full screen background image

விவேகம் – சினிமா விமர்சனம்

விவேகம் – சினிமா விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் அஜித்குமார் நாயகனாக நடித்திருக்கிறார். காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஆனந்த் ஓபராய், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலை – மிலன், ஒளிப்பதிவு – வெற்றி, இசை – அனிருத், படத் தொகுப்பு – ரூபன், தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் – சிவா.

பல்கேரியாவில் இருக்கும் Counter Terrorist Squad என்கிற அமைப்பில் ஒரு ரகசிய ஏஜெண்ட்டாக இருக்கிறார் அஜய்குமார் என்னும் அஜித்குமார். இவருடன் விவேக் ஆனந்த் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட மேலும் மூன்று பேரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

ஒவ்வொரு ஆபரேஷனிலும் இந்த நால்வர் கூட்டணி வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறது. இந்தக் குழுவுக்கு தலைமை வகிக்கும் அஜித் பல சந்தர்ப்பங்களில் தனது குழுவினரை துப்பாக்கிக் குண்டுகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். தனது டீம் மெம்பர்களை தனது உயிரினும் மேலான உடன்பிறப்புகளாக நம்புகிறார் அஜித்.

பல்கேரியாவில் தமிழ் ஹோட்டலை நடத்தும் காஜல் அகர்வாலுடன் அஜித்திற்கு காதலாகி, அவரையே கல்யாணமும் செய்து கொள்கிறார் அஜித்.

இந்த நேரத்தில் பூமிக்கு அடியில் வெடிக்கக் கூடிய வகையில் அணுகுண்டுகளை உலகத்தின் பல இடங்களிலும் புதைத்து வைத்திருக்கிறார்கள் சில தீவிரவாதிகள். இந்த குண்டுகளை சில நாடுகளில் வெடிக்க வைத்து, செயற்கையாக பூகம்பங்களை ஏற்படுத்தி, அந்தந்த நாடுகளில் இயற்கை பேரிடர்களை வரவழைத்து, அந்த நாட்டை நிலை குலையச் செய்து, இதன் மூலமாக தங்களுடைய வணிகத்தை அந்தந்த நாடுகளில் செயல்படுத்தத் துவங்குகிறார்கள் சில உலகளாவிய பலசாலி தொழிலதிபர்கள்.

இப்படியொரு அதிபுத்திசாலித்தனமான கூட்டம் அடுத்து இந்தியாவை குறி வைத்திருக்கிறது. இதையறியும் அஜித் அண்ட் கோ இந்த கொடிய செயலை நிறுத்த எண்ணுகிறார்கள். இதற்காக இந்த குண்டுகளை வெடிக்காமல் இருக்க வைக்கும் புரோகிராம் கோடிங்கை தேடுகிறார்கள் அஜித்தும் அவரது குழுவினரும்.

இதற்காக இணைய ஹேக்கிங் துறையில் உலகத்திலேயே அதி புத்திசாலியான அக்சரா ஹாசனை தேடுகிறார்கள். பல்கேரியாவிலிருந்து குரோஷியா, செர்பியா என்றெல்லாம் பயணம் செய்து கடைசியாக செர்பியாவில் அக்சராவை கண்டு பிடிக்கிறார் அஜித்.

ஆனால் அக்சராவோ தான் வெறும் ஹேக்கர் மட்டும்தான் என்றும், ஒரிஜினல் கோடிங் தன்னிடம் இல்லை என்கிறார். இதையறியும் அஜித்தின் கூட்டாளிகள் அக்சராவை விட்டுவிட்டு திரும்பும்படி அஜித்திடம் சொல்கிறார்கள். ஆனால் அஜித் இதனை ஏற்காமல் அக்சராவை காப்பாற்ற நினைக்கிறார்.

இந்த நேரத்தில் எங்கிருந்தோ வரும் ஒரு கூட்டம் அக்சராவை குறி வைத்து தாக்க இந்தத் தாக்குதலில் அக்சரா பலியாகிறார். இதனால் வெகுண்டெழும் அஜித் தாக்கியவர்களை கொலை செய்துவிட்டு தப்பித்து வர.. அவருடைய நண்பர்களே அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

தான் உயிருக்கு உயிராய் நினைத்த நண்பர்களே தனக்கு எதிரியாய் இருப்பதை நம்ப முடியாமல் திகைக்கும் அஜித்.. அவர்களுடைய கொடூரத் தாக்குதலில் இருந்து எப்படியோ தப்பித்துவிடுகிறார்.

