இந்தப் படத்தை பீக்காக் ஆர்ட் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.கே.சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் ஆண்டனி ஜேயாக ரகுமான், டாக்டர் ஜாகீர் ராசாகானாக பரத், ஜானியாக சஞ்சனா திபு, டாக்டர் ஆலன் மோசஸாக பினோஜ் வில்லியா, டாக்டர் ஆசாத்தாக ராகுல் மாதவ், ஏ.சி.பி.செந்தில் குமாராக கோவிந்த் கிருஷ்ணா, எஸ்.ஐ. அபயாக டினிஜ், தேனாக விவியா சாந்த், மிலன் பாவாவாக வீர் ஆரியன், ஜேம்ஸாக தினேஷ் லம்பா, கீதாவாக சோனாலி சூடான், பாதிரியார் ஆபிரகாமாக டேரிஷ் சினாய், ஐ.ஜி. கிஷோராக டாம் ஸ்காட், சூரியாக பிஷால் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – சார்லஸ் ஜோஸப், ஒளிப்பதிவு – சினு சித்தார்த், இசை – தீபக் வாரியர், பின்னணி இசை – கோபி சுந்தர், பாடல்கள் – படத் தொகுப்பு – பாப்பன், சண்டை பயிற்சி இயக்கம் – தினேஷ் காசி, நடனப் பயிற்சி இயக்கம் – டேனி பவுல், பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹிட்லரின் உத்தரவின் பேரில் ‘HTW’ என்ற வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு அது மனிதர்களிடத்தில் செலுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அந்த வைரஸின் விளைவு மிகக் கொடூரமாக இருந்ததால்.. மனிதர்களை மனிதர்களே ‘சோம்பி’ என்ற மிருகவுணர்வு ஏற்பட்டு, கடித்துத் தின்று கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டதை அறிந்தார் ஹிட்லர்.
இதனை உலகப் போரில் பயன்படுத்தினால் இந்த வைரஸ் நம் வீரர்கள் மீதே பாயக் கூடும் என்பதை உணர்ந்த ஹிட்லர், இந்த வைரஸை உடலில் தாங்கியிருந்த சோதனை மனிதர்களை உயிரோடு எரித்துக் கொல்ல உத்தரவிட்டாராம். இதனாலேயே உலகம் இந்த வைரஸிலிருந்து தப்பிப் பிழைத்தது. இந்த வைரஸை மையப்படுத்திதான் இந்தப் படமும் உருவாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த சில கொலைகளைப் பற்றி ஆராய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய உளவுத் துறை அதிகாரியான ரகுமான் மணாலிக்கு வருகிறார். அங்கே அவர் வந்த சமயத்தில் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் உடல்களை அவசரமாக அடக்கம் செய்வதைத் தடுத்து அந்த உடல்களை வைத்து விசாரணையை துவங்குகிறார்.
ஓய்வு பெற்ற ராணுவ டாக்டரான ஆலன் மோசஸ் என்ற பினோஜ் வில்லியாவின் ஒரே மகளான ஜானி மலைப் பிரதேசத்தைச் சுற்றிப் பார்க்க செல்கையில் விபத்தில் சிக்குகிறார். இதையறிந்த பினோஜ் மகளைத் தேடி சென்று காப்பாற்றுகிறார். ஆனால் அங்கே ஏற்கெனவே இறந்த நிலையில்.. சதையெல்லாம் பிய்ந்து அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணத்தின் திசுக்கள், ஜானியிடம் ஒட்டிக் கொள்கின்றன.
அந்த இடத்தில் 2 ஆண் பிணங்களும் கிடைக்கின்றன. இவர்கள் ரொம்ப நாட்களாக இந்திய அரசால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்தான் என்பது தெரிந்தாலும் அவர்கள் பயோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிகிறார் ரகுமான்.
