தமிழ் சினிமாவில் புதிய, புதிய முயற்சிகளை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். கதையமைப்பில், காட்சியமைப்பில், திரைக்கதையில், படமாக்கலில், இயக்கத்தில் என்று அனைத்து துறைகளிலும் சினிமா துறையில் மாதத்திற்கு ஒரு முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ஒரு திரைப்படத்தை படமாக்கும் காலத்தை குறைப்பதில் மட்டும் யாரும் ஈடுபடுவதில்லை. ஏனெனில் ஒரே இயக்குநர்.. பல நடிகர், நடிகைகள், பல லொகேஷன்கள்.. என்று இருக்கும்போது இது சாத்தியமே இல்லை என்றாகிறது.
இந்த நேரத்தில் இயக்குநர் எம்.எஸ்.செல்வா என்ற புதியதொரு இயக்குநர் இந்தப் படமாக்கல் வித்தையில் புதிய சாதனையொன்றை நேற்று அக்டோபர் 21 வெள்ளியன்று நிகழ்த்தியிருக்கிறார்.
வெறும் பத்தே மணி நேரத்தில் தான் இயக்கிய படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரிந்திருக்கிறார் இயக்குநர் செல்வா. படத்தின் பெயர் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு திட்டமிட்டபடி முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத கால கடின உழைப்பினாலும், திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இயக்குநர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக் குழு.
மொத்தம் ஆறு கேமரா செட்டப்பில் ஏற்கெனவே படத்தில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்துதான் இன்று திட்டமிட்டு படமாக்கியிருக்கிறார்கள். குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் மூன்று பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் டாக்டர். பி.சரவணன், அனு கிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், இயக்குநர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெயக்குமார், தங்கவேலு, இசை – ராஜா, பாடல்கள் – இயக்குநர் எம்.எஸ்.செல்வா, ஒப்பனை – பழனி, நடனம் – மது, மக்கள் தொடர்பு – வீ.கே.சுந்தர், தயாரிப்பு – எம்.எஸ்.செல்வா, ஜி. அழகர், இயக்கம் – எம்.எஸ்.செல்வா.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் எம்.எஸ்.செல்வா, “இன்று தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி சப்ஜெக்டான ஹாரர் காமெடிதான் இந்தப் படத்தின் களம். ஒரு வீட்டுக்கு புதுமண தம்பதிகள் குடி வருகிறார்கள். கணவனுக்கு, மனைவியை பிடிக்கவில்லை. எனவே மனைவிக்கு பேய் நம்பிக்கையை வரவழைத்து அவளை விரட்டியடிக்க சில நண்பர்களை வேலைக்கு அமர்த்துகிறான். திகிலுடன் முதல் பாதி சென்றுகொண்டிருக்கும்போதே இன்னொரு புதுமண தம்பதிகளும் அங்கே தங்க இடம் கேட்டு வருகிறார்கள். அவர்களை மாடி வீட்டில் தங்க வைக்கிறான் கணவன்.
இந்த நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் பேய்கள், தான் ஏற்பாடு செய்த போலி போலி பேய்கள் இல்லை… உண்மையான பேய்கள்தான் என்று அந்தக் கணவனுக்குத் தெரிய வருகிறது. அதன் பின் அந்த உண்மை பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க வயிறு குலுங்க வைக்கும் காமெடியாக சொல்கிறது இந்த ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படம்..” என்றார் உற்சாகத்தோடு.
இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குநர்கள் சேர்ந்து எடுத்த ‘சுயம்வரம்’ படம்தான் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப் பட்டியலில் நீடிக்கிறது. அதனை இந்த ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படம் முறியடித்து ‘லிம்கா’ சாதனைப் பட்டியலில் இடம் பெறுகிறது என்பது சாதனை விஷயமாகும்.
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!






















