‘யட்சன்’ திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 11-ம் தேதியன்று அத்திரைப்படத்தின் கதையும் புத்தக வடிவில் வெளியாகவுள்ளது.
யு டிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்த்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘யட்சன்.’ இதில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ஒம்பிரகாஷ், ஸ்டண்ட் – சில்வா. கலை இயக்கம் – லால்குடி இளையராஜா. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார்.
இது ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையில் எழுத்தாள இரட்டையர்கள் சுபா எழுதிய ‘யட்சன்’ என்கிற கதையின் சினிமா வடிவமாகும்.
படம் பற்றி பேசிய இயக்குநர் விஷ்ணுவர்த்தன், “இந்தப் படம் ’ஆரம்பம்’ படத்துக்கு முன்பேயே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்தவிகடனில் வந்த எழுத்தாளர்கள் சுபாவின் தொடர்கதைதான் இந்தப் படத்தில் திரை வடிவம் பெற்றுள்ளது.
இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது. இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போல பல அம்சங்களும் இருக்கும்..” என்றார்.
தற்போது இந்தப் படம் வெளியாகும் செப்டம்பர் 11-ம் தேதியே இந்தப் படத்தின் கதையான யட்சன் புத்தக வடிவிலும் வெளியிடப்படவுள்ளதாம்.
இது பற்றி பேசிய எழுத்தாளர் சுபா, “தனி ஒருவன்’ வெற்றியைத் தொடர்ந்து எங்களுடைய கதையில் உருவாகியிருக்கும் ‘யட்சன்’ திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருப்பதை உணர முடிகிறது.
தனி ஒருவன், யட்சன் இரண்டு படங்களுமே முற்றிலும் வெவ்வேறு களங்கள். அடிப்படையில் வேறுபட்ட கதைகள். இரண்டுக்கும் பொதுவான ஒரேயொரு அம்சம் பரபரப்பான சுவாரசியமான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான்.
மற்றபடி திரைக்கதை அமைப்பில் வெவ்வேறு அணுகுமுறைகள். இப்படி அடுத்தடுத்து வித்தியாசமாகச் செய்ய வேண்டிய சவால்தான் எங்களை தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ‘யட்சன்’ கதை புத்தக வடிவில் அதே செப்டம்பர் 11-ம் தேதியன்றே வெளியிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறோம். படமும், புத்தக விற்பனையும் போட்டி போட்டுக் கொண்டு உயரே செல்லும் என்று நம்புகிறோம்…” என்றார்.
படம் வெற்றி பெறவும், புத்தகம் அமோகமாக விற்பனையாகவும் நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!