1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ திரைப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு திரைப்படம். மணிரத்னத்தின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘யமுனை ஆற்றிலே’ என்ற பாடல் தனித்துவம் பெற்றது. வயது வித்தியாசம் பாராமல் அத்தனை இசைப் பிரியர்களையும் கவர்ந்த பாடல் இது. வெறுமனே 1 நிமிடம் 50 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் இந்தப் பாடல் இன்றுவரையிலும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘96’ திரைப்படத்தில்கூட இந்த ‘யமுனை ஆற்றிலே’ பாடலை ஒரு முக்கியமான திருப்பு முனை காட்சிக்கு அடையாளமாக வைத்திருந்திருந்தார்கள்.
‘தளபதி’ படத்தில் இந்தப் பாடல் காட்சியில் நடித்திருந்த நடிகை ஷோபனா சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்தப் பாடலின் ஸ்பெஷல் பற்றிப் பேசியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “பொதுவா தமிழ்ச் சினிமாவில் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் என்று புகழ் பெற்ற இயக்குநர்கள் அவர்களுக்கே ஸ்பெஷலான வகையில் ஒரு பாடலை உருவாக்குவார்கள். அதுபோலத்தான் மணிரத்னம் இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார்.
ஒரு பாட்டுல நீங்க சொல்ற விஷயத்தோட எமோஷன்ஸ் இல்லைன்னா அந்தப் பாட்டு ஹிட்டாகாது. ஆனால் மணிரத்னம் இந்தப் பாட்டுல அத்தனை எமோஷன்களையும் கொண்டு வந்திருந்தார். நீங்க இத்தனை வருஷம் கழிச்சும் அந்தப் பாட்டைப் பத்திப் பேசுறீங்கன்னா அதுதான் அதோட வெற்றியோட அடையாளம்.
அந்தப் பாட்டுல வர்ற இடத்தோட சுற்றுச் சூழல்.. ரஜினி ஸாரோட மாஸ் ரியாக்ஷன், ஒரு அப்பாவி பெண்ணோட வாயசைப்பு. மிக நேர்த்தியான இசை, எல்லாத்துக்கும் மேல ரொம்ப, ரொம்ப எளிமையான பாடல் வரிகள்.. இது எல்லாமும் சேர்ந்துதான் நமக்கு அந்தப் பாடலை மக்களுக்கு ரொம்பப் பிடிக்க வைச்சிருக்கு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை ஷோபனா.