“அஜித் உழைப்பில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தார்…” – கலை இயக்குநர் மிலன் பேச்சு..!

“அஜித் உழைப்பில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தார்…” – கலை இயக்குநர் மிலன் பேச்சு..!

இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் வைரஸ் காய்ச்சல் போல பரவி வருகிறது.

இந்திய சினிமாவின் முதல் உளவு த்ரில்லரான இந்தப் படத்தில் அஜித்குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்திருக்கிறார்கள். சிவாவின் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது.

ஒரு  சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல், அதன் தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும்தான். இந்த ‘விவேகம்’ போன்ற ஒரு  பிரம்மாண்டமான சர்வதேச தரத்தில் தயாராகியிருக்கும்  தமிழ்  படத்தில் கலை இயக்கமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறதாம்.

‘விவேகம்’ படத்தின் கலை இயக்குநரான மிலன், இப்படத்திற்காக இதுவரை அவர் கையாளாத சில நுணுக்கங்களை கையாண்டுள்ளேன் என்கிறார்.

இது குறித்து கலை இயக்குனர் மிலன் பேசுகையில், “இந்த ‘விவேகம்’ படத்தில் பணி புரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும், உருவாக்கப்பட்டவிதமும் மிகவும் வித்தியாசமானது.

சர்வதேச தரத்தில் உருவாகியிருக்கும் முதல் தமிழ்ப் படம் இதுதான் என்று உறுதியாய் சொல்லலாம். இந்தப் படம்  பிரம்மாண்டத்தில் மட்டுமில்லாமல், தொழில் நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ்ச் சினிமா பெருமைப்படும் படமாகவும் இது இருக்கும்.

இந்தப் படத்திற்காக கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது.

உழைப்பிலும், அர்ப்பணிப்பிலும் எங்கள் எல்லோருக்கும் அஜித் சார் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணி புரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குநர் சிவா எனக்கு முழு சுதந்திரமும், ஊக்கமும் தந்திருந்தார். இதனால் சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளேன்.  

‘விவேகம்’ படத்திற்காக இயக்குநர் சிவாவின் உழைப்பும், புத்திசாலித்தனமான சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இந்த ‘விவேகம்’ படம் அஜித் சார் ரசிகர்களுக்கும் மற்ற பொதுவான தமிழ்ச் சினிமாவின் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்..” என்றார் மிகவும் பெருமையாக..!

Our Score