full screen background image

மோகன்லாலின் ‘திருஷ்யம்-2’ படத்தை தியேட்டரில் வெளியிடத் தடை..!

மோகன்லாலின் ‘திருஷ்யம்-2’ படத்தை தியேட்டரில் வெளியிடத் தடை..!

நடிகர் மோகன்லாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திருஷ்யம்-2’ திரைப்படம் வரும் 19-ம் தேதியன்று அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

“இதனால் இந்தப் படத்தை இனிமேல் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது” என்று கேரள பிலிம் சேம்பர் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

கேரளாவில் கொரானாவின் இரண்டாம் அலை தற்போது வீசிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கேரளாதான் இன்னமும் கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் சொற்ப அளவிலேயே டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. அதிலும் இரவுக் காட்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய படங்கள் அனைத்துமே வசூல் இல்லாமல் காத்தாடுகின்றன.

இந்த நிலைமையில்தான் ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மோகன்லாலின் ‘திருஷ்யம்-2’ படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை கொரோனா காலக்கட்டத்திலேயே அமேஸானில் வெளியிடுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால் இப்போது இதனைத் தியேட்டருக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், “அமேஸானில் வெளியாகி 2 வாரங்கள் கழித்து இந்தப் படத்தைத் தியேட்டர்களுக்குக் கொடுத்தாலும் நாங்கள் அந்தப் படத்தைத் திரையிடுவோம்…” என்று கேரளா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான லிபர்ட்டி பஷீர் கூறியிருக்கிறார்.

“படம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றாலும் பரவாயில்லை. தியேட்டர்களில் படம் வெளியானால் மோகன்லாலின் ரசிகர்களால் தியேட்டர்கள் நிச்சயமாக நிரம்பும். தியேட்டர்களுக்கு வாழ்வு கிடைக்கும்…” என்கிறார் லிபர்ட்டி பஷீர்.

ஆனால் இதனை முற்றிலும் மறுக்கும் கேரளா பிலிம் சேம்பரின் துணைத் தலைவரான அனில் தாமஸ்.. “ஓடிடியில் முதலில் வெளியாகும் திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என்னும் சேம்பரின் முடிவில் மாற்றமில்லை…” என்கிறார்.

லிபர்ட்டி பஷீர் மேலும் இது குறித்துப் பேசுகையில், “மோகன்லால் தற்போது இதற்காக மிகவும் வருத்தப்படுகிறார். தியேட்டர்கள் திறக்க முடியாத சூழலினால்தான் ஓடிடியில் வெளியிடலாம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்தச் சூழல் இப்போது இல்லை. அதோடு பிலிம் சேம்பரின் ஒப்புதல் எதுவும் இல்லாமல்தான் திருஷ்யம்-2’ படம் ஓடிடிக்கு விற்பனையாகியுள்ளது. எனவே இந்த விஷயத்தில் சேம்பர் தலையிடக் கூடாது…” என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், “மலையாள திரையுலகத்தில் மோகன்லாலின் இடம் எது என்பதைப் புரிந்த கொண்டு மற்றவர்கள் பேச வேண்டும். தியேட்டர்களில் படங்கள் வெளியானால்தான் பொதுமக்களுக்கு திரைப்படங்கள் மீதான ஆர்வமும், மதிப்பும் இருக்கும். இந்தப் படத்தை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தியேட்டர்களுக்குக் கொண்டு வர முயற்சிக்கும்..” என்றும் லிபர்ட்டி பஷீர் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிட்டின் கொடூரத் தாக்குதல் நேரத்தில் கேரளாவில் இருக்கும் சினிமா தியேட்டர்கள் மூச்சுவிட்டதே நடிகர் விஜய்யின் மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டின்போதுதான்.

இந்த நேரத்தில் இந்தத் ‘திருஷ்யம்-2’ படமும் தியேட்டர்களுக்கு வந்தால் ரசிகர்களின் கூட்டமும், குடும்பத்தினரின் வருகையும் கூடும். இதனால் திரைப்படத் தொழிலுக்கு பெரும் லாபமாக இருக்கும் என்கிறார்கள் மலையாளத் திரையுலகத்தினர்.

Our Score