full screen background image

கவண் – சினிமா விமர்சனம்

கவண் – சினிமா விமர்சனம்

ஏ.ஜி.எஸ்.எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், மடோனா செபாஸ்டியன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், டி.ராஜேந்தர், விக்ராந்த், பாண்டியராஜன், போஸ் வெங்கட், அக்சயதீப் சைகல், ‘நண்டு’ ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இரட்டை எழுத்தாளர்களான சுபா, மற்றும் கவிஞர் கபிலன் வைரமுத்து மூவரும் சேர்ந்து வசனத்தை எழுத, இவர்களுடன் சேர்ந்து கே.வி.ஆனந்தும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம், இசை – ‘ஹிப்ஹாப்’ தமிழா, பாடல்கள் – மகாகவி பாரதியார், கபிலன் வைரமுத்து, அருண்ராஜா காமராஜ், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – டி.ஆர்.கே.கிரண், ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்னம், நடனம் – பிருந்தா, ஷோபி, பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், உடைகள் – சமீரா சனீஷ், ஒப்பனை – அப்துல், ஸ்டில்ஸ் – மோதிலால், பி.ஆர்.ஓ. – நிகில், தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட் மாணிக்கம், எழுத்து, இயக்கம் – கே.வி.ஆனந்த்.

இந்திய ஜனநாயக அமைப்பில் நான்காவது தூண் என்கிற பெருமையுடைய ஊடகத் துறை தற்போது அதன் நற்பெயரை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறது. பொதுமக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும், துன்பங்களையும் மற்ற இதர தூண்களான ஆட்சி அமைப்பு, நீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கும் வேலையை ஒரு சேவையாக செய்ய வேண்டிய இன்றைய பத்திரிகாவுலகம் இப்போது லஞ்ச, ஊழலில் சிக்கி கேவலப்பட்டு போய் நிற்கிறது.

உண்மையான பத்திரிகையாளர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு பெரும் பணம் வைத்திருக்கும் கருப்புப் பண முதலைகளும், சுரண்டல்காரர்களும், திருடர்களும், கொள்ளைக்காரர்களும் ஆளாளுக்கு பத்திரிகைகளை ஆரம்பித்து தாங்களும் பத்திரிகையாளர்கள் என்று சொல்ல ஆரம்பித்ததன் விளைவை இன்றைய மீடியா உலகம் நன்கு அனுபவித்து வருகிறது.

சமீப ஆண்டுகளாக டி.ஆர்.பி. ரேட்டிங் என்னும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு அதனைத் தேடி பசி கொண்டலையும் புலியைப் போல அலைந்து கொண்டிருக்கிறது டிவி மீடியா உலகம்.

போட்டிகள், பொறாமைகள் நிறைந்துவிட்ட இந்த டிவி மீடியா உலகத்தில் வெற்று பரபரப்பு செய்திகளை வெளியிட்டு அதன் மூலமாக பாமர மக்களின் கவனத்தை ஈர்த்து தங்களது சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டி இதனைக் காட்டியே விளம்பரக் கட்டணத்தை உயர்த்தி கோடி, கோடியாய் சம்பாதிக்க நினைக்கும் குயுக்தி புத்தியுடைய டீஸண்ட்டான திருடர்கள் அதிகமாகிவிட்டதால் இன்றைய பத்திரிகாவுலகம் தரங்கெட்டுப் போய் நிற்கிறது.

அப்படிப்பட்ட இந்த மீடியாவுலகத்தின் ஒரு பகுதியைத்தான் இந்த ‘கவண்’ படத்தில் கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

ஹீரோ விஜய் சேதுபதியும், மலர் என்கிற ஹீரோயின் மடோனா செபாஸ்டியனும் ஒரே கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே காதலர்களாகவே இருந்து வருகிறார்கள். ஒரு குறும்படம் எடுக்கும்போது ஏற்படும் சண்டையில் இருவரும் பிரிகிறார்கள்.

கல்லூரி முடிந்து வேலை தேடியலையும் படலத்தை துவக்குகிறார் விஜய் சேதுபதி. அதுவரையிலும் வீட்டில் அப்பா, அம்மாவிடம் தண்டச் சோறு திட்டை வாங்கி அவர்களுடைய பணத்தில் ஆவணப் படத்தையெல்லாம் எடுத்து சாதித்தாலும், இப்போது வேறு வழியில்லாமல் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி.