பின்னர் அஜித் உயிருடன் இருப்பதை அறியும் விவேக் ஓபராய் தலைமையிலான டீம், இப்போது பிளேட்டை மாற்றிப் போட்டு உலகத்தில் நடந்த அத்தனை குண்டு வெடிப்புகளையும் அஜித்தின் மீது சுமத்துகிறது. அஜித் ஒரு ‘மோஸ்ட் வான்ட்ட் டெர்ரரிஸ்ட்’ என்று உலகத்தை நம்ப வைக்கிறார்கள்.

இதன் மூலமாக அஜித்தை கொலை  செய்ய சர்வதேச அளவில் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு அதனை செயல்படுத்த நினைக்கிறார் விவேக் ஓபராய். தன்னுடைய ஒரு காலத்திய நட்புகளே இப்போது தன்னை கொலை செய்ய நினைப்பதை அறியும் அஜித் அதனைத் தடுக்க நினைக்கிறார். இன்னொரு பக்கம் இந்தியாவை தாக்கப் போகும் அந்த செயற்கையான பூகம்ப முயற்சியைத் தடுத்து இந்திய துணைக் கண்டத்தைக் காப்பாற்றவும் நினைக்கிறார்.

இது முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..!

அஜித்திற்கு இது 25-வது வருடம். இத்தனையாண்டு கால அவருடைய திரையுலக வாழ்க்கையில், இந்தப் படத்தில் அவர் கொடுத்திருக்கும் உழைப்பை போல வேறு எந்தப் படத்திலும் கொடுத்திருக்க மாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அந்த அளவுக்கு கடுமையான உழைப்பை படத்தில் கொட்டியிருக்கிறார்கள். சண்டை பயிற்சியாளர், கலை இயக்குநர், உதவி இயக்குநர்கள், சண்டை கலைஞர்கள் என்று அத்தனை பேரின் வியர்வையும், உழைப்பும் இந்தப் படத்தின் பிரேம் பை பிரேம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆனால்..

படத்தில் கதை என்ற ஒரு வஸ்து இல்லவே இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய கொடுமை. அஜித்குமார் வேலை செய்யும் அந்த அமைப்பை யார் நடத்துவது..? இந்திய அரசா..? ஐ.நா. சபையா..? ஐரோப்பிய யூனியனா..? அல்லது நேட்டோ அமைப்பா..? எது என்பதே தெரியாமல் சர்வதேச அரசியலை உலுக்கும் அளவுக்கான ஒரு முக்கிய விஷயத்தில் சட்டென்று ஜேம்ஸ்பாண்ட் பாணியில் குதித்து செயற்கரியச் செயலைச் செய்கிறார் அஜித்.

படத்தில் துப்பாக்கி குண்டுகளும், மனிதர்களும் பறந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆக்சன் காட்சிகளை அல்வா சாப்பிடுவது போல படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா.

படத்தின் துவக்கத்தில் வரும் அறிமுகக் காட்சியும், அக்சரா ஹாசனின் காதலனை தேடி குரோஷியாவில் ரவுடி கும்பலின் இருப்பிடத்திற்கே சென்று தாக்கும் காட்சியிலும் இப்பேர்ப்பட்ட சண்டை பயிற்சிகளுக்கு கலைஞர்கள் எப்படி இத்தனை கடுமையாய் உழைத்தார்கள் என்று யோசிக்க வைத்திருக்கிறார்கள்.

என்ன இருந்து.. என்ன புண்ணியம்..? கதை இல்லியே..?

குரோஷியா, செர்பியா, பல்கேரியா என்று கதை மூன்று நாடுகளிலும் பயணிக்கிறதே ஒழிய.. எதற்காகச் செல்கிறார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள்.. ஏன் செய்கிறார்கள்.. என்பதற்கான விளக்கமே படத்தில் இல்லை.

