முதல்லேயே சந்தேகம் வந்தது. ஆனால் எந்த மொழி படமாயிருக்கும்ன்னு எப்படி தேடுறதுன்னு சோம்பேறித்தனத்துல விட்டுட்டோம்.. இப்போ சினிமா ரசிகர் ஒருவர் தேடியெடுத்துச் சொல்லிவிட்டார்..
சொல்வதற்கே சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. சென்ற வெள்ளியன்று வெளியாகி இப்பவும் தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு, பார்க்கப்பட்டு வரும் ‘யாமிருக்க பயமே’ என்கிற திரைப்படமும் காப்பி செய்யப்பட்ட படம்தான் என்று..!
‘The Quiet Family’ என்கிற 1998-ம் ஆண்டு வெளிவந்த கொரியப் படத்தின் தமிழாக்கம்தான் இந்த ‘யாமிருக்க பயமே’ என்பது இப்போது நமக்கு தெரிய வந்துள்ள கசப்பான உண்மை.
கொரியப் படத்தில் ஒரு குடும்பமே ஹோட்டலை நடத்துகிறது. தமிழில் காதலன், காதலி, நண்பன், நண்பனின் தங்கை ஆகிய நால்வர் அணி நடத்துகிறார்கள். இதுதான் வித்தியாசம். மிச்சம், மீதியெல்லாம் அதேதான்..!
‘யாமிருக்க பயமே’ மிகச் சிறந்த இயக்கம்.. சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர் தேர்வு.. அனைத்துமே இப்படி சிறப்பானவையாக இருந்தும் இதில் குறை வைக்கலாமா..? படத்தின் இறுதி டைட்டிலில் ‘இன்ஸ்பிரேஷன் பை’ என்ற தலைப்பிலாவது இந்தப் படத்தின் தலைப்பை போட்டிருக்கலாமே..?
இங்கே திருட்டு டிவிடி கிடைத்துவிட்டால் லபோதிபோ என்று வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள். வேறெங்கோ எடுக்கப்படும் சினிமாக்களின் கதைகளை இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திருடி எடுக்கப்படுவதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்..?
ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளிக்கு துரோகம் செய்யலாமா..? இயக்குநர் டிகே யோசிக்கட்டும்..!
அந்த கொரிய படைப்பாளியான kim-ji-woon-க்கு எனது நன்றிகளும், தலை வணங்குதலும்..!