பிரபல மலையாள இயக்குநரான பிரியதர்ஷன், நடிகை லிஸி தம்பதியரின் மகளான நடிகை கல்யாணி பிரியதர்தஷன் தனது தந்தை தன்னிடம் சொன்ன அட்வைஸைத்தான் இப்போதுவரையிலும் தான் பின்பற்றி வருவதாகச் சொல்கிறார்.
கல்யாணி இது குறித்து அளித்துள்ள பேட்டியில், “நான் அவ்வப்போது அப்பாவைப் பார்ப்பதற்காக அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படங்களின் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வேன். அப்போது நடிகர் மோகன்லால், சுரேஷ் கோபி போன்றோர் நடிப்பைக் கவனிப்பேன். நடிகை நஸ்ரியாவின் நடிப்பையும் ஒரு முறை நேரில் பார்த்தேன். அப்போதுதான் நானும் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. அவர்கள்தான் என்னை நடிப்புலகத்திற்கு வரும்படி தூண்டிவிட்டார்கள். நானும் நடிகையாகிவிட்டேன்.
முதலில் அகில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்தேன். பின்புதான் தமிழ், மலையாளம் என்று ரவுண்டு வந்து இப்போது 10 படங்கள்வரையிலும் முடித்திருக்கிறேன்.
நடிக்கப் போகும்போது அப்பா என்னிடம் சொன்னது.. “சிறந்த இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே செய்தாலே போதுமானது. தேர்ந்த நடிகையாக உருவாகிவிடலாம். இதற்குப் பயிற்சியெல்லாம் தேவையே இல்லை…” என்றார். அவர் சொன்னதைத்தான் அப்படியே இப்போதுவரையிலும் கடைப்பிடித்து வருகிறேன்.
நான் நடிக்கும் படங்களைப் பார்ப்பவர்கள் என்னுடைய நடிப்பைப் பாராட்டும்போதும், நடிப்புக்காக விருதுகளைப் பெறும்போதும் அப்பாவின் அறிவுரையில் இருந்த உண்மையை உணர்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.