இது தமிழ்ப் படம் என்பதையே உணர முடியாத அளவுக்கு இயக்குநர் சிவா படமெடுத்திருக்கிறார். அக்சராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை கண்டறியும் காட்சியில் அந்த மருத்துவருடன் அஜித் பேசும் வசனங்களை மட்டும் தனியாக கேட்டால் “கோணங்கி எழுதிய சிறுகதையில் வரும் வரிகளா..?” என்று கேட்பீர்கள். அந்த அளவுக்கு சாமான்ய ரசிகனுக்கும் அன்னியமாக இருக்கின்றன பல வசனங்கள். தமிழைவிடவும் ஆங்கில வசனங்களே அதிகம் என்பதும் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

அதிலும் பல வசனங்கள் ரிப்பீட்டாகிக் கொண்டேயிருக்க.. எதற்காக இப்படி திரும்பத் திரும்ப ‘ஜன கன மண’ போல ரசிகர்களின் மனதில் பதிய வைக்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களை பாராட்ட வேண்டியதுதான். ஆனால் இப்படி சீன் பை சீன் பாராட்டிக் கொண்டேயிருந்தால் எப்படி..? அதிலும் வில்லனாக நடித்திருக்கும் விவேக் தன்னைப் பற்றிச் சொல்கிறாரோ இல்லையோ.. அஜித் எப்போதும் சாக மாட்டார் என்று அவரே கட்டியம் கட்டிச் சொல்லிக் கொண்டே போகிறார். பின்பு எப்படி அவரது கேரக்டரை ரசிக்க முடியும்..?

அஜித்தோ மனைவியிடம் பேசும்போதும் அதே மாடுலேஷன்.. வில்லன்களிடம் பேசும்போதும் அதே மாடுலேஷன்.. அக்சராவிடம் அமைதியாய் பேசும்போதும் அதே மாடுலேஷன்.. இப்படி வித்தியாசமே காட்டாமல் வசனங்களை ஒப்பித்திருப்பதால், பல சமயங்களில் கடுப்புதான் நம் தலைக்கு ஏறுகிறது. அதிலும் அவரைப் புகழ்ந்து பாடும் வசனங்களை அவரே பேசுவதுதான் எரிச்சல்.

இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாய் இருக்கும் சசிகுமார், சமுத்திரக்கனி கோஷ்டியையே இந்தப் படத்தில் அஜித்குமார் ஓரங்கட்டிவிட்டார். அந்த அளவுக்கு ‘நட்பு’ என்கிற வார்த்தையை வைத்து ‘போதும்பா.. போதும்பா..’ என்று கதறும் அளவுக்கு கிளாஸ் எடுத்திருக்கிறார் அஜித். போதும் தல.. விட்ருங்க.!

பல குளோஸப் காட்சிகளில் அஜீத் தாத்தா லெவலுக்கு போய்விட்டார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பின்பு எப்படி ரசிகர்களால் அந்த கேரக்டரோடு ஒன்ற முடியும்..? இதைப் பற்றி யாராவது யோசித்தார்களா.. இல்லையா..?

பல்கேரியா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் எத்தனை கடுமையாய் உழைத்திருக்கிறார் என்பது கடைசியான டைட்டிலில் தெரிகிறது என்றாலும் மனதில் நிற்காத கதை என்பதால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

காஜல் முதல்முறையாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனால் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்கூட என்ன என்றே தெரியவில்லை. பல்கேரியாவில் பரத நாட்டியத்தையும், தமிழ் சங்கீதத்தையும் கற்றுக் கொள்ளவும் ஆட்கள் இருப்பதை நினைத்துப் பார்க்கும்போது, நம் நெஞ்செல்லாம் ஆனந்தத்தில் விம்முகிறது.

‘மனோகரா’வின் தர்பார் காட்சியில் கண்ணாம்பா ‘பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா’ என்று முழக்கமிடுவாரோ.. அதற்கு ஒப்பீடாக கிளைமாக்ஸ் காட்சியில் காஜலும் பாட்டு பாடி அஜித்தின் ஆண்மையை பொங்க வைக்கிறார். சத்தியமாக அஜித்தின் படத்தில் இப்படியொரு ஆண்ட்டி கிளைமாக்ஸை எதிர்பார்க்கவே இல்லை.

அந்த சண்டை காட்சியை அழகாக படமாக்கியிருக்கிறார் என்றாலும் பீங்கானின் டிஸைன் அழகு என்பதால், அதிலிருக்கும் திராவகத்தைக் குடிக்க முடியுமா என்ன..?

படத்தில் கொஞ்ச நேரமேனும் மூச்சுவிட வைத்து சுவாரஸ்யப்படுத்தியது அக்சரா ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். அதிலும் அக்சராவை பூங்காவுக்கு வரவழைக்கும் திட்டமும், ‘பிளான் பி’ திட்டமும் அசத்தல்.. இதன் பின் கொஞ்ச நேரத்திற்கு படம் ஓடும் அந்த ஓட்டம், நிச்சயமாக ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமேயில்லை.

