‘விஸ்வாசம்’ திரைப்படம் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது..!

‘விஸ்வாசம்’ திரைப்படம் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது..!

அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது.

2019-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள ‘விஸ்வாசம்’ படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

2019-ம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, இத்திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையையும் இத்திரைப்படம் எட்டியிருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் இத்திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் நிறுவனத்தின் உரிமையாளரான பிரசாந்த் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தையும் ரஷ்யாவில் வெளியிட்டிருக்கிறார்.

ரஷ்யாவில் ‘விஸ்வாசம்’ படத்தின் வெளியீடு பற்றிப் பேசிய பிரசாந்த், “எங்களுடைய செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

உண்மையில், இந்த நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இதுதான். இதில், குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் ரஷ்யாவில் 8-க்கும் அதிகமான நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக இது இருக்கப் போகிறது.

பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி இது போன்ற நல்ல கதையுள்ள படங்களால் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், இங்குள்ள ரசிகர்கள் தொழில் நுட்ப ரீதியான திரைப்படங்களை மட்டுமல்லாமல், உணர்வுள்ள நல்ல குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு படங்களையும்கூட மிகவும் ரசிக்கிறார்கள்.

மேலும், தமிழ் பேசும் மக்களைக் கொண்ட நாடுகளையும் தாண்டி, அஜித்குமாரின் பல திரைப்படங்களை ஆன்லைனில் பார்த்து, அவருக்கென ஒரு வலுவான ரசிகர்களும் இந்த நாடுகளில் அதிகமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..” என்றார்.

இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமைகளை நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் தனது ஏ & பி குரூப் நிறுவனத்தின் சார்பில் வாங்கியிருக்கிறார்.

Our Score