ஜென் டிவியில் வேலை கிடைத்து அங்கே வருகிறார். எதிர்பாராதவிதமாக தன்னுடைய முன்னாள் காதலியான மலரும், அதே டிவியில் வேலை பார்ப்பதை அறிந்து மகிழ்ச்சியாகிறார்.

அன்றைக்கு வேலையில் சேரப் போகும் தருணத்தில் அந்த டிவி வாசலில் ஒரு போராட்டம் நடைபெறுகிறது. காந்தியாரை பற்றி தரக்குறைவாக அந்த சேனலின் ஒரு நிகழ்ச்சியில் பேசப்பட்டதாக சொல்லி, ஒரு கட்சியின் தலைவரான போஸ் வெங்கட் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

அந்தப் போராட்டத்தை சில ரவுடிகள் சீர்குலைக்க.. அதனை தனது செல்போனில் படமெடுத்து வைக்கிறார் விஜய் சேதுபதி. அந்த செல்போனை ஜென் டிவியின் சீனியர் எடிட்டர் பாண்டியராஜனிடம் கொடுக்க, அதை அவர் சமயோசிதமாக வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்றுத் தருகிறார். இதனால் முதல் நாளே விஜய் சேதுபதிக்கு சேனலின் தலைவரிடமிருந்து பாராட்டு கிடைக்கிறது.

ஆனால் அந்த சேனலின் உரிமையாளரான அக்ஷயதீப் சேனலின் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார். அவருக்கு அந்த சேனலின் மார்க்கெட்டிங் ஹெட்டாக இருக்கும் ஒரு பெண்மணியும் உறுதுணையாய் இருக்கிறார்.

அரசியல்வாதியான போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதனால் அந்தக் கிராமத்தின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்காக போஸ் வெங்கட்டை எதிர்க்கும்விதமாக சமூக அமைப்பு ஒன்று தீவிரமாக போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

இந்த நேரத்தில் சேனலின் தலைவரான அக்ஷயதீப்புடன் போஸ் வெங்கட் சமாதானமாகிறார். போஸ் வெங்கட் நிறைய பணம் கொடுப்பதாகவும், தன்னை அந்த சேனல் மூலமாக நல்லவன் என்று பிரமோட் செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறார். இதனால் அந்த சேனலில் திடீர் திருப்பமாக விஜய் சேதுபதியின் செல்போனில் எடுக்கப்பட்ட ரவுடிகள் குண்டு வீசி தாக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு போஸ் வெங்கட் நல்லவர் என்று பரப்புரை செய்யப்படுகிறது.

இதனை எதிர்பார்க்காத  விஜய் சேதுபதியும் அவரது நண்பர்கள் குழாமும் அதிர்ச்சியாகிறது. இந்த நேரத்தில் விக்ராந்தின் தோழியை போஸ் வெங்கட்டின் ஆட்கள் பாலியல் பலாத்காரம் செய்து ரோட்டில் வீசி எறிகிறார்கள். விஜய் சேதுபதியும், மலரும் அந்தப் பெண்ணை சந்தித்து பேசுவதை வீடியோ எடுத்து அதே சேனல் மாறுபட்ட கருத்துக்களோடு ஒளிபரப்புகிறது. இதெல்லாம் சேனலின் தலைமை செய்யும் செயல் என்று நினைத்து வெறுப்பாகிறார் விஜய் சேதுபதி.

இந்த நேரத்தில் போஸ் வெங்கட்டை ‘நேருக்கு நேர் சந்திப்பு’ என்கிற பெயரில் ஒரு பேட்டியை எடுக்கச் சொல்கிறது சேனல். அந்த பேட்டியில் விஜய் சேதுபதி போஸ் வெங்கட்டை தாறுமாறாக கேள்விகள் கேட்டு அவரை டென்ஷனாக்குகிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் சண்டையில் போஸ் வெங்கட், விஜய் சேதுபதியை தாக்கிவிடுகிறார். இதனையும் படமாக்கிக் கொள்ளும் விஜய் சேதுபதி அந்த சேனல் முதலாளியுடன் கடுமையாக சண்டையிட்டு சேனலில் இருந்து தன்னுடைய நண்பர்களுடன் வெளியேறுகிறார்.

