full screen background image

“ஐந்தாண்டுகளுக்கு டாஸ்மாக் சீனே இருக்கக் கூடாது..” – கவிஞர் தாமரையின் அறச்சீற்றம்..!

“ஐந்தாண்டுகளுக்கு டாஸ்மாக் சீனே இருக்கக் கூடாது..” – கவிஞர் தாமரையின் அறச்சீற்றம்..!

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ ஆகிய படங்களை தயாரித்த ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘யான்’.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் இயக்கத்தில் ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடித்துள்ளனர். நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வழக்கம்போல 2 மணி நேரம் தாமதமாக வந்து ‘ஸாரி’ கூட சொல்லாமல் பஞ்சாயத்தைத் துவக்கினார்கள்..

“ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் குறுக்கிடுகிறது. அது அவனது வாழ்க்கையையே மாற்றுகிறது. சென்னையில் இருந்து மொராக்கோவரைக்கும் அவனை பயணிக்க வைக்கிறது.. இதுதான் கதை. இதுக்கு மேல கேக்காதீங்க…” என்றார் இயக்குநர் ரவி கே.சந்திரன்.

துளசி நாயர், தான் இப்போதுதான் சினிமாவுலகத்திற்குள் நுழைந்துள்ளதால் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்  என்றார்.

நடிகர் ஜீவா ஒரு பெரும் சொற்பொழிவே ஆற்றிவிட்டார். அதில் பெரும்பாலானவை மொராக்கோ சம்பந்தப்பட்டவைதான்.. “கிளைமாக்ஸ் காட்சி அங்கேதான் ஷூட் செஞ்சோம்.. இந்தப் படத்துல வர்ற 5 பாடல்களையும் வேற வேற ஒளிப்பதிவாளர்களை வைச்சு படமாக்கினோம்.. சண்டை காட்சிகளெல்லாம் புதுமையா இருக்கும்.. நிச்சயமா இந்தப் படம் என் கேரியரை புரட்டிப் போடும் புதிய படமா இருக்கும்…” என்று புதிய உற்சாகத்துடன் பேசினார் ஜீவா.

கடைசியாக பேசிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், தன்னுடைய தயாரிப்பிலேயே இந்தப் படத்துக்குத்தான் அதிகமாக செலவாகியுள்ளது என்பதை ஒத்துக் கொண்டார். ஒரு நாள் இரவில் 11 மணிக்கு கதை கேட்க அமர்ந்து ஒரு மணி நேரத்தில் படத்தை ஒத்துக் கொண்டதாகச் சொன்னார். இந்தப் படம் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் படம் என்றார் தயாரிப்பாளர். ஆனால் இயக்குநரோ இதனை முற்றிலும் மறுத்தார். என்றாலும், என்ன கதை என்பதைச் சொல்லவே இல்லை.

கேள்வி பதில் சீஸன் ஆரம்பித்ததும் களை கட்டியது அரங்கம். “கோ படத்தில் நடித்த கார்த்திகா, இதில் நடித்திருக்கும் துளசி இருவரில் யார் உங்களுக்கு பெஸ்ட்டா தெரியுது?” என்று கேட்டதற்கு பிப்டி பிப்டி சாய்ஸ் சொல்லி எஸ்கேப்பானார் ஜீவா. இயக்குநரிடம் படத்தின் கதையைப் பற்றி சகல விதங்களிலும் கேட்டுப் பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை..

திரும்பவும் ஜீவாவிடம் திரும்பிய மீடியா அவரது ‘மச்சி குவார்ட்டர் சொல்லேன்’ கதையைப் பற்றிக் கேட்டது. “அது என்னன்னே தெரியலை ஸார்.. எங்க பார்த்தாலும் அதையேதான் கேக்குறாங்க. ஒரு செத்த வீட்டுக்கு போயிருக்கேன். அங்ககூட ஒருத்தன் வந்து எனக்காக ஒரு தடவை சொல்லுங்கன்றான்.. உலகத்துலேயே நான் ஒருத்தன்தான் நல்லவன்ற மாதிரியெல்லாம் நடிச்சிருக்கேன். அதையெல்லாம் கண்டுக்காம இந்த ஒரு வார்த்தையை மட்டும் ஞாபகத்துல வைச்சிருந்து கொல்றாங்க..” என்று அலுத்துக் கொண்டார்.

பேச்சு அப்படியே குடிப்பழக்கம், டாஸ்மாக், சிகரெட் பற்றிச் சென்றது. “நான் அந்த கேரக்டருக்காகத்தான் செய்றனே ஒழிய, தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் திரைப்படங்களில் அப்படி செய்வதில்லை…” என்றார் ஜீவா.

அவரிடமிருந்து மைக்கை வாங்கிய கவிதாயினி தாமரை, “குடிப்பழக்கம் நமது சமூகத்தைச் சீரழிக்கிறது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு எந்தவொரு சினிமாவிலும் அது போன்ற காட்சிகள் வைக்கக் கூடாதுன்ற விதிமுறையை தமிழ்ச் சினிமாவுலகம் தனக்குத்தானே போட்டுக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் குடிப்பழக்கம் தமிழக இளைஞர்களிடத்தில் பரவுவதை ஓரளவு கட்டுப்படு்தத முடியும்..” என்றார்.

மீடியாவும், மேடைக்காரர்களும் குடிகாரர்களை மட்டுமே திட்டினார்களே ஒழிய.. மறந்தும் குடியை அனுமதித்திருக்கும் இந்த அரசினைப் பற்றி மூச்சேவிடலை..  இதுதான் இல்லாத ஊருக்கு வழி காட்டும் வேலை.. டாஸ்மாக் கடையே இல்லைன்னா நம்ம மக்கள்ஸ் எங்க போய் குடிப்பாங்களாம்..?

Our Score