full screen background image

கபடி விளையாட்டு + கிரைம், திரில்லர் டைப் படம் ‘யார் இவன்’

கபடி விளையாட்டு + கிரைம், திரில்லர் டைப் படம் ‘யார் இவன்’

வைக்கிங் மீடியா ஆண்டு  எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ரைனா ஜோஷி தயாப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘யார் இவன்’.

இந்தப் படத்தில் சச்சின், ஈஷா குப்தா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளனர். மேலும், பிரபு, கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். 

Yaar Ivan Movie Stills (6)

ஒளிப்பதிவு – பிலேந்த்ர மேனன், இசை – எஸ்.எஸ்.தமன், படத் தொகுப்பு – பிரவீன் பூடி, கலை – ரகு குல்கர்னி, சண்டை பயிற்சி – கனல் கண்ணன், பாடல்கள் – நா.முத்துக்குமார், சுகுமார் கணேசன், நடனம் – பாஸ்கோ சீசர், ஜானி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு மேற்பார்வை – சிவபிரசாத் குடிமிட்னா, தயாரிப்பு – ரைனா ஜோஷி, கதை, திரைக்கதை, இயக்கம் – டி.சத்யா.

இப்படத்தின் இயக்குநரான டி.சத்யா ‘உத்தமபுத்திரன்’, ‘படகோட்டி’, ‘களத்தூர் கண்ணம்மா’ போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களை  இயக்கிய டி.பிரகாஷ் ராவின் பேரனாவார். 

இயக்குநர் டி.சத்யா, ‘வெண்ணிலா கபடிக் குழு’ தெலுங்கு ரீமேக்கான ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ்’, ‘ஷங்கரா’ ஆகிய தெலுங்கு படங்களை இயக்கியிருக்கிறார் டி.சத்யா. இப்போது தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் இவர் இயக்கியிருக்கும் முதல் படம் ‘யார் இவன்.’

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

Yaarivan Press Meet Stills (25)

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் டி.சத்யா, “இதுவொரு கிரைம் அண்ட் திரில்லர் படம். கபடி விளையாட்டின் பின்னணியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.  ஹீரோ ஒரு கபடி வீரன். கபடியை ரசிக்கும்  கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை காதலிக்க அவளது காதலில் விழுகிறான் ஹீரோ.

ஆனால் அதற்கு முன்பாகவே கதாநாயகியை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதை ஹீரோ அறிகிறான். அவளை காப்பாற்றவும் நினைக்கிறான். இதனாலேயே அவளை கல்யாணமும் செய்து கொள்கிறான்.

ஆனால் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கொலை செய்யப்பட கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது. ஹீரோயினின் கோடீஸ்வர அப்பா தன் மகளை கொலை செய்தவனை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.  

ஹீரோ இந்தப் போராட்டத்தில் இருந்து எப்படி தப்பித்தார்..? யார்தான் அந்தப் பெண்ணை கொலை செய்தது என்பதுதான் கதை.

கொலைப் புதிரை விடுவிக்கும் படம்தான் என்றாலும் வித்தியாசமான திரைக்கதை, வித்தியாசமான காட்சிகளுடன் இந்தப் படத்தினை உருவாக்கியிருக்கிறோம். இது வழக்கமான திரில்லர் படம் போல இருந்தாலும், உளவியல் ரீதியாகத்தான் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். நிச்சயமாக ரசிகர்களுக்கு இதுவொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்..” என்றார்.

Yaarivan Press Meet Stills (21)

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசும்போது, “படத்தின் நாயகனான சச்சின் ஜோஷி மிகப் பெரிய பிசினஸ்மேன். அவருக்கு நடிச்சுத்தான் சம்பாதிக்கணும்னு ஆசையெல்லாம் இல்லை. என்றாலும் சினிமா என்பது அவரது ஆசை. அதற்காகத்தான் நடிக்க வந்திருக்கிறார்.

ஒரு நாள் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்கினோம்.. அன்று திட்டமிட்டபடி முழுவதும் எடுக்க முடியாததால் ‘அடுத்த நாள் எடுக்கலாம்’ என்றோம். ஆனால் நாயகன் சச்சினோ, ‘நாளைக்குன்னா சான்ஸே இல்லை.. நான் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிசினஸ் மீட்டிங்கிற்காக நாளைக்கு கிளம்புறேன்.. முடிந்தால் இன்னைக்கு எடுங்க. இல்லாட்டி போய் வந்து பின்பு நடிக்கிறேன்.’ என்றார். அவ்வளவு பிஸியான பிஸினஸ்மேன். இருந்தும் சினிமா மீதிருந்த காதலினால் இந்தப் படத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் செய்து ஹீரோவாகியிருக்கிறார்.

படமும் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு ஆங்கிலப் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும்…” என்றார் உறுதியாக.

Our Score