full screen background image

‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது லஷ்மியா..?

‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது லஷ்மியா..?

1994-ம் ஆண்டு சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்தப் படத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா நடித்திருந்தனர். சரத்குமார் இதில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஈரோடு செளந்தர் கதை எழுத, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

சரத்குமாரின் அப்போதைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவரும், சரத்குமாரும் இணைந்து பாடிய ‘கொட்டப் பாக்கு கொழுந்து வெத்தலை’ என்ற பாடலும், அதற்கான நடனமும் ரசிகர்களை மிக அதிகமாக கவர்ந்திழுத்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

படத்தில் குஷ்பூ நடித்திருந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை லஷ்மிதானாம். வயதான லுக்கில் படத்தில் தோன்ற வேண்டுமென்பதால் லஷ்மிதான் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

நடிகை லஷ்மியை சந்தித்து கதை சொல்வதற்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தற்செயலாக குஷ்பூவை சந்தித்திருக்கிறார். குஷ்பூவிடம் சாதாரணமாக இந்தக் கதையையும், கேரக்டரையும் சொல்லி லஷ்மியை சந்திக்க வந்திருப்பதாகச் சொல்ல.. இடைமறித்த குஷ்பூ தானே இந்தக் கேரக்டரை செய்வதாகச் சொல்லி தட்டிப் பறித்துவிட்டாராம்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரே சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

Our Score