இதற்கு நடுவிலேயே காஜல் மருத்துவமனையில் இருந்து “உங்க பிள்ளையோட லப்டப்பை கேளுங்க…” என்று சொல்ல.. அத்தனை டென்ஷனிலும் அஜித் அதை கேட்பது.. இதுவரையிலுமான கணவன், மனைவி செண்டிமெண்ட் காட்சிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.. வேறென்ன சொல்றது..?

விவேக் ஓபராய்க்கு அசத்தலான அறிமுகம் என்றார்கள். அவரே அப்படித்தான் சொன்னார். ஆனால் படத்தில் அவரது நடிப்பு ஓகேதான் என்றாலும் கதையில் அவருக்குரிய கேரக்டர் ஸ்கெட்ச் வலுவாக இல்லாததால் அவர் அதிகம் பேசப்பட வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

‘பாகுபலி’ படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார் போலும். அந்தக் குரலுக்கு மட்டும் ஒரு ‘ஜே’ போடுவோம்..

கருணாகரன் காமெடி என்று நினைத்து வசனங்களை ஒப்பித்திருக்கிறார். எப்போதும் காமெடியில் எதிரணியின் ரியாக்ஷன்தான் மிகவும் முக்கியம். அஜித்தோ, கருணாகரன் பேசும் அத்தனை வசனத்தையும் ராணுவ கோர்ட்டில் விசாரணை செய்யும் அதிகாரி போல எதிர்கொள்வதால் அத்தனையும் புஸ்வாணமாகிவிட்டது.

அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்களில் பாதி ஆங்கிலத்தில் இருப்பதால் யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியும் பாடல்களுக்கு சப்-டைட்டில் போட்ட முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் இந்தப் படமே பெற்றுள்ளது. பின்னணி இசையில்கூட காதைக் கிழித்தெடுத்திருக்கிறார் அனிருத்.  

திராவிட இயக்க வழித்தோன்றலில் வந்த குடும்பம் தயாரித்த படம் என்பதால் சப் டைட்டிலிருந்து மெயின் டைட்டில்வரையிலும் பல தமிழ் வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள் இருந்தது மன்னிக்க முடியாத குற்றமாகிறது.

படத்தில் பெரும் பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் வெற்றிதான். அவருடைய பிரமாதமான ஒளிப்பதிவில்தான் காட்சிகள் அனைத்தும் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மூன்று நாடுகளின் அழகையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தின் தொகுப்பாளர் ரூபனும் கவனிக்கப்பட வேண்டியவர். ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் இந்தப் படத்தில் இவருடைய திறமையினால் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.

அஜித்தை வைத்து ஏற்கெனவே ‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற இரு படங்களை கொடுத்த சிவா, இந்த மூன்றாவது படத்தை சர்வதேச அளவுக்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு நிகராக கொண்டு சென்றிருக்கிறார்.

முதல் பாதியில் பட்டாசு போல துப்பாக்கிக் குண்டுகள் வெடித்துக் கொண்டேயிருக்க… அடுத்த பாதியில் அஜித்தின் கெத்தை கூட்டுவது போன்ற காட்சிகள் நிறைய இருப்பதும், சம்பந்தமில்லாமல் இடையிடையே செண்ட்டிமெண்ட் காட்சிகள் தலையை விரித்துப் போட்டு ஆடியிருப்பதும்தான் படத்திற்கு எமனாக போய்விட்டது.

அதிரடி, சரவெடி என்று சொல்லி காதல், சென்டிமெண்ட், நட்பு, துரோகம், தேசப்பற்று என்று அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா. ஆனாலும் பேஸ்மெண்ட்டில் இருந்திருக்க வேண்டிய கதை இல்லாததால், எல்லாமே தள்ளாடுகிறது.

‘விவேகம்’ என்ற தலைப்புக்கு ஏற்ற இந்தப் படம் விவேகமாக எடுக்கப்படவில்லை. ‘வேகம் மட்டுமே இருக்கிறது’ என்பதுதான் உண்மை.

“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலையிலும், ‘நீ தோத்துட்ட தோத்துட்ட’ன்னு, உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிறவரை எவனாலும் எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. Never ever give up..” – இதுதான் இந்தப் படத்தின் மூலமாக அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி.

இது இந்தப் படத்தின் வெற்றி, தோல்வி பற்றிய விமர்சனங்களுக்கும் பொருந்தும்..!

Our Score