எதையும் அடக்க முடியவில்லையென்றாலும் நாவையாவது அடக்குங்கள் என்றார் அய்யன் வள்ளுவன். அந்த ஒரு சொல்லை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.
கோபத்தில் சில வார்த்தைகளை உதிர்த்ததனால் ஏற்படும் விளைவுகளால் ஹீரோவும், அவரது நண்பர்களும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கதைக் கரு.
ஆதியும், அவரது மூன்று நண்பர்களும் கல்லூரியில் இணை பிரியாதவர்கள். கடைசி தேர்வையும் எழுதிவிட்டால் வீட்டார் பிரித்துவிடுவார்களே என்றெண்ணி கடைசி தேர்வைக்கூட புறக்கணித்துவிட்டு ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள்.
இதில் ஒரு நண்பனின் அப்பா பாராளுமன்ற உறுப்பினர். இன்னொரு நண்பனின் அப்பா போலீஸ் கமிஷனர். இன்னொருவன் பெரிய தொழிலதிபரின் மகன். ஆனால் ஆதி மட்டும் நடுத்தர வர்க்கம். ஆனாலும் நிக்கி கல்ரானியை பார்த்தவுடன் லவ்வாகிறார் ஆதி. அந்த காதலை எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார் நிக்கி.
புத்தாண்டு தினத்தின் இரவில் ஒரு ஹோட்டலில் ரிச்சா பலோட்டை செல்போனில் புகைப்படமெடுக்கிறான் எம்.பி.யின் மகன். இதைத் தேட்டிக் கேட்கிறான் அந்தப் பெண்ணின் காதலன். இந்த கசமுசா, வாய்ச் சண்டையில் இருந்து தாவி கைச்சண்டையாக மாறுகிறது.
போலீஸ் வருகிறது. எம்.பி.யின் மகன் என்றவுடன் ரிச்சா பலோட்டுக்கும், அவளது காதலனுக்கும் அடி விழுகிறது. எதிர்பாராத இந்த அதிர்ச்சியினால் ஆக்ரோஷமாகும் ரிச்சா பலோட் தனது அண்ணனுக்கு போன் செய்து நிலைமையைச் சொல்ல.. படம் இங்கேதான் துவங்குகிறது.
இந்தியாவுக்கே டானாக விளங்கும் மும்பை முதலியாரின் ஒரே மகள் ரிச்சா பலோட். அவளது அண்ணன் குணா தென் மண்டல தாதா. விஷயம் பெரிதாக ஆதியின் நண்பர்களை அவரவர் தந்தைமார்கள் பாதுகாப்பாக பதுக்கி வைக்க.. ஆதி மட்டும் முதலியாரை நேரில் பார்த்து உண்மையைச் சொல்லிவிட நினைத்து மும்பைக்கு பயணமாகிறார். சென்றாரா..? பார்த்தாரா..? பிரச்சினை முடிந்ததா..? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
படத்தின் முதற்பாதியில் இருந்த விறுவிறுப்பையும், படமாக்கலையும் பார்த்தால் ராம்கோபால்வர்மா படம் பார்த்த்து போலவே இருந்த்து. ஆனால் இரண்டாம் பாதியில் கடைசி சில நிமிடங்களில் ஹீரோயிஸத்திற்காக திணிக்கப்பட்ட காட்சிகளினால், படம் நம்மை டெர்ரராக்கிவிட்டது. ஒரு கிளைமாக்ஸுக்குள் எத்தனை கிளைமாக்ஸ்..?
ஆதியின் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட காட்சியூடேயே படத்தை முடித்திருக்கலாம். அல்லது முதலியாரும் சென்னை வந்து அவர்களுடன் பேசுவதோடும் முடித்திருக்கலாம். இதன் பின்பும் காட்சிகளை இழுத்ததில் சோர்வாகிவிட்டது.
தெலுங்கில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க தீவிரமாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆதிக்கு இந்தப் படம் நிச்சயம் கை கொடுக்கலாம். இவருடைய தந்தை ரவிராஜா பினிசெட்டி தெலுங்குலகில் மிக பிரபலமான இயக்குநர். அடிதடி, மசாலா, கமர்ஷியலில் மன்னராம். 60 படங்களுக்கும் மேலாக இயக்கியிருக்கிறார். இவருடைய இரண்டாவது மகனும், ஆதியின் தம்பியுமான சத்ய பிரபாஸ்தான் படத்தை இயக்கியிருக்கிறார். அமெரிக்காவில் சினிமா டைரக்ஷன் கோர்ஸ் முடித்தவராம். இப்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்றாற்போல இயக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.
ஹீரோயிஸ படம் என்பதால் அதற்கேற்றாற் போன்ற உடல் மொழியையும், நடிப்பையும் கொடுத்திருக்கிறார் ஆதி. காதல் காட்சிகளில் அப்பாவித்தனம்.. வீட்டில் அடாவடி தம்பி.. ஏமாற்றும் மகன்.. நண்பர்களிடத்தில் நட்புக்கு முக்கியம் கொடுப்பவன்.. சண்டை காட்சிகளில் வில்லனாக.. இப்படி பல்வேறுவிதமாகவும் சிறப்பான இயக்கத்தின் கீழ் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆதி.
