தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென்று குதித்த நடிகை சுஹாசினி..!

தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென்று குதித்த நடிகை சுஹாசினி..!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தற்போது மிக, மிக உக்கிரமாக உள்ளது. பல கட்சியினரும் மிகுந்த உழைப்புடன் மக்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் திரைப்படத் துறையினரின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும் விறுவிறுப்பாக உள்ளது. காரணம் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகை குஷ்பூ, நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் சினேகன், நடிகர் மயில்சாமி ஆகியோர் போட்டியிடுவதுதான்.

பல்வேறு கட்சிகளிலும் இருக்கும் பல்வேறு திரை நட்சத்திரங்களும் இந்தத் தேர்தல் களத்தில் தாங்கள் சார்ந்துள்ள கட்சியினருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுக சார்பாக நடிகை விந்தியா, அமுமுக சார்பில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, பா.ஜ.க. சார்பில் நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி, கலா மாஸ்டர், தி.மு.க.வின் சார்பில் நடிகர் சந்திரசேகர், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா என்று பலரும் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தத் தேர்தல் களத்தில் நடிகை சுஹாசினியும் குதித்திருக்கிறார். இதுவரையிலும் தேர்தல் பற்றியோ.. தனது சித்தப்பா கமல்ஹாசனின் கட்சி பற்றியோ.. அவரது தேர்தல் போட்டி பற்றியோ பேட்டியே கொடுத்திருக்காத நடிகை சுஹாசினி இன்று முதல் தனது சித்தப்பாவான நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவர் போட்டியிடும் கோவை தெற்குத் தொகுதியில் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

நடிகை சுஹாசினியின் இந்தத் திடீர் முடிவை தமிழ்த் திரைப்படத் துறையினர் பலரும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். ஏனெனில் சுஹாசினியின் கணவரான மணிரத்னம் இதுவரையிலும் எந்தக் காட்சி சார்பாகவும் ஒரு சின்னக் கருத்தைக் கூட உதிர்க்காதவர். பா.ஜ.க.வை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்.

இருந்தும் தனது சித்தப்பாவுக்காக வீட்டுப் படியிறங்கி வந்து ஓட்டுக் கேட்கும் சுஹாசினியின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

Our Score