தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது யு டிவி. இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து தயாரிக்கிறது.
படத்தின் பெயர் ‘யட்சன்’. சிவபெருமானின் பெயர். இந்தப் படத்தில் ஆர்யா-கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். மற்றும் கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஹீரோயின்கள் இன்னமும் தேர்வாகவில்லையாம்.
எழுத்தாளர்களான இரட்டையர்கள் சுபாவும், விஷ்ணுவர்த்தனும் இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்களாம். யுவன்சங்கர்ராஜா இசை. ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்யவிருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கம் செய்யவிருக்கிறார். இயக்கப் போவது விஷ்ணுவர்த்தன்.
“யட்சன் திரைப்படம் காதலும், காமெடியும் கலந்த படம். மிகச் சுவாரஸ்யமான ஒன்லைனை வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. ஆர்யாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் இதுவொரு புது மாதிரியான அடையாளத்தைக் கொடுக்கும். தமிழ்ச் சினிமாவுலகில் விஷ்ணுவர்த்தன் திறமைமிக்க ஒரு இயக்குநர். அவருடைய இயக்கத்தில் இந்தப் படம் நிச்சயமாக நூறு சதவிகிதம் பொழுது போக்கு படமாக அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்..” என்கிறார் யு டிவியின் தென்னக தலைமை வர்த்தக் தலைவர் திரு.தனஞ்செயன்.
யட்சன் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அடுத்த வாரம் ஷூட்டிங் துவங்குகிறது. வரும் 2015 பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.