துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்புதான் இந்த “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம்.
கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார்
. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தூ சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும்.
இத்திரைப்படம் தமிழ்நாட்டில் ஏ.ஜி.எஸ் சினிமாஸ் மூலம் வெளியாகியுள்ளது.
உலக சினிமாவில் ‘சூப்பர் மேன்’, ‘சூப்பர் உமன்’ கதாப்பாத்திரங்களை கொண்ட திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருக்கின்றன.
இந்தியாவில் சூப்பர் மேன் என்கின்ற கதாபாத்திரத்தின் அடிப்படையில் சில படங்கள் வெளி வந்திருக்கின்றன. ஆனால் சூப்பர் உமன் என்கின்ற கதாபாத்திரத்தில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. ஆனால், இப்போது முதல்முறையாக இந்த திரைப்படம் அந்தக் கதாபாத்திரத்தின் அடிப்படையில் வெளிவந்துள்ளது.
போன ஜென்மத்தில் நடந்த பல பிரச்சனைகள் காரணமாக ‘சந்திரா’ என்ற இளம் பெண்ணுக்கு அசுர சக்தி கிடைத்திருக்கிறது. இந்தச் சக்தியை பயன்படுத்தி அவள் இப்பொழுதுவரையில் 150 வருடங்கள் உயிர் வாழலாமாம்.. எந்த ஒரு துப்பாக்கி குண்டும் அவளை துளைக்க முடியாது. மனிதர்களால் அவளை வெல்லவே முடியாது என்கின்ற மாதிரியான ஒரு கேரக்டர் ஸ்கெட்ச் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ‘சந்திரா’ என்ற சூப்பர் வுமன் கதாபாத்திரம்.
இந்த சந்திரா இப்போது பெங்களூருக்கு குடி பெயர்ந்திருக்கிறார். இதுவரையில் வேறொரு ஊரில் தனக்கு பாஸாக இருந்தவர் சொன்ன வேலையை செய்து முடித்த சந்திரா, இப்போது பெங்களூருக்கு குடி வருகிறார்.
அங்கு ஒரு சாதாரண ஹோட்டலில் வெயிட்டர் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவருடைய வீட்டுக்கு நேர் எதிர் பிளாட்டில் குடியிருக்கும் நாயகன் நஸ்லின், சந்திராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறான். சந்திராவிடம் தேவையில்லாமல் தானே நெருங்கி பழக நினைக்கிறான். அது ஒரு கட்டத்தில் கை கூடுகிறது.
ஆனால் சந்திராவின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசம் தென்படுவதை நஸ்லின் உணர்கிறான். நஸ்லின் உடன் அவனுடைய நண்பர்கள் வேணு, நைஜி இருவருமே அந்த ஒரே வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கும் நாச்சியப்ப கெளடா என்ற சாண்டி கொஞ்சம் முரட்டுத்தனமான நபராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கும் சந்திராவுக்கு இடையில் ஒரு மோதல் மற்றவர்களின் சூழ்ச்சியால் ஏற்படுகிறது.
அந்த மோதலினால் சந்திராவை எப்படியாவது பிடித்து விடலாம் என்று நினைக்கிறார் சாண்டி. ஆனால் சந்திராவோ அவ்வளவு எளிதாக சிக்குபவளாக இல்லை. அவள் தனக்கென்று ஒரு ரகசியத்தை வைத்திருப்பதை சாண்டியும் நஸ்லினும் உணர்கிறார்கள்.
இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த சூப்பர் உமன் படத்தின் திரைக்கதை.
யாருக்கும் கிடைக்காத பாக்கியமாக இந்தக் கதாபாத்திரம் கல்யாணி பிரியதர்ஷனுக்கு கிடைத்திருக்கிறது பல திரைப்படங்களில் சாதாரணமான நாயகியாக காதலிக்க விழையும் வசீகரமான முகத்தை கொண்ட கல்யாணி, இந்தப் படத்தில் படம் நெடுகிலும் ஒரு ரௌத்திரத்தை தன்னுடைய முகத்தில் காட்டுகிறார். சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
ரத்தம் சிந்தும் வகையில்தான் அவருடைய ஆக்சன்கள் அமைந்திருக்கின்றன. சண்டைக் காட்சிகளுக்கும் மேலாக ஒவ்வொரு முறையும் நஸ்லீனை அவர் காப்பாற்றும் போதும், வருகின்ற பிரச்சனைகளை தன்னுடைய சூப்பர் வுமன் சக்தியை கொண்டு அதை தடுத்தாலும் விதத்திலும் சூப்பர் மேன்களுக்கு இணையான சூப்பர் வுமனாக தன்னை நிலை நிறுத்தி காட்டியுள்ளார் கல்யாணி.
