பிரபல இசை அமைப்பாளரும், ‘இசை ஞானி’ இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களை எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார்.
‘16 வயதினிலே’ படத்தில் இடம் பெற்ற ‘செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே’, ‘சோளம் விதைக்கையிலே..’ போன்ற பாடல்கள் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் . ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ‘பூவரசம் பூ பூத்தாச்சு’ பாடல், ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’ பாடல், ‘நிழல்கள்’ படத்தில் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ போன்ற புகழ் பெற்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.
ஒரு இசை அமைப்பாளராக, ‘ஒரு விடுகதை ஒரு தொடர் கதை’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’, ‘மௌன கீதங்கள்’, ‘வாழ்வே மாயம்’, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’, ‘என் தங்கச்சி படிச்சவ’ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணி புரிந்துள்ளார்.
ஆரம்பத்தில், 1979-ம் ஆண்டில் ‘புதிய வார்ப்புகள்’, 1980-களில் ‘பாமா ருக்மணி’ படங்களில் நடித்த நடிகர் பாக்யராஜிற்கு டப்பிங் குரல் கொடுத்தவரும் கங்கை அமரன்தான். இதன் பின்பு ஏழு படங்களில் பாடல்களைப் பாடியும் உள்ளார்.
சூப்பர் ஹிட் படமான ‘கோழி கூவுது’ படம் மூலம் டைரக்டராகவும் மாறினார். தொடர்ந்து, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘கரகாட்டக்காரன்’, ‘கும்பக்கரை தங்கையா’, ‘வில்லு பாட்டுக்காரன்’, ‘சின்னவர்’, ‘தெம்மாங்கு பாட்டுக்காரன்’ போன்ற ரிக்கார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்களை இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர், அவ்வப்போது திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். ‘கரகாட்டக்காரன்’, ‘இதயம்’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘சென்னை-28’, போன்ற படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களுமே ஹிட்டுதான்.
2013-க்கு பிறகு மேடை நிகழ்ச்சிகளில் மட்டுமே பவனி வந்து கொண்டிருந்த கங்கை அமரன் இப்போது மீண்டும் கேமிரா முன்பாக வந்துள்ளார். இப்போது ஒரு நடிகராக தனது பணியைத் துவக்கியிருக்கிறார் கங்கை அமரன்.

பிரபல இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் கங்கை அமரன். அருண் விஜய் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக கங்கை அமரன் நடித்துள்ளார்.
இந்தப் படப்பிடிப்பில் கங்கை அமரனோடு இமான் அண்ணாச்சியும், மூத்த நடிகர் ராஜேஷும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் மும்முரமாக நடந்து வருகிறது.