மாரி-2 – சினிமா விமர்சனம்

மாரி-2 – சினிமா விமர்சனம்

நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்த ‘மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடித்திருக்கிறார். மேலும், மலையாளத்தின் இப்போதைய முன்னணி இளம் நடிகரான டோவினா தாமஸும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றும், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – பாலாஜி மோகன், இசை –  யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு –  ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சி – சில்வா, தயாரிப்பு  மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ்.

இயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015-ம்  ஆண்டு வெளியான  திரைப்படம் ‘மாரி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி-2’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி, இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியன்று வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் அதே கெட்டப்பை மட்டும் வைத்துக் கொண்டு ஹீரோயின் காஜல் அகர்வாலை கழற்றிவிட்டுவிட்டு வேறு கதை செய்திருக்கிறார்கள்.

இப்போது தனுஷும், அவரது மிக நெருங்கிய நண்பரான கிருஷ்ணாவும் இணைந்து தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் போதை மருந்து தொழிலில் மட்டும் இறங்கக் கூடாது என்பதில் இருவருமே குறியாக இருக்கிறார்கள். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நண்பன் கிருஷ்ணா போதை மருந்துக்கு அடிமையாகி மிகக் கஷ்டப்பட்டதால் அவரை அதிலிருந்து காப்பாற்றி வைத்திருக்கிறார் தனுஷ்.

இந்த நேரத்தில் ஜெயிலில் இருக்கும் ரவுடியான டொவினோ தாமஸின் அண்ணனை ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றமைக்காக தனுஷ் தாக்கும்போது அதில் அவர் மரணமடைகிறான். இதனால் தனுஷ் மீது கோபப்படும் டொவினோ தனுஷை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜெயிலில் இருந்து தப்பித்து வருகிறார்.

இங்கே மாரியைச் சுற்றிச் சுற்றி வருகிறார் ‘அராத்து ஆனந்தி’ என்னும் சாய் பல்லவி. ஆட்டோ ஓட்டுநர் என்றாலும் அவர் மனம் முழுக்க தனுஷையே சுற்றிச் சுற்றி வருகிறது. தனுஷ் அவரை அலட்சியப்படுத்திக் கொண்டே காலத்தைக் கழிக்கிறார். ஆனாலும் அதற்குள்ளாக 2 டூயட்டுகள் ஆடிவிட்டார்கள்.

சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவு வாழ்க்கை வாழும் டொவினோ தாமஸ் தனுஷை மெல்ல, மெல்ல குறி வைத்து தனிமைப்படுத்த நினைக்கிறார். இதற்காக முதலில் தனுஷூக்கும், கிருஷ்ணாவுக்கும் இடையில் சித்து விளையாட்டு விளையாடி அவர்களைப் பிரிக்கிறார் டொவினோ. இப்போது கிருஷ்ணா டொவினோ பக்கம். இருவருக்கும் தனுஷ் பிடிக்காதவராகிவிட நேரடி மோதல் தொடங்குகிறது.

டொவினோ தாமஸுக்கும், தனுஷுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் குறுக்கே சாய் பல்லவி வர அவரது முதுகுத் தண்டில் துப்பாக்கி குண்டு பாய.. சாய் பல்லவி படுத்த படுக்கையாகிறார். இதோடு தனுஷ், சாய் பல்லவியுடன் தலைமறைவாகிறார்.

இடையில் எட்டாண்டுகள் ஓடிவிட.. முதலில் சென்னை மாவட்ட கலெக்டராக இருந்த வரலட்சுமி, இப்போது மாநில உள்துறையின் இணைச் செயலாளர். இப்போது தேர்தல் நேரம்.

கிருஷ்ணாவும் டொவினோவும் நெருங்கிய நண்பர்களாகி ஒரு பெரிய கட்சியின் தொகுதி பிரமுகர்களாகவும் இருக்கிறார்கள். அந்தச் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிற்க விரும்பும் கிருஷ்ணாவை மிரட்டி வாபஸ் வாங்க வைத்துவிட்டு டொவினோ தானே வேட்பாளராக நிற்கிறார்.

டொவினோ தேர்தலில் நிற்கக் கூடாது என்று நினைக்கும் வரலட்சுமி, டொவினோ மீதான பழைய வழக்குகளை தோண்டித் துருவுகிறார். அப்படியொரு வழக்குக்காக சாட்சி சொல்ல வேண்டி தனுஷ். சாய் பல்லவி இருவரையும் வலைவீசி தேடுகிறார் வரலட்சுமி.

