“மரியாதை எங்கே…?” – கோபித்துக் கொண்ட சிவாஜியும், ஜெயலலிதாவும்..!

“மரியாதை எங்கே…?” – கோபித்துக் கொண்ட சிவாஜியும், ஜெயலலிதாவும்..!

பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கும் ஏ.எல்.எஸ்.வீரையா.. தனக்கும் ஜெயலலிதாவுக்கும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும் இடையில் ஏற்பட்ட மரியாதை சம்பந்தமான மோதல்கள் பற்றி சமீபத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர் இது குறித்துப் பேசும்போது, “ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த ஒரு படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்தபோது தினமும் காலையில் செட்டுக்குள் வரும்போது அவரைப் பார்க்கும் பலரும் ‘வணக்கம்’ வைப்பார்கள். சிவாஜியோ, பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டுப் போவார். நானும் சில நாட்கள் சிவாஜிக்கு வணக்கம் வைத்தேன். என்னிடமும் அதையேதான் செய்தார்.

நானும் நான்கைந்து நாட்கள் செய்து பார்த்தேன். சிவாஜியும் பதிலுக்கு ‘வணக்கம்’ வைப்பார்.. அல்லது கையையாவது அசைப்பார் என்று எதிர்பார்த்தேன். சிவாஜி எதுவும் செய்யவில்லை. இதனால், ஆறாவது நாளில் இருந்து நானும் சிவாஜிக்கு வணக்கம் வைப்பதை நிறுத்திவிட்டேன். இதை சிவாஜி கவனித்துவிட்டார்.

உடனேயே அடுத்த நாளே தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடம் சென்று என்னைப் பற்றிப் புகார் சொல்லிவிட்டார் சிவாஜி. ஏ.எல்.எஸ். என்னை அழைத்துக் கேட்டபோது, நானும் நடந்ததைச் சொன்னேன். “நான் சிவாஜிக்கு 5 நாட்களாக வணக்கம் சொன்னேன் ஸார். ஆனால், அவர் பதிலுக்கு எங்களுக்கான மரியாதையைத் தரவில்லை. அதனால் நான் இனிமேல் அவருக்கு வணக்கம் சொல்ல மாட்டேன். வேண்டுமென்றால் என்னை வேலையை விட்டுத் தூக்கிக் கொள்ளுங்கள்” என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டேன்.

இதன் பின்பு சிவாஜியையும், என்னையும் நேரில் அழைத்த ஏ.எல்.எஸ். சிவாஜியிடம் நான் சொன்னதை அப்படியே சொல்லி.. “இது ஒரு சின்ன விஷயம்.. அவரும் பதிலுக்கு உங்ககிட்ட இருந்து ஒரு மரியாதை எதிர்பார்க்கிறார். அவ்வளவுதான். இதை இத்தோட விட்ருங்க..” என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.

இதன் பிறகு நாங்கள் சமாதானமாகி அந்தப் படத்தில் இணைந்து பணியாற்றினோம். நடிகர் திலகத்தின் கடைசிக் காலம்வரையிலும் நான் அவ்வப்போது அவரை நேரில் சென்று பார்த்து வருவேன். அவருடன் நல்ல தொடர்பில் இருந்தேன்.

இதேபோல் வேறொரு படத்தில் செல்வி.ஜெயலலிதாவுடன் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எந்த ஆர்ட்டிஸ்ட் செட்டுக்கு வந்தாலும் காரில் வந்து இறங்கும்போதே நான் அவர்கள் அருகில் சென்று அழைத்து வருவேன். ஷூட்டிங் முடிந்துபோகும்போதும் அதேபோல் கார்வரையிலும் சென்று அவர்களை வழியனுப்பி வைப்பேன்.

ஒரு நாள் ஜெயலலிதா ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது எனக்குத் தயாரிப்பாளரிடமிருந்து போன் வந்துவிட்டது. அதனால் நான் போன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஜெயலலிதா காரில் ஏறுவதற்காகச் சென்றார். நான் வருவேனா என்று எதிர்பார்த்தார். நான் வராததால் ஏமாற்றத்துடன் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

ஆனால், வீட்டிற்குச் சென்றவுடன் தனது அம்மா சந்தியாவிடம் என்னைப் பற்றிப் புகார் சொல்லிவிட்டார். “நான் அவரை மதிக்கவில்லை…” என்றும், “வழியனுப்ப வரவில்லை…” என்றும் சொல்லிக் கத்திக் கூப்பாடு போட்டிருக்கிறார். மறுநாள் சந்தியா என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்தார்.

நானும் சென்றேன். அப்போது சந்தியா நடந்தது பற்றிக் கேட்டபோது நான், “அந்தச் சமயத்தில் தயாரிப்பாளருடன் போனில் பேசிக் கொண்டிருந்ததால் அம்முவை வழியனுப்பி வைக்க முடியவில்லை…” என்றேன். இதை சந்தியா, ஜெயலலிதாவிடம் என் முன்னிலையிலேயே சொல்லி அவரைச் சமாதானப்படுத்தினார்.

கால்ஷீட் குழப்பங்கள், ஆட்கள் தகராறு, பணப் பிரச்சினை.. இதையெல்லாம் தாண்டி இது போன்ற மரியாதை விஷயங்களிலும் நாங்கள் மாட்டிக் கொண்டு தவித்ததெல்லாம் தமிழ்ச் சினிமாக்களில் நடந்திருக்கிறது..” என்கிறார் தயாரிப்பு நிர்வாகி வீரைய்யா.

Our Score