full screen background image

கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்

கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் V.N.ரஞ்சித் குமார் தயாரித்துள்ளார்.

படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பிரசன்னா, பூமிகா, ஸ்ரீகாந்த், சதீஷ், மாரிமுத்து, கு.ஞானசம்பந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத் தொகுப்புப் பணியினைச் செய்திருக்கிறார்.

சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கியிருக்கிறார்.

பிறர் சொல்லிக் கேட்பதெல்லாம் பொய்தான். கண்ணால் காண்பதுதான் மெய் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் நமக்குச் சொல்லியிருக்கும் வாழ்க்கைக் குறிப்பு. இதில் இப்போது கண்ணால் காண்பதையும் நம்பாதே என்பதைச் சொல்லி அதற்குத் தகுதியான ஒரு கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆத்மிகாவின் வீட்டில் குடியேறுகிறார். பின்பு அவரையே காதலிக்கிறார்.  இந்தக் காதல் ஆத்மிகாவின் அப்பா ஞானசம்பந்தனுக்குத் தெரிய வர.. தன் வீட்டில் இருந்து உதயநிதியை வெளியேற்றுகிறார் ஞானசம்பந்தன்.

உடனடியாக ஒரே நாளில் வேறு வீடு தேடி அலைகிறார் உதயநிதி. தற்போது பிரசன்னா குடியிருந்து வரும் வீட்டில் ஒரு அறையில் தங்க வேண்டிய சூழல் உதயநிதிக்கு. புது வீடு கிடைத்த மகிழ்ச்சியில் உதயநிதி இருக்க.. இதற்காக குடிகாரர்களான பிரசன்னாவும், சதீஷூம் டாஸ்மாக்கில் ஐக்கியமாகுகிறார்கள்.

இந்த நேரத்தில் வெளியில் நின்று கொண்டிருந்த உதயநிதி தனது காரில் வந்து விபத்துக்குள்ளாகி நிற்கும் பூமிகாவைப் பார்க்கிறார். பூமிகா காரை ஓட்ட முடியாமல் தவித்ததால் அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் பூமிகா. மழை கொட்டிக் கொண்டிருப்பதால் இந்தக் காரை எடுத்துச் சென்றுவிட்டு மீண்டும் காலையில் வந்து வீட்டில் விடும்படி பூமிகா பெரிய மனது பண்ணி உதயநிதியிடம் காரை கொடுத்தனுப்புகிறார்.

மறுநாள் காலையில் காரை எடுக்க வரும் உதயநிதி அதே காரின் டிக்கியில் பூமிகாவின் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். போலீஸூக்கு போக இவர் தயங்கும் நேரத்தில் இடைமறிக்கும் பிரசன்னா போலீஸூக்குப் போனால் உன்னைத்தான் கொலைகாரன்னு சொல்வாங்க என்று சொல்லி உதயநிதியைத் திசை திருப்புகிறார்.

பூமிகாவின் சடலத்தை டிஸ்போஸ் செய்ய ஐடியா கொடுக்கிறார் பிரசன்னா.. இது பல்வேறு பிரச்சினைகளில் கொண்டு போய் முடிகிறது. இறுதியில் என்னவாகிறது.. பூமிகாவை கொலை செய்தது யார்.. பிரசன்னா ஏன் இத்தனை ஆர்வத்துடன் உதயநிதியை திசை திருப்புகிறார் என்பதற்கான விடைதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

உதயநிதி தான் நடிக்கும் கடைசிப் படம் இதுதான் என்று அறிவித்திருக்கிறார். அந்தப் பெருமைக்குரியதுதான் இத்திரைப்படம்.

உதயநிதியும் இதுவரையிலும் நடித்த படங்களில் என்ன நடிப்பைக் காண்பி்த்தாரோ அதைத்தான் இதிலும் காண்பித்திருக்கிறார். தேடுதல் வேட்டையில் நகரும் திரைப்படம் என்பதால் அதிகமாக நடிப்புக்கு வேலை வைக்காமல் ஓட வைப்பதிலேயே இயக்குநரும் குறியாய் இருந்திருப்பதால் உதநிதியிடம் நாமும் இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை.

