தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் வெற்றிமாறனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை டாப்ஸி. அதன்பின் ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’, வை ராஜா வை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் இந்தியில் ‘பேபி’, ‘பின்க்’, ‘ரன்னிங் ஷாதி’, ‘தட்கா’ என தொடர்ச்சியாக நடித்து அங்கும் இப்போது பிஸியாகவே இருக்கிறார்.
2015-ம் ஆண்டு டாப்ஸி நடிப்பில் வெளிவந்த இந்தி படம் ‘பேபி’. இந்தப் படத்தில் அக்சய் குமார், ராணா டக்குபதி, மதுரிமா ஆகியோரும் நடித்திருந்தனர். ‘எ வெட்னஸ் டே’, ‘ஸ்பெஷல் 25’, ‘எஸ்.எஸ்.தோனி- தி அன் டோல்ட் ஸ்டோரி’ ஆகிய படங்களை இயக்கிய நீரஜ் பாண்டேதான் இந்த ‘பேபி’ படத்தையும் இயக்கியிருந்தார்.
இந்த ‘பேபி’ படத்தில் ஷபனா கான் என்ற ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் டாப்சி. அந்த கேரக்டரை மட்டும் வைத்து ஒரு தனி கதை செய்து, அதில் டாப்சியையே கதாநாயகியாக நடிக்க வைத்து, உருவாகியிருக்கும் படம்தான் இந்த ‘நான்தான் ஷபானா’ திரைப்படம்.
இந்தப் படத்தில் டாப்சியுடன். மனோஜ் பாஜ்பாய், பிரித்விராஜ் சுகுமாரன், அனுபம் கெர் ஆகியோரும் நடித்துள்ளனர். அக்சய் குமார் ஒரு கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை திரைக்கதை எழுதி தயாரித்து இருப்பவர் நீரஜ் பாண்டேதான். தமிழ் வசனத்தை எஸ்.பி.சக்ரபாணி எழுதியுள்ளார். இயக்கம் – சிவம் நாயர்.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்த நடிகை டாப்ஸி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறேன். இதில் எனக்கு பெரிய வருத்தமுண்டு. ஆனாலும் நான் நடித்த 5 தமிழ்ப் படங்களில் 4 படங்கள் வெற்றிப் படங்கள் என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க இப்போதும் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் படங்களில் கதை கேட்காமலேகூட நடிப்பேன். ஏனென்றால் அவர்கள் எப்படிப்பட்ட படங்களைத் தருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ‘ஆடுகளம்‘ படத்தில் என்னைத் தவிர பலருக்கும் தேசிய விருது கிடைத்தது. வெற்றிமாறனிடமும் எனக்கு ஒரு தேசிய விருதை நீங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.
இந்த ‘நான்தான் ஷபானா’ படமும், என்னுடைய கதாபாத்திரமும் எனக்கு மிகப் பெரிய பெயரைத் தேடிக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கேரக்டரில் நடிப்பதற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் எனப்படும் பலவித சண்டை பயிற்சிகளை கற்றுக் கொண்டேன். மேலும் படத்தில் பல சண்டை காட்சிகளில் டூப் போடாமலும் நடித்திருக்கிறேன். இந்த ஆக்சன் காட்சிகள் எனக்கு வேறு ஒரு பரிமாணத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறேன்…” என்கிறார் டாப்ஸி.
இத்திரைப்படம் மார்ச் 31-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.