‘முத்தமிழ் டிவி’ என்ற பெயரில் சின்ன சேனலை நடத்திவரும் டி.ராஜேந்தரிடம் சென்று சரணடைகிறார்கள் விஜய் சேதுபதி அண்ட் கோ. தனக்கு அந்த அளவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லும் டி.ராஜேந்தர் தன்னால் முடிந்ததை தருவதாகச் சொல்லி அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார்.

இந்த நேரத்தில் விக்ராந்தை குறி வைத்தும், அந்தப் பெண்ணை குறி வைத்தும் போஸ் வெங்கட்டின் ஆட்கள் பலவித கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் ஜென் டிவி மூலமாக அவர்களை நிர்மூலம் செய்ய நினைக்கிறார் போஸ் வெங்கட். இதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.

பைபிளில் இடம் பெறும் ஒரு கதையில், பலம் வாய்ந்த பெவிலியஸ்தர்களின் மன்னனான கோலியாத்தை ஒரு இடையனான சிறுவன் டேவிட் தன்னிடமிருக்கும் ‘கவண்’ என்னும் வில் உண்டியை பயன்படுத்தி தாக்கி கொல்வான்..

இதேபோல் சர்வவல்லமை படைத்த மீடியா முதலாளியையும், ஒரு அரசியல்வாதியையும் எதிர்த்து சாதாரண பொதுஜனமான விஜய் சேதுபதி எப்படி எதிர்த்து உண்மையை நிலை நாட்டுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம் என்பதால் அதற்கேற்ப ‘கவண்’ என்னும் பெயரையே படத்தின் தலைப்பாகவும் வைத்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்..!

விஜய் சேதுபதிக்கு மிக, மிக பொருத்தமான கதாபாத்திரம். பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், காதலர் என்று மூன்று கேரக்டர்களையும் பொறுப்பாக செய்திருக்கிறார். அவருடைய உடல்வாகுவும் அவருடைய கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.

போஸ் வெங்கட்டை இண்டர்வியூ செய்யும்போது அவர் பேசிய வசனத்தைவிடவும் அவர் காட்டும் உடல் மொழியே கைதட்டலை பெறுகிறது. பேசும் வசனங்களெல்லாம் பத்திரிகாவுலகத்திற்கு அறிவுரை கூறும்படியும், புதிதாக பத்திரிகையுலகத்திற்குள் கால் பதிக்கும் புதிய வரவுகளுக்கு அறிவுரையாகவும் இருப்பதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

மலருடனான காதல் காட்சிகளில்கூட அதே போன்ற திமிரு, தெனாவெட்டு தோற்றத்தில் இயல்பு தன்மை மாறாமல் நடித்திருக்கிறார். கோபப்பட்டு, ஆத்திரப்பட்டெல்லாம் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதைக்கு  மிக உதவியாய் இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

டி.ராஜேந்தரே இவரது பேசும்விதத்தை கிண்டல் செய்யும்விதமாய் பேசும் வசனத்தை வைத்திருக்க அனுமதித்திருப்பதன் மூலம், ஒரு வித்தியாசமான கதாநாயகனாய் கண்ணுக்குத் தெரிகிறார் விஜய் சேதுபதி. பாராட்டுக்கள் ஸார்..!

ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நடிகனாக திரையில் காட்சியளித்துள்ள டி.ராஜேந்தர் அவருக்கே உரித்தான தனி பாணியில் கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.

திரைப்படத்தின் சேனல் ரைட்ஸ் விற்கலாம் என்று போய் அக்ஷயதீப்புடன் ஏற்படும் மோதலில் அவர் பேசும் வசனங்கள் சேனல்களின் வட்டாரத்தில் இன்றைக்கும் பேமஸானவைதான். உண்மையாக பேசக் கூடியவைதான். முதற்பாதியில் கொஞ்ச நேரம் வந்தாலும் அதற்கு ஈடாக பிற்பாதியில் படம் அதகளமாவதற்கு டி.ராஜேந்தரே காரணமாக இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

கிளைமாக்ஸில் 100 கோடிக்கு ஒத்துக் கொள்வதை போல அவர் பேசும் டயலாக்கும், பின்பு படாரென்று பல்டியடிக்கும்விதமும் ரசனையானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது என்னடா இது என்று படம் பார்க்கும் ரசிகனைகூட திட்ட வைத்துவிட்டு, அடுத்த நொடியில் உண்மை வெளியானவுடன் கைதட்டலையும் பெற்றுக் கொள்கிறார் டி.ஆர். இதேபோல் தொடர்ந்து குணச்சித்திர கேரக்டரில் டி.ஆர். தொடர்ந்து நடித்தால் தமிழ்ச் சினிமாவுக்கு நல்லதே..!

