full screen background image

வித்தைக்காரன் – திரைப்பட விமர்சனம்

வித்தைக்காரன் – திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தை White Carpet Films நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி தயாரித்துள்ளார்.

காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக தற்போது வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – K.விஜய் பாண்டி, எழுத்து, இயக்கம் – வெங்கி, ஒளிப்பதிவு – யுவ கார்த்திக், இசை – வி.பி.ஆர்., படத் தொகுப்பு – அருள் E.சித்தார்த், கலை இயக்கம் – G.துரைராஜ், சண்டைப் பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்(AIM).

ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடி திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி.

இந்தப் படத்தை இயக்கி இருக்கும் அறிமுக இயக்குநரான வெங்கி, லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

சிறு வயதில் தன் குடும்பம் சிலரால் சிதைந்து போனதால், “ஏமாற்றுவது தவறில்லை.. ஏமாறுவதுதான் தவறு” என்ற கொள்கையுடன் வாழத் துவங்கும் இரட்டை நாயகர்களில் ஒருவரான சதீஷ், இப்போது ஒரு மேஜிக் செய்யும் நபராக வளர்ந்திருக்கிறார்.

ஆனந்த்ராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதனன் என்ற மூன்று தாதாக்களும் ஒரு காலத்தில் ஒரு சேட்டிடம் வேலை செய்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் சேட்டை போட்டுத் தள்ளிவிட்டுப் பழியை சதீஷின் அப்பா மீது போட்டு அவரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள்.

இப்போது இந்த மூன்று பேரையும் ஒரே நேரத்தில் பழி வாங்கத் துடிக்கிறார் சதீஷ். அதற்காக மூன்று பேரிடமும், மூன்றுவிதமாக உதவி செய்வதாகச் சொல்லி பேசி அவர்களை ஒரே இடத்துக்கு வரவழைத்து ஏமாற்ற நினைக்கிறார்.

25 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் வரப் போகுது. அதை நாம் தட்டிப் பறிப்போம் என்று மூன்று குழுவினரிடமும் ஆசை காட்டி அவர்களை விமான நிலையத்திற்கு வரவழைத்து சட்ட விரோத செயல்களை செய்ய வைத்து தான் மட்டும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க நினைக்கிறார் சதீஷ்.

இதை அவர் செய்து முடித்தாரா..? இல்லையா..? அந்த வைரக்கற்கள் கடைசியாக யார் கைகளுக்குப் போய் சேர்ந்த்து..? சதீஷ் என்னவானார்..? என்பதுதான் இந்த ‘வித்தைக்காரன்’ படத்தின் திரைக்கதை.

ரொம்பவும் சின்னக் கதைதான் என்பதால் இதை திரைக்கதையில் மாற்றி, மாற்றிப் பேசி ஏமாற்றுவதையே நகைச்சுவை வசனங்களாலும், காட்சிகளாலும் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

நாயகன் சதீஷ் இதுவொரு காமெடி படம் என்பதோடு அவரும் ஒரு காமெடியன் என்பதாலும் காமெடிக்கு என்னவிதமான நடிப்பு தேவையோ அதை மட்டும் காண்பித்திருக்கிறார். சென்டிமெண்ட், எமோஷன்ஸ் காட்சிகளையெல்லாம் வைத்து நம்மை சோதிக்காமல், நகைச்சுவையை மட்டும் அள்ளிவிடுவதுபோல நடித்துவிட்டு தப்பித்திருக்கிறார் சதீஷ்.

இவருக்கு அடுத்து வழக்கம்போல ஆனந்தராஜ் அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார். அவரிடம் வேலை செய்யும் அவரது தம்பியான ஜப்பான் குமாரின் வாய் நீளத்தால் அவ்வப்போது ஆனந்த்ராஜ் படும் அவஸ்தைகள்தான் படு காமெடி..

தம்பியின் அழிச்சாட்டியம் தாங்க முடியாமல். “எங்க அப்பா ரெண்டு நாள்தான் நேபாளம் போனான்… அந்த கருமத்துக்காக உன்னை எல்லாம் வெச்சு நான் காப்பாத்த வேண்டி இருக்கு..!” என்று ஆனந்த்ராஜ் புலம்பும்போது தியேட்டரே அலறுகிறது..!

அதேபோல் சுப்பிரமணிய சிவாவும் அவரது அடியாட்களும் ஏர்போர்ட்டில் போலீஸில் சிக்கும்போது, “நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… எங்கள புடிக்கிறதை விட்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா..?” என்று நொந்து கொள்ளும்போதும் சிரிக்க வைத்துத் தொலைகிறார்கள்.

மதுசூதனன் கோஷ்டியில் இருக்கும் சாம்ஸ், அவ்வப்போது மையமாக கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். இந்த மூன்று கோஷ்டிகளும் ஏர்போர்ட் டாய்லெட்டில் வைத்து செய்யும் அலப்பறை செம!

நாயகி சிம்ரன் குப்தா முதலில் ஜர்னலிஸ்ட்டாக தலையை நீட்டுபவர் பிற்பாதியில் திடீரென்று உரிமையோடு சதீஷிடம் சண்டையிடுவதைப் பார்க்கும்போது நமக்கு எங்கிட்டோ உதைக்குதே என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை இருவருக்கும் இடையிலான காதல் போர்ஷன்களை படமாக்கிவிட்டு கடைசியில் கட் செய்துவிட்டார்களோ.. என்னவோ.. படத்தில் ஒட்டவே இல்லை இந்த ஹீரோயினின் கதாப்பாத்திரம்..!

மாரிமுத்துவும், ஜான் விஜய்யும் ஒரேயொரு காட்சியில் வந்து இயல்பாய் நடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

யுவகார்த்திக்கின் ஒளிப்பதிவு மீடியம் பட்ஜெட் படத்திற்கானது. ஏர்போர்ட்டின் வெளிப்புறக் காட்சிகளில் லைட்டிங்கையே  காணோமாப்பா..! விபிஆரின் இசையில் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

காமெடி படம் என்பதால் எதற்கும் மெனக்கெடாமல் சிரிப்பு வரும்போது சிரித்துவிட்டு போய்விடுங்கள். லாஜிக்கெல்லாம் பார்த்தால் சிரிப்பு வராது என்பது போலவே இந்தப் படத்தின் இயக்குநர் பல காட்சிகளை எழுதி, இயக்கியிருக்கிறார்.

சிச்சுவேஷன் காமெடியை இன்னும் அழுத்தமாக செய்திருந்தால் படமும் இன்னமும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும். இப்போது ஓரளவு படம் நெடுகிலும் அவ்வப்போது சிரிக்க வைத்து வெளியே அனுப்புகிறார்கள்.

RATING : 3 / 5

Our Score