ஆத்மிகாவின் அழகு பாடல் காட்சிகளில் தெறிக்கிறது. மாண்டேஜ் ஷாட்டுகளில் சின்ன சின்ன முக பாவனைகளில் ரசிக்க வைக்கிறார். பூமிகாவின் இரு வேட நடிப்பும் ஓகே என்றுதான் சொல்ல வேண்டும். பிரசன்னா தன் நடிப்பில் சஸ்பென்ஸை வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார். காந்த் இன்னொரு பக்கம் ஒரு தகுதியான ஒயிட் காலர் கிரிமினல் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

சில காட்சிகளே ஆனாலும் சென்றாயன் சம்பந்தப்பட்ட காட்சி மிக இயல்பாக படமாகியுள்ளது. சென்றாயன் அவரது நண்பர் சம்பந்தப்பட்ட காட்சி கவர்ந்திழுக்கிறது. இதை கடைசி காட்சியுடன் இணைத்திருப்பது இயக்குநர் திறமைக்கு ஒரு சான்றுதான். மாரிமுத்து தனது மகனின் உடலைப் பார்த்தவுடன் காட்டும் அதிர்ச்சியிலும், நடிப்பிலும் நமக்கு ஏமாற்றமே..!

படம் அதிகமாக இரவு நேரக் காட்சிகளிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. மழையும் சேர்ந்து கொள்ள ஒளிப்பதிவாளர் கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

சாமின் இசையில் பாடல் வரிகள் தெளிவாகக் காதில் கேட்டன. இதைவிடவும் பின்னணி இசையில் அடக்கி வாசித்து சஸ்பென்ஸையும், திரில்லிங்கையும் அனுபவிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பிரமாதமாக படத் தொகுப்பினை செய்திருக்கிறார். கொஞ்சம் மிஸ்ஸானாலும் குழப்பம் வரக் கூடிய நிலைமையில் முடிந்த அளவுக்கு கிரைம், திரில்லர் படத்திற்கேற்றவாறு படத்தை வெட்டி ஒட்டியிருக்கிறார்.

முதல் காட்சியில் இடம் பெறும் அந்த அனாதை இல்லத்தின் கதைதான் இந்தப் படத்தின் அடிநாதம். அதை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதில் நடித்திருக்கும் ஆதிராவின் சில நிமிட நடிப்பு கலர் டோனையும் மீறி நம்மை கவர்கிறது.

படத்தில் இணைப்புகளை மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர். படம் நெடுகிலும் சஸ்பென்ஸை கடைப்பிடித்து, திரில்லிங்கை கூட்டிக் குறைத்து, இயக்குதலில் ஒரு தவிப்பையும் கொடுத்து ரசிகர்களை கடைசிவரையிலும் டென்ஷனிலேயே வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனாலும் படத்தில் இடம் பெற்றிருக்கும் லாஜிக் எல்லை மீறல்கள் படத்தின் திரைக்கதையையே கேள்விக்குள்ளாக்குகிறது. காலையில் பார்த்த உடலை இரவில்தான் டிஸ்போஸ் செய்யவே வருகிறார்கள். அதுவரையிலும் காத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.

பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அந்தத் தெருவில் சொல்லி வைத்தாற்போல் ஒரு வீட்டில்கூட சிசிடிவி கேமிரா இல்லை என்று வசனத்தில் சொல்வது நம்பும்படியில்லை. அதேபோல் மேம்பாலத்தின் கீழ் நடக்கும் ஒரு பதைபதைக்கும் செயலை போலீஸார் அந்த ஸ்பாட்டுக்கே வந்து விசாரிக்கவில்லை என்றும், அந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளை சிசிடியவில் உதயநிதியும், பிரசன்னாவும் மட்டுமே கையாள்வதும் ஏற்க முடியாததுதான்.

இப்படியே பல லாஜிக் மீறல்களுடன் படம் வந்திருந்தாலும் இதையெல்லாம் படம் முடிந்த பின்புதான் யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இந்த இயக்குநரின் தில்லாலங்கடித்தனத்தை நாமும் பாராட்டுகிறோம்.

ஒரு சுவையான திரில்லிங் படத்தைக் காண விரும்புவர்கள் பார்க்க வேண்டிய படம் இது..!

RATING : 3.5 / 5

Our Score