இவருடைய முந்தைய படங்களைவிடவும் இந்தப் படத்தில் இவருக்கான ஸ்கோப் நிறையவே இருப்பதால் இது சாத்தியப்பட்டுள்ளது. ‘மிருகம்’, ‘அரவானில்’கூட இவரை இவ்வளவு அழகாக நடிக்க வைத்ததில்லை என்பது உண்மை.
ஹீரோயினான நிக்கி கல்ரானியின் அறிமுகக் காட்சிகள்.. டாஸ்மாக்கில் பீர் வாங்கி வருவது.. காண்டம் பாக்கெட் வாங்கிச் செல்வது.. ரவுடிகளை ஆதியை வைத்தே தாக்க வைப்பது என்று தனது வில்லித்தனத்தை சுவாரஸ்யமாகவே காட்டியிருக்கிறார். “பொண்ண பார்த்து லவ் பண்ண வைக்கிறதுவரைக்கும்தான் பையன்களோட வேலை. அந்தக் காதலை கன்டினியூ பண்ணணுமா? கழட்டிவிடணுமான்னு முடிவு செய்ய வேண்டியது பொண்ணுக வேலை..” என்று ஸ்டைலாகச் சொல்லும் நிக்கியை யாருக்குத்தான் பிடிக்காது..? அழகுக்கேற்ற நடிப்பு. கடைசிவரையிலும் இருப்பார் என்று எதிர்பார்த்தால் ஆதிக்கு அட்வைஸ் செய்து கன்னத்தில் ஒரு அறையை வாங்கிக் கொண்டு காணாமல் போய்விட்டார்.
முதலியாராக நடித்த மிதுன் சக்கரவர்த்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன ஆக்ஷன்கள் மட்டுமே.. வசன உச்சரிப்பையே ஒரு நடிப்பு போல காட்டியிருக்கிறார் இயக்குநர். இது போன்ற நடிப்பெல்லாம் சிறப்பான இயக்கம் தெரிந்த இயக்குநர்களால்தான் கொண்டு வர முடியும்..! அது இதில் கச்சிதமாக நடந்திருக்கிறது.
ஒரு காட்சியே என்றாலும் ரிச்சா பலோட்டின் அந்த ஆக்ரோஷமே படத்தின் டர்னிங் பாயிண்ட். “என்னையவே அடிச்சிட்டீல்ல.. இன்னிக்கு ராத்திரிதாண்டா உங்களுக்கு லாஸ்ட் நைட்டு.. நிம்மதியா சாகப் போங்க..” என்ற அந்த ஆக்ரோஷமே முதலியாருக்கு முன்னுரை சொன்னது..!
கிளைமாக்ஸில் இப்படியொரு டிவிஸ்ட் இருக்கும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. லட்சுமி பிரியா சம்பந்தப்பட்ட காட்சிகளெல்லாம் திடீர் திகைப்பு. சரியான திரைக்கதை மாற்றம். இதுவும் படத்திற்கு ஒரு ‘அடடே’ போட வைத்துள்ளது.
நாசர், நரேன், பிரகதி, ஆதியின் அக்கா, நண்பர்கள் என்று மற்றைய நடிகர்களும் தங்களது பணியை நிறைவாகச் செய்துள்ளார்கள். நாசர் வழக்கம்போல வில்லனா, நல்லவரா என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார். சஸ்பென்ஸுக்கு இது பெரிதும் உதவியிருக்கிறது.
முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்தின் கேமிராவின் பணி முக்கியமானது. ஒரு காட்சியில் 360 டிகிரியிலும் கேமிரா சுழன்று அழகு காட்டியிருக்கிறது. குணாவிடம் ஆதியை ஒப்படைத்து ‘அவனை பேச வை’ என்று முதலியார் சொல்லும் காட்சியில் அந்த ஷாட்டின் அமைப்பியலே ஒரு அழகு. கேமிராமேனுக்கு ஒரு ஷொட்டு..
தெலுங்கின் பிரபலமான இசையமைப்பாளரான ஷியாமின் இசையில் பின்னணி இசை பல இடங்களில் காதைக் கிழிக்கிறது. ஆனால் முதலியார் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமே கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்திருக்கிறார். இதையே படம் முழுக்க செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
நறுக்குத் தெரித்தாற் போன்ற வசனங்களும் படத்திற்கு ஒரு பக்க பலம். குமரேசன் எழுதிய பல வசனங்கள் முதலியார் என்ற கதாபாத்திரத்திற்கு நன்கு வெயிட் கொடுத்துள்ளது. ஒட்டு மொத்தமாகவும் இயக்குநரின் பக்க பலம் வசனங்கள்தான்..!
முன்பே சொன்னதுபோல கிளைமாக்ஸில் கொஞ்சம் கத்திரி போட்டால் படத்தின் வேல்யூ நிச்சயம் வேறு விதமாக இருக்கும். முதல் பாதியை மட்டுமே சொல்லி ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அதேபோல கிளைமாக்ஸுக்காக மட்டுமே ஒரு படம் தரமில்லை என்றும் சொல்லிவிட முடியாது.
கமர்ஷியல் படங்களின் விரும்பிகளுக்கு மிக நல்ல படமாக இது வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அறிமுக இயக்குநர் சத்யபிரபாஸை வருக வருகவென்று வரவேற்கிறோம்.