இதனாலேயே ஜானியை தனியே ஒரு வீட்டில் தங்க வைத்து அவருக்குச் சிகிச்சையளிக்க முடிவெடுத்து இதை அவருடைய அப்பாவான பினோஜிடமும் சொல்கிறார். பினோஜூம், தன் மகள் ஜானியுடன் தனியாக ஒரு வீட்டில் தங்கியிருந்து தனது மகளை தினமும் கண்காணித்து வருகிறார்.
இடையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கும் ரகுமான், இது இந்தியா மீது தீவிரவாதிகள் தொடுக்கவிருக்கும் ‘பயோ வார்’ என்பதை அறிந்து இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய முனைகிறார். இதில் ரகுமான் வெற்றி பெற்றாரா..? ஜானி உயிர் பிழைத்தாரா..? இந்தியா மீது பயோ வார் தொடுத்தவர்கள் யார்..? என்ற கேள்விக்கெல்லாம் விடைதான் இந்த ‘சமரா’ திரைப்படம்.
‘சமாரா’ என்பது இஸ்ரேலியர்களின் மொழியான ‘ஹீப்ரு’ மொழியில் ‘புரொடக்டர் ஆஃப் காட்’ என்பதை குறிக்கிறது. தமிழில் ‘போர் புரிய பிறந்தவன்’ என்று அர்த்தம் கொள்ளலாம். ஒரு நாட்டையே அழிக்க நினைக்கும் ஒரு போரைத் தடுத்து நிறுத்தும் ஒரு வீரனின் கதை, என்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களாம்.
துப்பறியும் போலீஸ் டிடெக்டிவ் கேரக்டர் என்றாலே ரகுமான்தான் என்று நினைக்கும் அளவுக்கு ‘துருவங்கள் 16’ படத்தில் இருந்து பல திரைப்படங்களில் தனது நடிப்பு வித்தையைக் காட்டியிருக்கிறார் ரகுமான். அவரது அபாரமான நடிப்புத் திறமையினால் தான் செய்த ஒவ்வொரு போலீஸ் கேரக்டரையும் மறக்க முடியாதபடிக்கு செய்திருக்கிறார் ரகுமான். இந்தப் படத்தில் இவர் ஏற்றிருக்கும் ‘ஆண்டனி’ கதாபாத்திரமும் படம் போலவே கடைசிவரையிலும் சஸ்பென்ஸாகவே தெரிகிறது.
தன்னுடைய ஸ்டைலான, கம்பீரமான நடை, உடை, பாவனையில் பார்த்தவுடனேயே கவர்ந்திழுப்பதைப் போல அவரது தோற்றமும் அமைந்திருப்பது அவரது பிளஸ் பாயிண்ட்டுதான். தன்னை அவமானப்படுத்துவதுபோல போலீஸ் அதிகாரிகள் பேசினாலும் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் அவர்களே பின்னாளில் “ஸார்” போட்டு அழைத்து பேசும் அளவுக்குத் தனது ஸ்டைலான ஆக்சன் காட்சிகளிலேயே நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ரகுமான்.
டாக்டர் ஆலன் மோசஸ் வேடத்தில் நடித்திருக்கும் பினோஜ் வில்யா தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் தழும்புகளுடனும், பார்ப்பதற்கே கொடூரமான தோற்றத்திலும் படம் நெடுகிலும் வந்து நம்மை உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார். இதற்காக 18 மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
மகள் மீதான தன் பாசத்தை கண்களால் மட்டுமே தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கும் இவரது நடிப்பும், படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம்.
பினோஜின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா தீபு அந்த அடல்ட்ரி வயதுக்கேற்ற நடிப்புடன் ஒரு மகளாக அப்பா மீது அவர் வைத்திருக்கும் பாசத்தில் நம்மையும் நெகிழ வைக்கிறார். முடிவில் இவருக்கு நேரும் அந்தக் கொடிய துயரத்தை நம்மாலேயே தாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு தனது நடிப்பில் நம்மைக் கவர்ந்திழுக்கிறார் சஞ்சனா.
