தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் அக்டோபர் 18 என்று இன்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஷால் அணியினர் தங்களது தேர்தல் வேலையை தீவிரப்படுத்த உள்ளனர்.
விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். மேலும் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், ஜே.கே.ரித்தீஷ் போன்றோரும் நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடவுள்ளனர்.
இந்த நிலைமையில் வரும் 13-ம் தேதி விஷால், தன்னுடைய ஆதரவாளர்களின் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளாராம்.
தமிழகம் முழுவதும் இருந்து விஷால் அணிக்கு ஆதரவாக உள்ள நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் ஆச்சரியமான விஷயம்.. இந்த கூட்டம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதாகச் சொல்வதுதான்..!
இது உண்மையெனில், ஏற்கெனவே நடிகர் சங்க விவகாரத்தில் இதுவரையில் வெளிப்படையாக எந்தவித கருத்தையும் சொல்லாத ரஜினி இப்போது விஷால் அணியினரின் கூட்டத்திற்கு தனது கல்யாண மண்டபத்தில் நடித்துக் கொள்ள அனுமதித்திருப்பது விஷால் அணிக்கு ரஜினியும் ஆதரவாக உள்ளாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது..!
சில நாட்களுக்கு முன்பாக விஷால் அணியினர் ரஜினியை சந்தித்த பின்ப அடுத்த நாளே சரத்குமார் ரஜினியை சந்தித்து நடிகர் சங்க விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
இப்படி இரு தரப்பினருமே ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கும் நிலையில் இந்த பத்தாண்டு காலத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளில் நடிகர் சங்கத்தின் சார்பில் தனக்கு ஆதரவுக் கரம் கொடுத்திருக்கும் சரத்குமாரை ரஜினி பகைத்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் திரையுலகத்தினர்..!