தனுஷ் தானே நேரில் வந்து ஆஜராகி, தான் இந்த விஷயத்தில் இனி தலையிட விருப்பமில்லை என்கிறார். குண்டடிப்பட்ட காலத்திற்குப் பிறகு இப்போதைய எட்டாண்டு கால கதையை தனுஷ் சொல்கிறார். அவருடைய இப்போதைய குடும்பச் நிலைமையால் மறுபடியும் ரவுடியிஸத்திற்கு வர இயலாது என்கிறார். ஆனால் சூழல் அவரை வம்படியாக பழைய நிலைக்கே இழுத்துவிடுகிறது.

இதை எதிர்பார்க்காத டொவினோ திகைக்கிறார். அவர் யோசிப்பதற்குள்ளாக தானே நேரில் சென்று கிருஷ்ணாவிடம் நட்புப் பாராட்டி மீண்டும் நட்பை புதுப்பித்துவிடுகிறார் ‘மாரி’யாகிய தனுஷ்.

திரும்பவும் களத்தில் ‘மாரி’யாக குதித்திருக்கும் தனுஷை கொன்றே தீருவது என்று முடிவெடுக்கிறார் டொவினோ. டொவினோவை எப்படியாவது சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து சிறையில் தள்ளலாம் என்று நினைக்கிறார் வரலட்சுமி. கடைசியில் யார் நினைத்தது நடந்தது என்பதுதான் இந்த ‘மாரி-2’ படத்தின் திரைக்கதை.

இது முழுக்க, முழுக்க தனுஷின் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம். ஒரு ரசிகனின் தலைவன் எப்படியிருப்பானோ அப்படியேதான் திரையில் தோன்றுகிறார் தனுஷ். அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை அஜீத்திடமிருந்து யார் கைப்பற்றுவது என்பதில் தனுஷுக்கும், சிம்புவுக்குமான போட்டி நடக்கிறது என்பதால், இந்தப் படத்தை அதற்கான படிகளாகப் பயன்படுத்தியிருக்கிறார் தனுஷ்.

தலைகீழ் மாற்றமாக நாயகன் தனுஷ் ஆடிய ஆட்டத்துக்கெல்லாம் இயக்குநர் பாலாஜி மோகன் ஆடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தனுஷ் ராஜ்ஜியமாகத்தான் இருக்கிறது படத்தில்..!

ரவுடியாக, காதலனாக, கணவனாக, நண்பனாக.. ஒரு தந்தையாக என்று பல்வேறு குணாதிசயங்களைத் தாங்கியிருக்கிறார் மாரி என்னும் தனுஷ். முந்தைய பாகத்தில் ‘உரிச்சிருவேன்’ என்று வாய்ச் சவடால்விட்டவர் இந்தப் படத்தில் ‘செஞ்சிருவேன்’ என்று மிரட்டுகிறார்.

சாய் பல்லவியிடம் காதலைத் தெரிவிக்காமல் டபாய்த்து ஆண் மகன் தோரணையைக் காட்டி தனது ரசிகர்களிடத்தில் தனது கெத்தைக் காட்டுகிறார். அதே சாய் பல்லவி தன் உயிரைக் காப்பாற்றியவுடன் ‘காதலிக்காக உயிரையும்விடணும் மக்கா’ என்று தன் ரசிகர்களுக்கு அட்வைஸும் செய்கிறார்.

திரும்பவும் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கவும் துணிகிறார். மகனுக்காக விட்டுக் கொடுக்காத அப்பனாகவும் மாறுகிறார். பொது நலன் கருதி போதை மருந்து கடத்தலை மட்டும் செய்ய மாட்டேன்று சத்தியப்பிரமாணமே செய்கிறார். இப்படி ‘மாரி’யின் கெட்டப் படத்தில் ரீல் பை ரீல் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தனுஷின் கெட்டப் மாறினாலும் நடிப்பு அப்படியேதான் இருக்கிறது.

‘மாரி’ முதல் பாகம் போலவே இதிலும் அவரது ஆர்ப்பாட்டம்தான். பேச்சென்ன..? நடப்பதென்ன..? ஸ்டைல் காட்டுவதென்ன..? விரல் வித்தையென்ன..? ‘செஞ்சிருவேன்’ என்று ஸ்டைலாக சொல்வதென்ன..? என்று தன்னுடைய விசிலடிச்சான் குஞ்சுகளை அப்படியே ஓவராகவே விசில் அடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸில் அடுத்தப் பாகத்திற்கும் ஒரு பிட்டை போட்டு வைத்திருக்கிறார். பார்ப்போம்..

