மட்டுமே கொஞ்சமேனும் கவரும் வகையில் லைட்டிங் செட் செய்து படப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அம்ரிஷ் தன்னிடம் உள்ள அத்தனை டிரம்ஸ்களையும் வாசித்துவிட்டார் போலிருக்கிறது. அதிரடியில்லாத காட்சிகளுக்குக்கூட அதிரடியாக பின்னணி இசை அமைத்துக் காதை கிழித்திருக்கிறார்.
பாம்புகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிஜி மகா மோசம். பட்ஜெட் பற்றாக்குறை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இது எல்லாவற்றையும்கூட முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ரசிக்கும் வகையிலும், எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையிலும் திரைக்கதையை அமைக்காமல் ஏதோ வழ, வழ.. கொழ.. கொழ என்று உப்புச் சப்பில்லாமல் திரைக்கதையை அமைத்து, நாடகத் தன்மையுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வடிவுடையான்.
யூ ஆர் எ ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ டைரக்டர் வடிவுடையான்..?









