தமிழ்ச் சினிமா ஒரு பிரமிக்கத்தக்க தொழில்துறையாக வளர்ந்திருப்பதற்கு அடிப்படை காரணம்.. மக்களுக்கு சினிமா மீதிருக்கும் ஒரு கவர்ச்சி.. சினிமாவின் மூலம் கிடைக்கும் புகழை தேடும் மனசு.. தாங்களும் சினிமாவில் நுழைந்தால் ஏதாவது ஒரு வகையில் பிரபலமாகலாமே என்கிற ஆர்வம்.. இதில் நடிகர், நடிகைகள் இப்படித்தான் உள்ளே வருகிறார்கள்.. சிலர் மட்டுமே நடிப்பில் ஆர்வம். பலருக்கும் பணத்தின் மீது ஆர்வம்.
வருகின்றவர்கள் நடிப்புக்கு ஏற்றவாறு முகமோ, நடிப்பு குணமோ இல்லையென்றாலும், ஏதாவது ஒரு விதத்தில் கிளிக்காகிவிட்டால் ஏணியில் ஏறிவிடலாமே என்கிற எண்ணத்தில்தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தாங்களே படத்தைத் தயாரித்து தங்களுக்கு தோதான இயக்குநரைத் தேடிப் பிடித்து தன்னை மோல்டு செய்து அல்லது அடித்து, உதைத்தாவது நடிக்க வைத்துவிடுங்கள் என்பார்கள்.. அந்த இயக்குநருக்கும் டைட்டில் கார்டில் இயக்குநர் என்ற பெயருக்கு கீழே தன் பெயரை பார்க்க வேண்டும் என்று வரலாற்று ஆசையாக இருந்திருக்கும். பட்டென்று ஒத்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு.. தன்னிடம் இருக்கும் திறமைக்கேற்ப படத்தை முடித்துத் தருவார்.. இனி ஆண்டவன் விட்ட வழியென்பார்.. இந்த விடியும்வரை பேசு படமும் ஆண்டவன் விட்ட வழியில் ஓடி, ஓடி.. தற்போது காலை காட்சியாக சில இடங்களில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி..!
தயாரிப்பாளரின் மகன்தான் ஹீரோ என்பதால் வேறு எதையும் கேட்க முடியாது.. ஹீரோயின்கள் இவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் பிடித்துவிட்டாரகள். இசையமைப்பாளராக மோகன்ஜியை அறிமுகப்படுத்திவிட்டார்கள். இவர் ஒருவர்தான் இந்தப் படம் மூலமாக பேசப்படுவார் என்று நினைக்கிறேன்..! கதை நல்ல மெஸேஜை சொல்கிறது என்பது உண்மைதான்.. ஆனால் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்கின்றவகையிலான நடிகர், நடிகைகள் இல்லாததாலும், வந்தவர்களையும் சோதனைக்குள்ளாக்கி அனுப்பி வைக்கும் அளவுக்கு படத்தின் இயக்கம் சிறப்பாக இருந்ததினாலும் படம் பேசப்படவில்லை என்பது வருத்தமான செய்திதான்..!
ஹீரோ கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார். ஊரில் ஏற்கெனவே அவருக்காக ஒரு முறைப் பெண் தாலியுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். சென்னை வந்தவுடன் ஹீரோவுக்கு ஒரு மிஸ்டு கால் மூலமாக ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது.. ஊரில் இருக்கும் மாமா பெண்ணை மறந்துவிட்டு சிட்டி பெண்ணை காதலிக்கத் துவங்குகிறார் ஹீரோ.. முகமே தெரியாத அந்தப் பெண்ணுக்காக இரவு பகலாக கடலை போட்டு தன் வேலையைக் கூட விடுகிறார் ஹீரோ. இந்த விவரம் தெரிந்து ஊரில் இருக்கும் மாமா பெண் விஷத்தைக் குடித்துவிடுகிறார்.. தனது பிறந்த நாளுக்காக அழைத்தும் அந்த செல்போன் கடலை பொண்ணு வராமல் போக.. ஹீரோவுக்கு லேசுபாசாக மன நலம் பாதிக்கிறது.. ஒரு பாடல் காட்சியிலேயே முற்றிலும் மென்டலாகி பெண்கள் தனியாக நின்று சிரித்துப் பேசினாலே செல்போனை பிடுங்கி எறிந்து உடைக்கும் அளவுக்கு தீவிரமாகிறார்.. அந்த கடலை பொண்ணும் ஒரு நாள் வேறொரு விவகாரத்தில் தீவிரவாதியுடன் செல்போனில் பேசியதாக போலீஸில் மாட்டுகிறாள். இங்கே மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மெல்ல மெல்ல மீண்டு எழும் ஹீரோ திரும்பவும் பேக் டூ பெவிலியனாக மாமா பெண்ணிடமே அடைக்கலமாகிறார்.. இவ்வளவுதான் கதை..
இதில் நகரத்து பெண் கிராமத்து பெண்.. யார் இதில் பெஸ்ட்டு என்ற கோணமோ.. அல்லது செல்போனில் முகம் பார்க்காமல் சதா பேசிக் கொண்டேயிருக்கும் ஸாரி கடலை போட்டே வாழ்க்கையை ஓட்டுவது நல்லதா கெட்டதா என்ற கோணத்திலும் படத்தின் கதையை சொல்லியிருக்கலாம்.. எது என்று படம் பார்த்த எனக்கு புரியவில்லை. பார்க்காத நீங்கள் படித்துவிட்டாவது சொல்லுங்கள்..!
முகத்தை பார்த்து ஹீரோ என்று சொல்ல முடியாது. ஆனால் வேறு கேரக்டர்களில் நடிக்க தோதான பாடியுடன் இருக்கிறார்.. நடிப்பு.. ச்சே.. ச்சே.. வேண்டாம்.. நாம இத்தனை வருஷமா எழுதின சினிமா விமர்சனமெல்லாம் பொய்யாகிவிடும்..
ஹீரோயின்ஸ்.. கிராமத்துப் பொண்ணு வைதேகி.. கிராமத்துக்கே உரித்தான அழகு.. பாவாடை, தாவணியில் சிக்கென்று இருக்கிறார்.. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் நளினமும், முக பாவனைகளும் அபாரம்.. உடலின் வடிவமைப்பு அதைவிட அபாரம்.. என்ன.. நம்மூர் ஹீரோக்களுக்கு சுத்தமா பிடிக்காதே..? நன்மா என்ற இன்னொரு ஹீரோயின் சிட்டி பொண்ணு.. நல்ல வாகையாக இருக்கிறார்.. நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் பயன்படுத்திக் கொள்ளாமல்.. வெறுமனே உட்கார வைத்து பேசி பேசியே கடத்திவிட்டார்கள்.. கிரேன் மனோகரின் செல்போன் காமெடி கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது.. அவ்ளோதான்..!
படத்தின் இயக்கம்.. ம்ஹூம்.. சொன்னால் அடிக்க வருவீர்கள்.. அப்படியொரு அமெச்சூர்தனம்.. இதுதான் பெரிய மைனஸ் பாயிண்ட்.. ஒரேயொரு பிளஸ்.. பாடல்களும், இசையும், பாடல் காட்சிகளும்தான்.. ஏதாவது நீயாக என்ற பாடல் இந்த ஆண்டு மிக முக்கிய மெலடி பாடல்களில் ஒன்றாக டிவி சேனல்களில் வலம் வரும் என்று நினைக்கிறேன். படத்தைப் பார்க்காதவர்கள் யூடியூபில் இந்த பாடலையாவது பார்த்து பெருமூச்சு விடுங்கள்..!