“லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்காததன் காரணம் என்ன?” – நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம்..!

“லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்காததன் காரணம் என்ன?” – நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம்..!

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் முதன்மை இணை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியவர் நடிகர் ரமேஷ் கண்ணா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அனைத்துப் படங்களிலும் அவரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த லிங்கா’ படத்தில் மட்டும் ரமேஷ் கண்ணா நடிக்கவில்லை. இந்தப் படத்தில் நடிப்பது சம்பந்தமாக கே.எஸ்.ரவிக்குமாருடன் ரமேஷ் கண்ணாவுக்கு மோதல் எழுந்ததாகவும், அதனால்தான் அவர் ‘லிங்கா’ படத்தில் நடிக்கவில்லை என்றும் திரையுலகில் பேசப்பட்டது.

உண்மையில் என்ன நடந்தது என்று இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் கண்ணா.

இது குறித்து Touring Talkies யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “படையப்பா’ படத்தில் நான் ஒரு கேரக்டர் செய்தேன். அந்தக் கேரக்டரை நானேதான் டெவலப் செய்திருந்தேன். அதை ரஜினியிடம் சொன்னவுடன் அவருக்கும் அது மிகவும் பிடித்துப் போக அவரிடத்தில் அவ்வப்போது லவ் லெட்டர் எழுதிக் கொடுக்கும் அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன்.

அதேபோல் ‘லிங்கா’ படத்திலும் நான் ரஜினியுடன் நடிப்பதற்கு ஒரு கேரக்டரை உருவாக்கியிருந்தேன். திருடன் கேரக்டர். ஆனால் திருடப் போகும் இடத்தில் பூ, பழம், ஊதுபத்தி, சூடம் என்று அனைத்தையும் வைத்து பூஜை செய்துவிட்டுத்தான் திருடுவேன். இதுதான் எனது கேரக்டர் ஸ்கெட்ச்.

கடைசியில் ரஜினி ஒரு முறை கோவிலுக்குள் மாட்டிக் கொள்ளும்போது அவர் பூஜை செய்ய பொருட்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பார். அப்போது அங்கே கொள்ளையடிக்க வந்திருக்கும் நான் என்னுடைய பூஜை பொருட்களை எடுத்து அவரிடத்தில் கொடுத்து பூஜை செய்ய வைப்பேன். இப்படி எனது கேரக்டரை வடிவமைத்திருந்தேன்.

இதை கே.எஸ்.ரவிக்குமார் ஸாரிடம் சொன்னேன். கதையைக் கேட்டுவிட்டு “இந்தக் கேரக்டர்ல யூத்தான ஒருத்தரை போடலாம்ன்னு இருக்கேன்..” என்றார். “ஏன் நான் யூத்து இல்லையா..? ‘படையப்பா’ல நடிச்சனே.. அப்போ நான் யூத்துதானே.. ‘வீரம்’ படத்துல அஜீத்துக்கு பிரெண்ட்டா நடிச்சிருக்கேன். நான் யூத்து இல்லையா..?” என்று அவரிடம் கடுமையாக சண்டை போட்டேன்.

ஆனால், ரவிக்குமார் ஸார் பிடிவாதமாக “என்னைவிடவும் யூத்தான ஒரு நபரைத்தான் போடுவேன்” என்று சொன்னதால் “போய்யா”ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இருந்தாலும்.. இப்பவும் அவருடனான குரு-சிஷ்யன்’ நட்பு தொடர்கிறது.. இது மாதிரி நானும், அவரும் அவ்வப்போது சண்டை போட்டுக்குவோம். ஆனாலும் திரும்பவும் பேசிக்குவோம்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ரமேஷ் கண்ணா.

Our Score