இந்தப் படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.கருணாமூர்த்தி தயாரித்துள்ளார்.
படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி, துஷ்யந்த், ரித்திகா சீனிவாஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – டிஜோ டாமி, இசை – ஜேக்ஸ் பெஜாய், படத்தொகுப்பு – நாத் சாரங், எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.
‘துருவங்கள் பதினாறு’, ‘மாபியா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் கார்த்திக் நரேனின் மூன்றாவது படம் இது.
மூன்று வித கதைகள்.. மூன்றுவித திரைக்கதைகள்.. இந்த மூன்றும் ஒரு புள்ளியில் ஒன்று சேரும் வித்தியாசமான திரையாக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
‘வெற்றி’ என்ற அதர்வா சினிமாவில் உதவி இயக்குநர். பட வாய்ப்பு தேடி தயாரிப்பாளர்களிடம் அலைந்து கொண்டிருக்கிறார். கிடைக்கவில்லை. ஒரு குறும் படமாவது எடுத்துத் தனது திறமையை வெளிக்காட்டுவோம் என்று நினைத்து குறும்படத்தை ஷூட் செய்கிறார்.
அந்தக் குறும்படத்தின் கதைப்படி இரவு நேரத்தில் ஒரு பெண்ணைக் காரில் கடத்திச் செல்கிறார்கள். இதை ஷூட் செய்யும்போது தற்செயலாக இதைப் பார்த்துவிடும் துஷ்யந்த் காணாமல் போயிருக்கும் தனது காதலியான அம்மு அபிராமியைத்தான் இவர்கள் கடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்.
அதே நேரம் வெற்றியின் அப்பாவான ‘செல்வம்’ என்ற சரத்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். லஞ்சப் பேர்வழி. தன்னிடம் ஒரு வழக்கில் சிக்கியிருக்கும் அமைச்சரின் மகனை விடுவிக்க, அவர்களிடமே லஞ்சத்தை வாங்கிக் கொண்டு விடுவிக்கிறார்.
இதனால் கோபமடையும் மந்திரியின் மகன் தனது அடியாட்களை அனுப்பி வெற்றியைத் தாக்கச் சொல்கிறார். அதே நேரம் தனது காதலியைத் தேடி தனது நண்பர்களுடன் வெற்றியைப் பார்க்க வருகிறான் துஷ்யந்த். இந்த மூன்றுவித கதை மாந்தர்களின் சந்திப்புக்குப் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
எப்போதும் போதை மருந்தை உட்கொண்டும், சிகரெட், தண்ணி என்றும் போதையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ‘வெற்றி’ என்ற கதாப்பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார். ஏமாற்றங்களைச் சந்திக்கும்போது அவர் காட்டும் ரியாக்ஷன் ஓகேதான். ஆனால் படம் நெடுகிலும் அதேபோன்று இருப்பதுதான் எரிச்சலூட்டுகிறது. இயக்குநர், அதர்வாவை சரிவர நடிக்க வைக்கவில்லை போலும்!
அதர்வாவுக்கும் சேர்த்து ரகுமானை சிறப்பான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். மகளைக் காணாமல் தவிக்கும் அப்பாவாகவும், குடிபோதையில் தான் செய்ததை நினைத்து மருகும்போது நம்மையும் சேர்த்து வருத்தப்பட வைக்கிறார். ஒரு மாணவனிடம் சக மாணவனாக அமர்ந்து பேசும் அளவுக்குத் திறமை படைத்தவர், குடியில் சிக்கி தனது வாழ்க்கையே முடித்துக் கொள்வது பரிதாபம்தான்..!
மந்திரியிடமே லஞ்சம் வாங்கும் தைரியசாலியான போலீஸ் அதிகாரி கேரக்டரை அசால்டாக நடித்துள்ளார். ஆனால் மகனிடம் தான் செய்த தவறுக்குக் கடைசியில் சப்பைக் கட்டுக் கட்டுவதெல்லாம் பம்மாத்து வேலை. அவர் மீது எந்தப் பரிதாபமும் வரவில்லை.
துஷ்யந்த் பள்ளி மாணவருக்கான தோற்றத்தில் பொருத்தமாக இல்லை என்றாலும் துடிப்பான காதலராக சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய நண்பர்களாக நடித்தவர்களும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
பள்ளி மாணவியாக நடித்திருக்கும் அம்மு அபிராமியின் அழகும், நடிப்பும் ஓகே. இன்னும் எத்தனை நாட்கள் பள்ளி மாணவி கேரக்டரை அம்மு அபிராமி நடிப்பார் என்று தெரியவில்லை.
டிஜோ டாமியின் ஒளிப்பதிவு மூன்றுவித கதைகளையும் படமாக்கியதில் வித்தியாசம் காட்டியிருக்கிறது. ஹைபர் லின்க் திரைக்கதையில் நான் லீனியர் டைப்பில் சொல்லப்பட்டிருக்கும் இதன் திரைக்கதையை ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பு நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறது. ஜேக்ஸ் பெஜாயின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.
ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால் அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளின் தொடர்புகளை நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
பொதுவாக மனிதர்களுக்குள் இருக்கும் இன்னொரு முகம் என்றேனும் ஒரு நாள் வெளிப்படும் என்பார்கள். அப்படித்தான் மூன்று மனிதர்களின் மற்றொரு முகங்கள் அந்த நாளில் தெரிய வருவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் இந்த ‘நிறங்கள் மூன்று’ திரைப்படமாக அமைந்துள்ளது.
குடி, போதை, சிகரெட் என்று எப்போதும் போதையிலேயே திரிபவன், சினிமாவில் இயக்குநராகி இந்த சமூகத்துக்கு என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறான் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு எப்போதுமே இருப்பதால், இந்தப் படத்தில் அதர்வா ஏற்றிருந்த ‘வெற்றி’ கதாப்பாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.
இதனாலேயே அந்த ஸ்கிரிப்ட் காணாமல் போனதால் எந்தவொரு எபெக்ட்டும் நமக்குள் ஏற்படாததால் இதன் தொடர்ச்சியாய் நடக்கும் சம்பவங்களும், கிளைமாக்ஸூம் நமக்கு மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக துவங்கி கடைசியில் அடுத்தப் பாகத்துக்கு இடம் கொடுத்து படத்தை எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராதவிதமாக முடித்திருக்கிறார் இயக்குநர். இதுவே படத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசவிடாமல் செய்துவிட்டது.
RATING : 3 / 5