மலராக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியனின் நடிப்பும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். கவர்ச்சி காட்டாமல் வெறும் நடிப்பினாலேயே ஒரு மலராக நம்மைக் கவர்கிறார் மடோனா.. சில, பல குளோஸப் காட்சிகளில் அவரது நடிப்புத் திறனை நன்கு அறிய முடிகிறது.

ஒரு வித்தியாசமான முகமாக தெரியும் தோற்றத்துடன் பாடல் காட்சிகளில் பலவித எக்ஸ்பிரஷன்களை உடனுக்குடன் மாற்றிக் காட்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்திருக்கிறார். வெல்டன் மேடம்..

இதுவரையிலும் சின்னத்திரையில் மட்டுமே பெரிதாக பெயர் எடுத்திருந்த போஸ் வெங்கட்டிற்கு இந்தப் படம் மிகப் பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம். பிரகாஷ்ராஜ் நடித்திருக்க வேண்டிய கேரக்டரில் பிரகாஷின் கால்ஷீட் சொதப்பலால் அவர் நடிக்க முடியாமல் போய், கடைசி நிமிடத்தில் இடம் பிடித்த போஸ் வெங்கட் தனது பெயரை நிலை நாட்டியுள்ளார்.

ஒரு அக்கிரம அரசியல்வாதியாக.. எப்போதும் போதையில் திளைத்தபடியே மக்களிடம் பேசும் பழக்கமுள்ள ஒரு சராசரி அரசியல்வாதியாக.. பணத்தைக் கொடுத்து எதையும் சம்பாதிக்கும் குணமுள்ள ஒரு மானங்கெட்ட அரசியல்வாதியை அப்படியே திரையில் காண்பித்திருக்கிறார் போஸ் வெங்கட். அவரது நடிப்புத் திறனுக்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.

‘அயன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் தலைகாட்டியுள்ள வில்லன் அக்‌ஷதீப் சைகால் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார். ஒரு தொலைக்காட்சியின் நிறுவனராக பணம் மட்டுமே தனக்கு முக்கியம் என்று நினைக்கும் ஒரு மனிதராக இந்த வேடம் அவருக்குக் கச்சிதமாகவே பொருந்தியிருக்கிறது.

மேலும் விக்ராந்த், விக்ராந்தின் தோழியாக நடித்தவர், விஜய் சேதுபதியின் அப்பா, அம்மா, நண்டு ஜெகன், அவரது தோழிகள், சீனியர் இன்புட் எடிட்டராக நடித்திருக்கும் பாண்டியராஜன் என்று அனைவருமே படத்தின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!

ஒட்டு மொத்த மீடியாவும் இப்போது ஊழலில் திளைக்கிறது என்பது மக்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் இந்தப் படம் இத்தனை பெரிய வெற்றியை பெற்றதில் ஆச்சரியமில்லை.

மியூஸிக் ஷோவில் டி.ஆர்.பி.க்காக எத்தனையெத்தனை தில்லுமுல்லுகளை சேனல்காரர்களே செய்கிறார்கள் என்பதை அப்பழுக்கில்லாமல் அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த்.

பவர் ஸ்டார் சீனிவாசனை காமெடியாக்கி அவரையும் இந்தச் சிக்கலில் இழுத்துவிட.. கடைசி நேரத்தில் அவர் தனக்குத் தெரிந்த வித்தையைக் காட்டிவிட இதையும் ஒரு பரபரப்பாக்கி டி.ஆர்.பி.யை நோக்கி திசை திருப்பும் அந்த திரைக்கதை வெகு சுவாரஸ்யம்.

சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி என்றில்லாமல் அனைத்து சேனல்களிலுமே ஏதாவது ஒரு ஷோக்களில் சம்பந்தப்பட்ட பிரபலங்களிடைய சண்டையை மூட்டிவிட்டு அந்தப் பிரச்சினையை பெரிதாக்கி ஏதோ உண்மையான சண்டை போல் சித்தரித்து இதன் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்து, விளம்பரங்களை வாங்கிக் குவிக்கும் மீடியா திருடர்களை இதனைவிடவும் யாரும் திட்டிவிட முடியாது. அப்படி பொரிந்து தள்ளியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். அத்தனையும் மீடியா உலகத்திற்கு பெருமை சேர்க்கும்படியான வசனங்கள். இதனை எழுதிய எழுத்தாளர்கள் சுபா மற்றும் கவிஞர் கபிலன் வைரமுத்துவிற்கு நமது பாராட்டுக்கள். விக்ராந்த் தனது போராட்டம் குறித்து பேசும் வசனங்களும், டி.ஆர். ஒரு தயாரிப்பாளரின் உரிமை பற்றியும், பெரிய சேனல்கள், சின்ன சேனல்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவது பற்றியும் பேசுவதெல்லாம் மிகையானவை அல்ல. உண்மையானவைதான்..!

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் படத்துடன் ஒன்றிப் போய் பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளில் அழகை கூட்டியிருக்கிறார். ‘ஆக்ஸிஜன் தந்தாளே’ பாடல் காட்சியே இதற்கு ஒரு சான்று. இரவு நேரக் காட்சிகளிலும், காடுகளில் எடுக்கப்படும் கிளைமாக்ஸ் காட்சியும் படத்திற்கு பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன எனலாம்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் ‘ஆக்ஸிஜன் தந்தாளே’, ‘ஹேப்பி ஹேப்பி நியூ இயர்’ பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. மகாகவி பாரதியாரின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாடலை இப்போதை சேனல்களின் வட்டாரங்கள் தங்களுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதை எடுத்துக் காட்டி அதற்கு ஒரு நியாயமான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..!

படத் தொகுப்பாளர் ஆண்டனியின் படத் தொகுப்பில் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசிவரையிலும் ரன் பாஸ்ட் வேகத்தில் ஓடும் திரைக்கதையும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம். கொஞ்சம்கூட எடுத்துக் கொண்ட கதையிலிருந்து நழுவாமல் ஒரே நேர்க்கோட்டில் திரைக்கதை அமைந்திருக்க.. இதற்கேற்றவாறு படத் தொகுப்பாளரும் கச்சிதமாக தனது பணியைச் செய்திருப்பதால் இவரும் பாராட்டுக்குரியவர்தான்..!

‘கோ’ படம் போலவே படம் நெடுகிலும் பலவித டிவிஸ்ட்டுகள் தொடர்ந்து கொண்டேயிருப்பதாலும், திரைக்கதையின் இறுக்கத்தினாலும் படத்தை கடைசிவரையிலும் இமை கொட்டாமல் பார்க்க முடிந்திருக்கிறது. இதற்கு இயக்குநர் கே.வி.ஆனந்தே முழு பொறுப்பு. அவருடைய சிறப்பான இயக்கமே இத்தனை பெரிய வெற்றிக்கு முழு முதற் காரணம்..!

பத்திரிகை துறை மட்டுமில்லாமல், சுற்றுச் சூழல் கெடுதல், அதிகார வர்க்கம் பணத்திற்கு அடிமையாகுதல்.. விவசாயம் இல்லாமை.. விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. மக்களை நினைத்துக்கூட பார்க்காத அரசியல் என்று அனைத்து விஷயங்களையுமே இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

குற்றமே சொல்லப்படாத துறை என்ற இருமாப்பில் இருக்கும் பத்திரிகை துறையில் இன்றைக்கு நடக்கும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் தட்டிக் கேட்டு, அதனை இன்னொரு மீடியாவின் துணையோடு செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

இதற்காக தமிழ்த் திரையுலகமும், இந்திய பத்திரிகையுலகமும் அவருக்கு என்றென்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனாலேயே இந்தப் படம் ‘அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்’ என்கிற பட்டியலில் இடம் பிடித்துவிட்டது..!

‘கவண்’ குறி தப்பாமல் அடித்திருக்கிறது..!

Our Score