சாய் பல்லவி இந்தக் கதைக்கு சாலப் பொருத்தம். தனுஷ் இடைவேளைக்குப் பின்பு அவரைத் தூக்கிக் கொண்டே நடிக்க வேண்டும் என்பதால்தான் காஜல் அகர்வால் இதில் இல்லை என்பதை யூகிக்க முடிகிறது. பின்ன.. காஜலை தூக்கினார்ன்னா ஐயா தொபுக்கடீர்தான்..!

சாய் பல்லவியின் துள்ளல் நடனமும், நடிப்பும், இயற்கையான அழகும் ரசிகர்களைக் கட்டியிழுத்திருக்கிறது. ‘அராத்து ஆனந்தி’ என்கிற பெயரில் ஆட்டோ டிரைவராக வரும் சாய் பல்லவியின் ஒருதலைக் காதல் எல்லை மீறாமல் போய் கடைசியாக ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உண்மையாகிறது. அதற்குப் பின்னான காட்சிகளில் அழகான மனைவியாக அராத்து போய் ‘அமைதி ஆனந்தி’யாக பெயரெடுக்கிறார்.

‘ரவுடி பேபி’ பாடல் காட்சியில் சாய் பல்லவி தனக்குத் தெரிந்த அத்தனை நடன நுணுக்கத்தையும் காட்டியிருப்பதால் ஒன்ஸ்மோர் கேட்கத் தோன்றுகிறது. அப்படியொரு அப்ளாஸ் அந்தப் பாடலுக்கு. பிரபுதேவாவின் கோரியோகிராபியில் இந்தப் பாடலும், ஆட்டமும் செம..!

இப்போதும் தனியொரு நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணா இதில் நட்பு வேடம் பூண்டிருக்கிறார். தனுஷூக்கு நட்பு வேடத்திற்குப் பொருந்துகிறார் என்பதோடு லோக்கல் ரவுடி கேரக்டருக்கும் சாலப் பொருத்தம்.

மாவட்ட ஆட்சியராக வரலட்சுமி சரத்குமார். கெத்தான ரோல் என்றாலும் ஆக்சனை முகத்தில் காட்டிக் கொண்டு இறுக்கமான அதிகாரியாய் மாறியிருக்கிறார் வரு.

டொவினோ தாமஸ் மெயின் வில்லனாகியிருக்கிறார். ஆனால் அவரது குரலில் இருக்கும் மலையாள வாடையும், பப்ளி முகமும் வில்லத்தனத்துக்கு பெரும் இடையூறாய் இருக்கிறது. என்னதான் கோபமாக பேசினாலும் டொவினோவுக்கு வில்லத்தனம் செட்டாகவில்லை என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். அண்ணன் இதோடு வில்லன் கேரக்டர்களை நிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

தனுஷின் இரண்டு அல்லக்கைகளான ரோபோ சங்கரும், வினோத்தும் சரிசமமாக நின்று விளையாடியிருக்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் அடிக்கும் பன்ச் டயலாக்குகளும், காமெடி பேச்சுக்களும்தான் ரசிகர்கள் அல்லாதவர்களை சீட்டில் அமர வைத்திருக்கிறது.

இன்னொரு ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா. கொஞ்சமே என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கண்ணைக் கட்டுகிறது. காட்சிகளுக்கேற்ற ஒளி வெளிச்சத்தைப் பாய்ச்சிருக்கிறார். வரலட்சுமி “எல்லாத்தையும் நிறுத்திரணும்…” என்று தனுஷை மிரட்டும்போது பாதி லைட்டும், மீதி கருமையுமாக படமாக்கியிருக்கிறார்கள். அதோடு போதை மருந்து கடத்தல், அடிதடி, மிரட்டல் காட்சிகளெல்லாம் பாதி இருட்டில்தான். ஏதோ சிம்பாலிக்காக உணர்த்துகிறார்கள் போலும்..!

பாடல் காட்சிகளில் கலை இயக்குநருக்கு நிறையவே வேலை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். உடையலங்கார நிபுணரும் சிறப்பாக வேலை பார்த்து ‘கெத்து’ பாடல் காட்சியையும், ‘ரவுடி பேபி’யையும் கலர்புல்லாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

சண்டை இயக்குநரான சில்வாவுக்கு ஒரு ஷொட்டு. டெக்னிக்கலை பல வகைகளிலும் பயன்படுத்தி அதிகமாக ரத்தம் சிந்தாமல் பதமாக இயக்கியிருக்கிறார். ஆனாலும் இரண்டு இடங்களில் கத்துக் குத்துப் பட்ட பின்பும் ஸ்டெடியாக நின்று சண்டையிடும் தனுஷின் தைரியத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. பாராட்டிவிடுவோம்.