நடிகர் பரத் ஒரு சின்னக் கதாப்பாத்திரம் என்றாலும் படத்திலேயே மிக ஆச்சரியமான டிவிஸ்ட் தரக் கூடிய கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அந்தக் கடைசி காட்சியில் படத்தின் 2-ம் பாகம் தொடரும் என்பதைப் போல இருப்பதால் நிச்சயமாக அடுத்தப் பாகத்தில் பரத்துதான் வில்லன் என்பது தெரிந்துவிட்டது.
மற்றைய கேரக்டர்களில் விலை மாதுவாக நடித்தவர், இன்னொரு பக்கம் தனது முதிர்ச்சியான நடிப்பினால் கவனம் ஈர்த்திருக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தின் பனி படர்ந்த மலைப் பகுதிகளின் அழகையும், மலை மீது இருக்கும் வீடுகளின் அழகியலையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சீனு சித்தார்த். குலுமணாலி, தர்மசாலா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது.
தீபக் வாரியரின் பாடல்களுக்கான இசை சுமார் ரகம்தான். ஆனால், கோபி சுந்தரின் பின்னணி இசை படத்துடனேயே பயணம் செய்து அடுத்தடுத்த டிவிஸ்ட்டுகளுக்கும், பயங்கரங்களுக்கும் நம் மனதை தயார் செய்கிறது.
ஆர்.ஜே.பாப்பனின் படத் தொகுப்புப் பணியும் சிறப்பு. ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசியின் சண்டை காட்சிகளில் ராக்கெட்டை ஏவி குற்றவாளியை பிடிக்கும்விதமும், ஓநாய் வேட்டையும், லாரியில் நடக்கும் சண்டை காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக ஒரு ஆங்கிலப் படம் பார்த்த அனுபவத்தை தரும் இந்தப் படத்தின் மிகப் பெரிய குறையே, அதீதமான ஆங்கில வசனங்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதுதான். அறிவியல் வார்த்தைகளையும், அதன் விளைவுகளையும் தமிழில் சொல்ல முடியாது என்றாலும் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழில் சப் டைட்டிலாவது போட்டிருந்தால் சி கிரேடு ரசிகர்களுக்கு இந்தக் கதை எளிதாகப் புரிய வாய்ப்பிருந்திருக்கும்.
‘துருவங்கள் 16’, ‘8 தோட்டாக்கள்’ போன்ற திரைப்படங்களை போல, திரைக்கதை அமைத்து எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் சார்லஸ் ஜோஸப்.
இந்த ‘சமாரா’ ஒரு புதிய உணர்வைத் தரும் படமாக அமைந்துள்ளது. குற்ற விசாரணை ஜானரில் தொடங்கும் இப்படம், ‘நான் – லீனியர்’ என்ற முறையில் முன், பின் காட்சிகளை வரிசைப்படுத்தி காட்டப்படும் மெத்தடில் இந்தப் படத்தின் திரைக்கதை வடிவைக்கப்பட்டுள்ளது.
முதல் பாதியில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகளாக திரைக்கதையில் அமைத்திருக்கும் இயக்குநர், பின் பாதியில் அனைத்துக் கதாப்பாத்திரங்களையும் ஒரே கோட்டில் ஒன்றிணைத்து படத்தை முடித்திருக்கிறார்.
துப்பாக்கி, வெடிகுண்டு, ராக்கெட்டுகளெல்லாம் இல்லாமல் இந்தியா மீது நைச்சியமாக நடக்கவிருந்த ‘பயோ வார்’ எனப்படும் ‘உயிரித் தாக்குதல் போர்’ பற்றிய புத்தம், புதிய கதையைச் சுவையான திரைக்கதை மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சார்லஸ் ஜோஸப்.
அதே சமயம் இப்படியொரு சஸ்பென்ஸ், ஆக்சன், திரில்லர் கதைக்குள் ஒரு பாசமான அப்பா – மகள் கதையையும் சேர்த்து வைத்துத் தந்திருக்கும் இயக்குநரின் திறமை நிச்சயம் பாராட்டத்தக்கது.
சமாரா – சபாஷ் போட வைத்திருக்கிறார்கள்..!
RATING : 3.5 / 5









