“தயாரிப்பாளர் கவுன்சில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?” – நடிகர் விஷால் கேள்வி

“தயாரிப்பாளர் கவுன்சில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?” – நடிகர் விஷால் கேள்வி

தமிழ்ச் சினிமாவில் திருட்டு டிவிடி பிரச்சினை அவ்வப்பொழுது எழும். பின்பு சத்தமில்லாமல் அடங்கிப் போகும். இப்போது இந்தப் பிரச்சினையை விஷால் கையில் எடுத்துள்ளார்.

ஏற்கெனவே அவர் நடித்த ‘பாயும் புலி’ படத்தின் திருட்டு டிவிடிக்கள் காரைக்குடியில் வெளியானபோது அவர்களை தானே நேரில் சென்று பிடித்து போலீஸிடம் ஒப்படைத்து ஒரு கவன ஈர்ப்பை செய்து தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஆனாலும் திருட்டு டிவிடி விற்பனை இப்போதும் வேகமாக விறுவிறுப்பாக நடைபெற்றுதான் வருகிறது.

சமீபத்தில் ‘தெறி’ மற்றும் ‘மனிதன்’ ஆகிய படங்கள் ஆம்னி பேருந்துகளில் திருட்டுத்தனமாக திரையிடப்பட்டது அறிந்தவுடன் தானே முனைந்து போலீஸில் புகார் செய்து பேருந்தைக் கைப்பற்ற வைத்தார்.

இந்த நிலையில் வரும் 20-ம் தேதியன்று விஷால் நடித்திருக்கும் ‘மருது’ படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், “மருது படத்தின் திருட்டு டிவிடி வெளியானால் நடப்பதே வேறு..” என்று எச்சரித்தார்.

இவருடைய எச்சரிக்கைக்கு பிரபல தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பெரும் புள்ளியும், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் கடும் கண்டனம் தெரிவித்தார். “தமிழகத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே இந்தத் திருட்டு டிவிடி தயாரிக்கப்படுவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை..” என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியான ‘24’ படத்தின் டிவிடி பெங்களூர் பிவிஆர் தியேட்டரில் தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வர.. அந்தப் படத்தின் விநியோகஸ்தரான ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா பெரும் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தயாரிப்பாளர் கவுன்சிலில் இது பற்றி புகார் கொடுத்து தன் புகாரின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் சங்கத்திலேயே உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நடத்தினார்.

உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டிய தலைவர் தாணு, “பெங்களூர் பிவிஆர் தியேட்டருக்கு இனிமேல் எந்தவித ஒத்துழைப்பும் தரப் போவதில்லை” என்று தீர்மானம் எடுத்தார். அதோடு அங்கே ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்களையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்தார்.

இப்படிச் சொல்லி ஆறு நாட்களாகியும் வேறு எந்த நடவடிக்கையையும் தயாரிப்பாளர் கவுன்சில் எடுக்காத்தால் நேற்று மாலை நடிகர் விஷாலும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று தலைவர் தாணுவை சந்தித்து கடுமையாக வாதிட்டுள்ளார்கள்.

இதற்கிடையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்று காலை தனது டிவிட்டர் அக்கவுண்ட்டில் தலைவர் தாணுவை கண்டித்து 2 டிவிட்டுகளையும் வெளியிட்டார் விஷால்.

vishal-thaanu-twitter-news

தொடர்ந்து அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று சொல்லி இன்று மாலை 5 மணிக்கு கொட்டும் மழையிலும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஷால். விஷாலுடன் ‘24’ படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் எல்ரேட் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நடிகர் விஷால் பேசும்போது, “24’ படத்தின் திருட்டு டிவிடி பெங்களூரில் இருக்கும் பி.வி.ஆர். சினிமா தியேட்டரில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல.. கடந்த 10 மாதங்களில் வெளியான ‘24’, ‘தெறி’, ‘வி.எஸ்.ஓ.பி.’, ‘இஞ்சி இடுப்பழகி’ உட்பட 7 தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு டிவிடிக்களும் இங்கேதான் படமாக்கப்பட்டுள்ளது.

அந்தத் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தோம். உடனடியாக செயற்குழுவைக் கூட்டி அந்தத் தியேட்டருக்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் ஒரு வாரமாகியும் இன்றுவரை வேறு எந்த நடவடிக்கையும் இல்லை. தலைவர் தாணு ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்றும் தெரியவில்லை..” என்றார்.

கோ-2 படத்தின் தயாரிப்பாளரான எல்ரேட் குமார் பேசுகையில், “எங்களுடைய தயாரிப்பான ‘கோ-2’ படத்தின் சில காட்சிகளை கியூபிலேயே நாங்கள் எடிட் செய்து தூக்கியெறிந்தோம். ஆனால் அந்தக் காட்சிகளும் சேர்ந்தே திருட்டு டிவிடியில் வெளியாகியுள்ளது..” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “தமிழ் சினிமாவின் திருட்டு டிவிடி பிசினஸில் ஆண்டுக்கு 800 கோடி முதல் ஆயிரம் கோடி ரூபாய்வரையிலும் புழங்குகிறது. 

திருட்டு டி.வி.டி.யால் தமிழ் சினிமாவின் வருமானம் 80 சதவீதம் காணாமல் போகிறது. 20 சதவீதம் மட்டுமே தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பல தயாரிப்பாளர்கள் இந்த்த் துறையை விட்டு வெளியேற வேண்டியதுதான்.

திரையரங்கு உரிமையாளர்கள் இது போன்ற திருட்டு டிவிடிக்கள் தயாரிக்கப்படுவதை தடுக்கும்விதமாக தங்களது தியேட்டர்களில் சிசிடிவி கேமிராக்களை அமைக்க வேண்டும்.

திருட்டு டிவிடியைத் தடுப்பதற்காக ஒரு திரைப்படம் வெளியான 15 நாட்களுக்குள் அதன் ஒரிஜினல் டிவிடியை வெளியிடலாம் என்று எண்ணியுள்ளோம். இதற்கான டிவிடி கடைகளின் முகவர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்படுவார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணு திருட்டு டிவிடிக்களுக்கெதிராக நாளைய தயாரிப்பாளர் கவுன்சில் கூட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். நாங்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்..” என்றார்.

‘தினத்தந்தி’யின் சிந்துபாத் கதை போல முடியவே முடியாத விஷயமான திருட்டு டிவிடி பிரச்சினை, தமிழ்த் திரையுலகில் நீண்டு கொண்டே செல்கிறது..!

திருட்டு டிவிடியை தடுக்க வேண்டுமெனில், ஒரு படம் வெளியான அன்றைக்கே அதன் ஒரிஜினல் டிவிடியை வெளியிட்டுவிடலாம்.

அல்லது.. தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுவதை நிறுத்திவைத்து வெளிநாட்டில் மட்டும் ஒரு மாதமோ அல்லது 15 நாட்கள் கழித்தோ படத்தை வெளியிடலாம்..!

ஆனால் இதனை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. தமிழகத்திலேயே படம் தோல்வியடைந்துவிட்டால், வெளிநாட்டு உரிமை அதிகம் விற்பனையாகாதே.. வசூல் குறையுமே என்று பயப்படுகிறார்கள்.

இதனால்தான் திருட்டு டிவிடிக்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால்கூட பரவாயில்லை.. தமிழகத்தின் தியேட்டர்களிலேயே படமாக்கும் அக்கிரமத்திற்கு முடிவு கட்டுங்கள் என்கிறார்கள்.

யார் இதற்கு முடிவு கட்டுவது..!?

Our Score