சில நாட்களுக்கு முன்னால் காலமான தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவுக்கு தெலுங்கு திரையுலகம் மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகமே அஞ்சலி தெரிவித்திருந்திருந்தது.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர்களில் ஒருவரான பாலையா என்கிற பாலகிருஷ்ணா, அஞ்சலி செலுத்த வராதது தெலுங்கு திரையுலகத்தினரை கொஞ்சம் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.. இப்போது தெலுங்குலகில் இதுதான் ஹாட் டாபிக்..
பாலகிருஷ்ணாவின் தந்தை என்.டி.ராமராவோடு சம காலத்தில் அவருக்குப் போட்டியாளராக இருந்தவர் நாகேஸ்வரராவ் மட்டுமே..! பாலகிருஷ்ணாவும் அக்கினேனி குடும்பத்தின் மீது நேசமாகத்தான் இருந்தார்.. பாலகிருஷ்ணாவுடன் பல படங்களில் நடித்திருக்கும் நாகேஸ்வரராவ், 2 வருடங்களுக்கு முன் வெளியான ஸ்ரீராமராஜ்யம் படத்திலும் பாலையாவுடன் நடித்திருந்தார்.. பாலகிருஷ்ணா, நாகேஸ்வர்ராவை ‘பபாய்’ என்ற செல்லப் பெயரில் அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவராகவும் இருந்திருக்கிறார்.
சமீப காலமாகத்தான் இரு குடும்பத்திற்கும் ஏதோ ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிவினையாகிவிட்டதாம்..! நாகேஸ்வரராவின் 90-வது பிறந்த தின விழாவை பாலகிருஷ்ணா புறக்கணிக்க.. பதிலுக்கு பாலகிருஷ்ணாவின் மகள் கல்யாண நிகழ்ச்சியை அக்கினேனி குடும்பமும் புறக்கணித்ததாம்.. அந்தக் கோபத்தில்தான் இது தொடர்ந்த்தா என்றெல்லாம் மீடியாக்கள் கேட்டு வருகின்றன. இருந்தாலும், பாலகிருஷ்ணாவின் மனைவி, மகள், மருமகன் மூவரும் அக்கினேனிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள்..!
ஆனால் இதற்கான காரணமாக வேறொன்றை பாலகிருஷ்ணாவின் நண்பர்களும், ரசிகர்களும் வேறொரு கதையைச் சொல்லி வருகிறார்கள்.. அதாகப்பட்டது இந்து கல்யாண சடங்குகளின் சட்டத்திட்டத்தின்படி ஒருவரின் மகள் அல்லது மகனின் திருமணம் நடந்த ஒரு ஆண்டிற்குள்ளாக, அக்குடும்பத்தின் தலைமகன் சாவு காரியம் உள்ளிட்ட கெட்டவைகளுக்கு போகக்கூடாது என்பது சாஸ்திரமாம்.. அதனால்தான் பாலகிருஷ்ணா வரவில்லை என்கிறார்கள் அவரது ரசிகர்கள்..! இதனாலேயே சமீபத்தில் காலமான தெலுங்கு நடிகர்கள் ஏ.வி.எஸ்., தர்மவரபு சுப்ரமணியம், ஸ்ரீஹரி, உதய்கிரண் ஆகியோரின் மரணத்தின்போதும் பாலகிருஷ்ணா வரவில்லை என்பதை ஆதாரமாகச் சொல்கிறார்கள்..!
ம்.. எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க பாருங்க..!?









