இயக்குநர் ஷங்கரிடம் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ‘ஆல்பம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன் தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியுள்ளார்.
தற்போது வசந்தபாலன் தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் ‘ஜெயில்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
பள்ளிக் காலத்தில் தன்னுடன் படித்த மூன்று நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.
இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகத் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்புதான் இன்று காலை சென்னையில் துவங்கியது. இந்தப் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும் சிங்கம்புலி, பரணி மற்றும் ஷா ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
‘வெயில்’, ‘ஜெயில்’ ஆகிய படங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்தின் இசைக்காக வசந்தபாலனுடன் இணைகிறார். எட்வின் சாக்கே ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றுகிறார். எம்.ரவிக்குமார் படத்தொகுப்பை கையாள்கிறார். நிர்வாக தயாரிப்பாளர்காக பிரபாகரும், லைன் புரொட்யூசராக நாகராஜ் ராக்கெப்பனும் பணியாற்றுகிறார்கள்.
“தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும்…” என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.