கல்யாணியின் காதலனாக வரும் நஸ்லின் சாதாரண ஒரு இளைஞனாக நம் கண்ணுக்கு தெரிகிறார். அவருக்குள் இருக்கும் ஒரு காதலே கல்யாணியை பின் தொடர வைக்கிறது. கல்யாணி பற்றி அவர் நண்பர்களிடம் எடுத்துரைக்கும் போதும் கல்யாணியின் சூப்பர் வுமன் சக்தியை நேரில் பார்க்கும்பொழுதும் அவருடைய நடிப்பும், துடிதுடிப்போம் நம்மால் உணர முடிகிறது.
ஒரு இறுக்கமான சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சாண்டி படம் முழுவதும் வித்தியாசமான ஒரு கேரக்டரில் அழுத்தமாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். அவருடைய அந்த ஸ்டைலான நடிப்பை நம்மை பெரிதும் கவர்கிறது.
இடையில் நிஜமான சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் தலையை கொடுக்கும் டொவினோ தாமஸும், தியேட்டர் விட்டு எல்லாரும் போய்க்கொண்டிருக்கும்போது திரையில் வரும் காட்சிகள் துல்கர் சல்மானும் ரசிகர்களை கவர்ந்து நிற்கிறார்கள்.
இனி அடுத்த பாகத்தில் துல்கரா, டொமினோவா… யார் இரண்டு பேர் இந்த கல்யாணியுடன் மோத போகிறார்கள் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவு அட்டகாசம், ஆசம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய கேமராவில் மொத்தக் காட்சிகளையும் பதிவாக்கி இருக்கிறார். கலை இயக்குநரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். காட்சிக்கு காட்சி அவருடைய கை வண்ணம்தான் படத்தை கவனிக்கவும் வைத்திருக்கிறது.
ஜாக்ஸ் விஜய்யின் இசையில் பின்னணி இசைதான் அசத்தல். அதுவும் சண்டை காட்சிகளில் சின்னதாக ஒலிக்கின்ற அந்த இசையும், ஒலி வடிவமைப்பும் கச்சிதம்.
பல்வேறு விதமான காட்சிகளை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்பதாக வடிவம் வைத்து மாற்றி கொடுத்திருக்கிறார் எடிட்டர் சாமான் சாக்கோ. சண்டை காட்சிகள் அனைத்தும் பிரமாதம். சிறப்பு. அதே போல் வி எஃப் எக்ஸ் காட்சிகளையும் அழகாக கிரியேட் செய்திருக்கிறார்கள். அந்த மிரட்டலான சண்டை காட்சிகளே இந்தப் படத்தை சூப்பர் வுமன் படமாகவே ஆக்கிவிட்டது.
சண்டை பயிற்சி இயக்குநரான யானிக் தான் வாங்கிய சம்பளத்துக்கு மேலாகவே உழைத்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இத்தனை கஷ்டமான சண்டைக் காட்சிகளை சூப்பர் வுமன் கல்யாணி எப்படி செய்து முடித்தார் என்று தெரியவில்லை. ஆனாலும் ஒவ்வொரு சண்டை காட்சியும், ஒவ்வொரு விதமாக இருந்து நம் கண்களை ஸ்கிரீனை அகல விடாமல் பார்த்துக் கொண்டுள்ளது.
சூப்பர் ஹீரோக்களின் படங்களில் எல்லாம் எப்போதும் பிரச்சனைகளை அவர் உருவாக்க மாட்டார். பிரச்சனைகள்தான் அவரைத் தேடி வரும். அது போலத்தான் இந்த சூப்பர் வுமன் சந்திராவையும் தேடி வருகின்ற பிரச்சனைகளை தன்னுடைய சக்தியை பயன்படுத்தி எப்படி அவர் சமாளிக்கிறார் சமாளித்தார் என்பதை இரண்டரை மணி நேர திரைப்படம் மிக அழகாக தொகுத்து வழங்கியுள்ளார்கள்.
படத்தின் இயக்குநரான டோமினிக் அருண், ஒரு பக்கம் சூப்பர் வுமன் கதாபாத்திரம், இன்னொரு பக்கம் சராசரி ஒரு எளிய இளைஞனின் காதல் கதை… அதன் பிறகு எதைப் பற்றியும் கவலைப்படாத போலீசாரின் மனித நேயமற்ற செயல்கள்… இந்த மூன்று பிரச்சனைகளுக்குள்ளாக தியேட்டரில் படம் பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் மனதை தூண்டிவிட்டு ஒரு உணர்ச்சிக் குவியலை நம் முன்னால் காட்டி இருக்கிறார். இதற்காகவே இயக்குநருக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த ‘லோகோ அத்தியாயம்-1 சந்திரா’ என்ற திரைப்படம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் தான். ஏனெனில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால், இப்பொழுதே இந்தப் படத்தை பார்த்து வைத்துக் கொள்வது நமக்கு நல்லது.
RATING : 3.5 / 5









