TAKE OK PRODUCTIONS நிறுவனத்தின் சார்பில் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் ‘யாரோ’.
ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வெங்கட் ரெட்டி.
இது ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் ஆகும், இது ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை.
இப்படத்தை TRIDENT ARTS நிறுவனத்தின் சார்பில் ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநரான சந்தீப் சாய் பேசும்போது, “நானும் நாயகன் வெங்கட்டும் ஐடியில் ஒன்றாக வேலை செய்தோம், இருவருக்கும் சினிமா ஆசை இருந்தது. வேலையை விட்ட பிறகு ஒரு குறும்படம் செய்தேன். அதை பார்த்துவிட்டு வெங்கட் நாம் துணிந்து படம் செய்யலாம் என்றார். அப்படித்தான் இப்படம் துவங்கியது.
நாயகன் வெங்கட் மிக,மிக அர்ப்பணிப்புணர்வுடன் படத்தை செய்திருக்கிறார். என்னுடைய குழுவினரால்தான் இப்படம் அழகாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளினின் இசைதான் படத்தின் முழு பலமும். அவரில்லாமல் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. ஒளிப்பதிவாளர் K.B. பிரபு என்ன சொன்னாலும் அதனை கூலாக கையாண்டு, அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் இறுதிவரையிலும், பரபரப்பாக புதுமையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துதான் கதையை எழுதினோம், படத்தை பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள்…” என்றார்.
தயாரிப்பாளர், மற்றும் நடிகரான வெங்கட் பேசும்போது, “இந்தப் படத்தை துணிந்து வெளியிட முன் வந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதலில் நன்றி. இந்தப் படத்தை எடுக்க தீர்மானித்துவிட்ட பிறகு, நிறைய சிக்கல்கள் வந்தது. அதையெல்லாம் தாண்டித்தான் இப்படத்தை எடுத்தோம். படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் வேண்டுமென பல காலமாக தேடினோம். கடைசியாக பிரபு வந்தார். பணத்தை மதிக்காதவர். சினிமாவை நேசிப்பவர்.
இந்தப் படத்திற்கு ஒரு தூணாக இருந்தவர் படத் தொகுப்பாளர் அனில். இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் அருமையான இசையை தந்திருக்கிறார், அவரை நாங்கள் நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம்.
இந்த ஆறு வருடங்களில் நான் அதிகம் பேசியது சந்தீப் உடன்தான். நாங்கள் நிறைய சண்டையும் போட்டிருக்கிறோம். எனக்காக ஒரு மிகச் சிறந்த பாத்திரத்தை இந்த படத்தில் உருவாக்கி தந்திருக்கிறார். எல்லா நடிகருக்கும் இந்த மாதிரியான பாத்திரம் கிடைத்துவிடாது, ஆனால் எனக்கு முதல் படத்திலேயே கிடைத்திருக்கிறது.
சந்தீப் மிகச் சிறந்த திறமையாளர். அதை இந்த படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். நாயகி உபாசனா யாரும் நடிக்க தயங்கும் பாத்திரத்தில் ஒப்புக் கொண்டு நடித்திருக்கிறார். அவருக்கும் நன்றி…” என்றார்.