full screen background image

“S.R.பிரபாகரனை பார்த்தால் பொறாமையா இருக்கு” – இயக்குநர் அமீர் பாராட்டு..!

“S.R.பிரபாகரனை பார்த்தால் பொறாமையா இருக்கு” – இயக்குநர் அமீர் பாராட்டு..!
 
தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப் படைப்புகளை தந்து வரும் ZEE-5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது ‘செங்களம்’ இணையத் தொடர்.
 
இத்தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இயக்கம் மற்றும் திரைக்கதை – எஸ்.ஆர்.பிரபாகரன், தயாரிப்பு – அபினேஷ் இளங்கோவன்(Abi&Abi Entertainment PVT LTD) இணை தயாரிப்பு – இர்பான் மாலிக், இசை – தரண், படத் தொகுப்பு – பிஜு.V.டான் போஸ்கோ, ஒளிப்பதிவு – வெற்றிவேல் மகேந்திரன். 
 
இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
 
 
இசையமைப்பாளர் தரண் பேசும்போது, “தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் என் நண்பர், அவர்தான் என்னை இப்படைப்பிற்குள் கொண்டு வந்தார். மிகச் சிறந்த ஒரு படைப்பாக இது இருக்கும். இயக்குநர் என்னிடம் மிகச் சிறப்பான இசையை வாங்கியுள்ளார். நடிகர்கள் அனைவருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
 
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் பேசும்போது, “என்னுடைய முதல் வெப் சீரிஸ் இது. பிரபாகரன் சாருடன்தான் என்னுடைய முதல் படம் வெளியானது. அமீர் சாரின் ரசிகன் நான். அவர் என் விஷுவல் பார்த்துப் பாராட்டுவது மகிழ்ச்சி. செங்களம் ஒரு நல்ல படைப்பாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
 
படத் தொகுப்பாளர்  டான் பாஸ்கோ பேசும்போது, “எஸ்.ஆர்.பிரபாகரன் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தக் கதையைச் சொன்னார். அப்போது இதை இரண்டு பாகங்களாகப் படமாக எடுக்க நினைத்தோம். மிக, மிக கனமான கதை. மாபெரும் வெற்றியைப் பெறக் கூடிய கதை. எல்லோருக்கும் நல்ல பெயர் பெற்றுத் தரும் என்னும் நம்பிக்கை உள்ளது..” என்றார்.
 
 
நடிகர் டேனியல் பேசும்போது, “சென்னைத் தமிழ் பேசுகிறேன் என்று எனக்கு, கிராமத்துக் கதைகளில் வாய்ப்பே தருவதில்லை. ஆனால் இப்படைப்பின் இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என்று நம்புகிறேன். செங்களம் தமிழ்த் திரையில் மிகச் சிறந்த படைப்பாக இருக்கும்..” என்றார்.
 
நடிகர் பிரேம் பேசும்போது, “இந்த செங்களம் இணையத் தொடர் மிகப் பெரிய வெற்றிப் படைப்பாக இருக்கும். அனைத்து நடிகர்களும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபாகரனின் திரைக்கதை, வசனம் அட்டகாசமாக இருந்தது. அவர் நினைத்ததை உருவாக்கியுள்ளோம்..” என்றார். 
 
நடிகை ஷாலி பேசும்போது, “நான் ஓடிடியில் முதல்முறையாக நடித்திருக்கும் படைப்பு இது. இதில் கதைதான் நாயகன். இப்படைப்பில் வாய்ப்பளித்த இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் சார் மற்றும் படக் குழுவிற்கு, ZEE-5 நிறுவனத்திற்கு நன்றி. படைப்பைப் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி” என்றார்.
 
நடிகர் கண்ணன் பேசும்போது, “இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நீண்ட கால நண்பர். அவருடன் இப்போது நடிகராக இணைவேன் நினைக்கவில்லை. நான் ஒரு ஒளிப்பதிவாளர். இப்போது நடிகராக மாறியுள்ளேன் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.
 
நடிகை விஜி சந்திரசேகர் பேசும்போது, “ZEE-5 என்றாலே கண்ணை மூடிக் கொண்டு நடிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் அத்தனை சிறப்பாக உள்ளது. இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மிகச் சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். படக் குழுவினர் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் நல்லதொரு கதாப்பத்திரம் செய்துள்ளேன். பார்த்து ஆதரவளியுங்கள்…” என்றார்.
 
 
நடிகை வாணி போஜன் பேசும்போது, “ZEE-5 லிருந்து எந்தக் கதை வந்தாலும் நான் ஒப்புக் கொள்வேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை மட்டுமே தருகிறார்கள்.
 
ZEE-5 கௌஷிக்தான் முதலில் இந்தக் கதாபாத்திரம் பற்றி என்னிடம் சொன்னார். அதைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன். கதை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இடையில் என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் இதில் நடிக்கவில்லை என்று மறுத்தேன்.
 
ஆனால், எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும்போது நான் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் சாருக்கு நன்றி. செங்களம் படைப்பிற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.
 
 
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது, “அமீர் சாரை இரண்டு நாளுக்கு முன்புதான் இந்த விழாவுக்கு அழைத்தேன். அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில்தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன்.
 
கௌஷிக் சாரிடம் படத்திற்காக இந்தக் கதையைச் சொன்னபோது வெப் சீரிஸாக பண்ணலாம் என்றனர். எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். ZEE-5 நிறுவனத்தால்தான் இந்தப் படைப்பு உருவானது அவர்களுக்கு என் நன்றிகள்.
 
இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக் கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள்.
 
என் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப் பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர். விரைவில் உங்களுக்குத் திரையிடவுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி” என்றார்.
 
 
இயக்குநர் அமீர் வாழ்த்திப் பேசியபோது, “இந்தப் படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள்.
 
இந்த டிரெய்லரை பார்த்தபோது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே, அது நல்ல படைப்பாகத்தான் இருக்கும். அந்த வகையில் எஸ்.ஆர்.பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார்.
 
இந்த டிரெய்லரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசைதான் மிகச் சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ZEE-5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த ‘செங்களம்’ தொடரும் வெற்றிப் படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி..” என்றார்.
 
ZEE-5 வழங்கும் இந்த ‘செங்களம்’ இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது.
Our Score