அதிலும் புருஸ்லீ ஸ்டைலில் சட்டையைக் கழட்டிவிட்டு சிக்ஸ் பேக்கையும் காட்டிவிட்டு இத்தனை வேக சண்டையிலும் கூலிங் கிளாஸ் கீழே விழுகாமல் பார்த்துக் கொண்டு சண்டையிட வைத்திருக்கும் சண்டை இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தீம் மியூஸிக்கே ரசிகர்களை அதிர வைக்கிறது. ‘ரவுடி பேபி’ பாடலின் வரிகள் புரியவே இல்லை என்றாலும்(அதுவா முக்கியம்) இசை கேட்க வைத்திருக்கிறது. மாரியின் ‘கெத்து’ பாடல் இன்னொரு பக்கம் ஆடவும் வைத்திருக்கிறது. இடைவேளைக்கு பின்பு ஒலிக்கும் இளையராஜாவின் இசையில் ஒரு அழகான  மெலடி பாடல் திரைக்கதையையும் சேர்த்து நகர்த்தியிருக்கிறது. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார் யுவன்.

 முழுக்க, முழுக்க மாஸ் கமர்சியல் என்பதால் லாஜிக்கெல்லாம் பார்ப்பதே தவறு என்று சொல்பவர்கள் இந்தப் படத்தையும் காப்பாற்றத்தான் பார்ப்பார்கள். சிறையில் இருந்து தப்பித்த டொவினோ தாமஸ், ஆள் அடையாளத்தை மாற்றிவிட்டு தேர்தலில் நிற்கும் அளவுக்கு போன பின்பும்கூட போலீஸுக்கு அவரைப் பற்றித் தெரியவில்லை என்றால் நம்பவா முடிகிறது..?

அதிலும் சிறையில் இருந்து தப்பித்தவரை தேடிப் பிடிக்கும் எந்த வேலையையும் காவல்துறை செய்வதாக இதில் இல்லை. ஆளாளுக்கு அடித்துக் கொண்டும், உதைத்துக் கொண்டும், கத்தியால் குத்திக் கொண்டும், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் சாக… மருந்துக்குக்கூட போலீஸ் ஸ்பாட்டுக்கு வரவில்லை என்பதும் அதிர்ச்சியான விஷயம்.

கடைசியாக கமிஷனர் ஒரு ஸ்கெட்ச் போட.. உடனிருக்கும் இன்ஸ்பெக்டர் ஒரு ஸ்கெட்ச் போட.. வரலட்சுமி ஒரு ஸ்கெட்ச் போட.. கடைசியில் யாருக்கு, யார் உதவுகிறார்கள் என்பதே புரியாமல் போய் குழப்பியடிக்கிறார்கள்.

ஒரு நகரில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய், ரவுடியிடம் பெரிதாக இருக்கிறது என்றால் சிட்டி கமிஷனர் அல்லது டி.எஸ்.பி. அல்லது மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்தான் அதைப் பற்றி ரவுகளிடம் பேசி எச்சரிப்பார். இதில் கொஞ்சம் வித்தியாசமாக மாவட்ட ஆட்சியரான வரலட்சுமியே தனுஷை நேரில் பார்த்து “ஒழுங்கா இருந்துக்க.. தொலைச்சிருவேன்..” என்று எச்சரிக்கிறார். என்னே மாவட்டக் கலெக்டர் இவங்க..!?

இதேபோல் உள்துறையின் துணைச் செயலாளர் ஆனவுடன் டொவினோ தாமஸ் மீது வழக்கு போட்டு அவரைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கான காரணத்தை வலுவாகச் சொல்லாமல் ஏதோ தன் பதவியை வைத்து தடுக்க முனைகிறார் என்பதாகவே மேலோட்டமாக புல் மேய்ந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன்.

என்ன செய்வது..? இதுவொரு மாஸ் ஹீரோவின் படம். அவருடைய ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது என்று மறைமுகமாக நமக்கு உணர்த்தப்படுவதால், கேள்விகளை பதிவு செய்வதோடு நாமும் நின்று கொள்வோம்..!

இந்த ‘மாரி-2’ தனுஷ் ரசிகர்களுக்கான படம்..! மற்றவர்களுக்கு அல்ல..!

 

Our Score