full screen background image

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலின் மூலம் ஒன்றே கால் கோடி ரூபாய் சம்பாதித்த தயாரிப்பாளர்..!

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலின் மூலம் ஒன்றே கால் கோடி ரூபாய் சம்பாதித்த தயாரிப்பாளர்..!

மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

IMG_9854

பாடல்கனை தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார்  மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.   சதீஷ்குமார்  பேசும்போது, ” தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அழைத்தபோது தயாரிப்பாளர் யார் என்று கேட்டேன். புதியவர் என்றார்கள். அப்படியென்றால் முதல் வேலையாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன்.

jsk satheesh kumar

ஏனென்றால் நான் இதுவரை  18 படங்கள் தயாரித்து இருக்கிறேன். நானும் ஒரு காலத்தில் புதிய தயாரிப்பாளர்தான். இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ள நா.முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகள் பெற்றபோது நானும் அருகில் இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு, பெருமையும் உண்டு. ‘தங்கமீன்கள்’ படத்தில் அவர் எழுதியுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்னை சிந்திக்க வைத்த பாடல்.

சினிமாவில் வியாபாரம் தெரியாமல் நிறைய தவறுகள் செய்கிறோம். இனி அதைச் செய்யக் கூடாது. இனிமேல் வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’  என்கிற ஒரு பாடல் மூலம் மட்டும் ஒன்றே கால் கோடி ரூபாய் வந்தது. ‘ரம்மி’ பாடல் காலர் ட்யூன் மூலம் 78 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது. இப்படி எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத  வருமானங்கள் உள்ளன. இந்தத் தொழில் வணிகம் தெரியாமல் படமெடுக்கக் கூடாது. யாருமே வணிகம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது. 

யாரோ வியாபாரம் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம். நாமே வணிகம் செய்யலாம். இதிலுள்ள வியாபார வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி என்னிடம் கேட்டு வருபவர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். வழிகாட்டத் தயாராக நான் இருக்கிறேன்.

நான் இதுவரை 18 படங்கள் தயாரித்து இருக்கிறேன். 8 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இந்த 8 பேரில் யாரும் சோடை போகவில்லை. இதில் கர்வமும், ஆனந்தமும் அடைகிறேன். நான் முதலில் ‘ஆரோகணம்’ தயாரித்தபோது யார், யார் விருந்தினராக வருவார்களோ என்று பதற்றத்தில் இருந்தேன். இங்கே நமீதா உள்பட பலர் வந்துள்ளார்கள். மகிழ்ச்சி.

இப்போது மீண்டும் சொல்கிறேன். இந்த மாதிரி புதியவர்களை வரவேற்பதில் வாழ்த்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இங்கே ஒரு நல்ல விஷயம் நடந்தது. நாம் எவ்வளவோ பேசுவோம், சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் எல்லாம் போடுவோம். உண்மையான சேவை செய்பவர்களை முன்னிறுத்துவதில்லை.

suresh kamatchi

இங்கே  ஒரு சினிமா விழாவில் ‘துளி’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை முன்னிறுத்தும் வகையில் அறிமுகம் செய்தது நல்ல விஷயம். இசையமைப்பாளரான நிரோ பிரபாகரனை எனக்கு நாலு ஆண்டுகளாகத் தெரியும்.ஈழத்தில் பிறந்தவர். இந்த அளவுக்கு இசையமைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  ஈழத்தைத் தமிழ் மண் கைவிடாது. இவரையும் கைவிடாது.

மறைந்த அண்ணன் முத்துக்குமாருக்கு இங்கே அவர் மகனிடம் உதவித்தொகை வழங்கினார்கள். அவர் எழுதிய பாடல்களில் உள்ள தமிழ் அவரைக் கை விடாது. இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு நன்றாக முடிந்தால், ராயல்டி மூலம் வருமானம் இவருக்கும் வரும்…” என்று கூறி வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் நிரோ பிரபாகரன் பேசும்போது,  “நான் இதற்கு முன் ஒரு படத்துக்கு இசையமைத்துள்ளேன். பாடல் விழா நடைபெற்றவகையில்  இதுவே முதல் படம். நா.முத்துக்குமாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. அவர் ஓர் ஆசிரியர் போல எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இதில் வருத்தம் என்னவென்றால் இந்த அப்பா பற்றிய பாடலை அவர் கேட்காததுதான் பெரிய வருத்தம் எனக்கு…” என்றார்.

namitha

நடிகை நமீதா பேசும்போது, “வழக்கமான நிகழ்ச்சியிலிருந்து  இது வித்தியாசமான, பட நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. வழக்கமாக படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை வெளி மாநிலம் – வெளிநாட்டிலிருந்து நடிக்க  இங்கே கொண்டு வருவார்கள். தமிழே தெரியாது. இதில் கதாநாயகன்  சஜன் குலோபலாக டென்மார்க்கிலிருந்து வந்துள்ளார்.

கதாநாயகி லோக்கலாக இருக்கிறார். என்னதான் ருசியாக இருந்தாலும் பிரியாணியைத் தினமும் சாப்பிட முடியாது. எல்லாவற்றிலும் வித்தியாசம் வேண்டும். இப்படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.

vinoth thangavel

‘யாகன்’ படத்தின் இயக்குநர் வினோத் தங்கவேல் பேசும்போது, “இது கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதை. தேனியில் படப்பிடிப்பு நடத்தினோம். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும்படி  படம் இருக்கும். படப்பிடிப்பு  நடந்த போது அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்” என்றார்.

‘யாகன்’ படத்தின் நாயகன் சஜன் பேசும்போது, “இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. எனக்குச் சினிமா என்பது மிகவும் விருப்பம். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் பார்த்து சினிமா மீது ஆர்வம் வந்தது. இதில் முடிந்தவரை செய்திருக்கிறோம். ஆதரவு தர வேண்டுகிறேன். நடிக்கும்போது கதாநாயகி நாயகி அஞ்சனா கீர்த்தி  எனக்குச் சொல்லிக் கொடுத்து உதவினார்… ” என்றார்.

anjana keerthi

நாயகி அஞ்சனா கீர்த்தி  பேசும்போது, “நான் இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். தேனியில் படப்பிடிப்பு நடத்தினார்கள். ஜாலியான அனுபவமாக இருந்தது…”  என்றார்.

விழாவில் நடிகர்கள்  எஸ்.வி.சேகர், மனோஜ் கே.பாரதிராஜா, ‘ஒளி’ பட நாயகன் வீரா, ஒளிப்பதிவாளர் மகேஷ், எடிட்டர் சரண் சண்முகம், நிர்வாகத் தயாரிப்பாளர் தினேஷ் குமார்,  ‘துளி’ அமைப்பு நிறுவனர் ஜமுனா, நா.முத்துக்குமாரின் மாமனார், மகன் ஆதவன்  ஆகியோரும் கலந்து கொண்டனர். 

விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ‘துளி’ அமைப்பின் சார்பில் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.  

Our Score