full screen background image

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் – சினிமா விமர்சனம்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் – சினிமா விமர்சனம்

அறிமுக நாயகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க அருந்ததி நாயர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மற்றும் தம்பி ராமையா, ஆடுகளம் முருகதாஸ், யோகி பாபு, ரோபா சங்கர், மனோபாலா, டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, ஜோ மல்லூரி, பாலா சிங், பாவேந்தன், சோனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – S.K.மிச்சல்,  இசை – R. தேவராஜன், படத்தொகுப்பு – லெனின் – மாருதி கிருஷ், வசனம் – J.R. ரூபன், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகம் – பாரதி, தயாரிப்பு – லெக்ஷ்மி டாக்கிஸ். ‘ப்ரியமுடன்’, ‘யூத்’, ‘வாட்டாகுடி இரணியன்’, ‘ஜித்தன்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 

ஹீரோ சஞ்சய் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஊரிலேயே ஒரு சுயதொழில் செய்து பிழைக்க வேண்டும் என்கிற கொள்கையில் இருக்கிறார். ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் வைக்கலாம் என்றெண்ணி அதற்காக பணம் திரட்ட முயல்கிறார். தன்னுடைய வீட்டின் பத்திரத்தை தனது அப்பா, அம்மாவுக்கே தெரியாமல் வங்கியில் வைத்து கடன் கேட்கிறார்.

அது கிடைப்பதற்கு தாமதமாகும் என்பதால் ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் சங்கிலி என்னும் ரவுடியிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார். ஜாமீனுக்கு அதே ஊரில் கடை வைத்திருக்கும் தன்னுடைய நண்பன் ஆடுகளம் முருகதாஸை அழைத்துப் போகிறார். முருகதாஸின் ஜாமீனை ஏற்றுக் கொண்டு, சங்கிலி 5 லட்சம் ரூபாயை சஞ்சயிடம் கொடுக்கிறார்.

வங்கி அதிகாரிகள் சஞ்சயின் வீட்டுக்கு பார்வையிட வந்தபோது விஷயம் அறிந்து சஞ்சயின் அப்பா கடன் அப்ளிகேஷனை பிடுங்கி கிழித்தெறிகிறார். இதனால் லோன் கிடைக்காமலேயே போகிறது. இதற்கிடையில் அந்த 5 லட்சம் ரூபாயையும் யோகியும், சஞ்சயும் செலவு செய்துவிட.. இப்போது சங்கிலிக்கு பணத்தை திருப்பித் தர முடியாத சூழல்.

இந்த நேரத்தில்தான் தம்பி ராமையா தனது கேமிராமேனுடன் ஊருக்குள் வருகிறார். தான் ஒரு சினிமா எடுப்பதாகவும், அதில் ஹீரோவாக நடிக்கும்படி சஞ்சயிடம் கேட்கிறார். அப்படி நடித்தால் அவனுக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாகச் சொல்கிறார். இந்தச் சம்பளத்துக்காகவே அவனும் ஒப்புக் கொள்கிறான்.

அந்த ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் தண்ணி பிரச்சனை. இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஓடும் ஆற்று நீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்பது பற்றி அடிதடியே நடந்திருக்கிறது. இப்போது இரண்டு ஊர் பெரியவர்களும் சமாதானம் பேசுகிறார்கள்.

இதுவரையிலும் தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்தி வந்த பக்கத்து ஊரை சேர்ந்த பாலாசிங், தண்ணீர் கேட்கும் அதே ஊரை சேர்ந்த ஜோ மல்லூரியின் மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தால் தண்ணீரை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்று கேட்கிறார். இதற்கு ஜோ மல்லூரியும் மகளிடம் அனுமதி கேட்காமலேயே ஒத்துக் கொள்ள… பஞ்சாயத்தில் இரு தரப்பினருமே இதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஜோ மல்லூரியின் மகளான அருந்ததி நாயரை பேருந்தில் பார்த்தவுடன் அவரையே ஹீரோயினாக்குவதாக தம்பி ராமையா முடிவெடுக்கிறார். ஆனாலும் அருந்ததிக்கே தெரியாமல் அவர் பின்னாலேயே போய் ரகசிய கேமிராவில் படம் பிடிக்கிறார் தம்பி ராமையா.

படம் முடிந்ததும் எப்படியும் 6 லட்சம் வந்துவிடும். அது கிடைத்ததும் சங்கிலியின் கடனை அடைத்துவிடலாம் என்று ஹீரோ நம்பிக்கையுடன் தம்பி ராமையா சொன்னபடியெல்லாம் நடித்துக் கொடுக்க.. படத்தை எடுத்து முடித்துவிட்டு 6 லட்சத்துக்கு செக்கை அனாயசமாக கிழித்தெடுத்து சஞ்சயின் கையில் கொடுத்துவிட்டு சென்னைக்கு கிளம்புகிறார் தம்பி ராமையா.

அந்த செக்கை அப்படியே சங்கிலியிடம் போய்க் கொடுத்துவிட்டு கெத்தாக வீர நடைபோட்டு திரும்புகிறார்கள் சஞ்சயும், முருகதாஸும். ஆனால் வீட்டில் அவர்களுக்காக ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது.

ஜோ மல்லூரியும் அவரது அடியாட்களும் சேர்ந்து சஞ்சயிடம் அருந்ததி எங்கே என்று கேட்கிறார்கள். விஷயம் புரியாமல் சஞ்சய் “எனக்கு தெரியாது…” என்று சொல்ல குடும்பமே அடி வாங்குகிறது. ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதை உணர்ந்த சஞ்சய் விளக்கம் கேட்க.. யுடியூபில் தம்பி ராமையா எடுத்த படத்தின் வீடியோவை காட்டுகிறார்கள்.

அதில் அருந்ததி நாயர் கையில் பையுடன் பேருந்தை பிடிக்க ஓடும் காட்சியும், அவளுக்கு முன்னால் அதே பேருந்தின் படிக்கட்டில் சஞ்சய் நிற்பதும் தெரிகிறது. இப்போது அருந்ததி காணாமல் போய்விட்டதாகவும், அவளை சஞ்சய்தான் கடத்தி வைத்திருப்பதாகவும் சொல்லி ஆள், ஆளுக்கு மாத்துகிறார்கள்.

உண்மையைச் சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால் அவர்களிடமிருந்து தப்பித்து சென்னைக்கு ஓடி வருகிறார்கள் ஹீரோவும், முருகதாஸும். வந்த இடத்தில் கே.கே.நகர் சிவன் பார்க்கில் தம்பி ராமையாவை பிடித்து விசாரிக்கிறார்கள். அப்போது தற்செயலாக அங்கே அருந்ததியையும் பார்த்துவிட அவளை பெரும்பாடுபட்டு பேச வைக்கிறார்கள்.

தான் பேஸ்புக்கில் ஒருவனை பார்த்து காதலித்துவிட்டதாகவும், அவனையே திருமணம் செய்ய நினைத்துள்ளதாகவும், அதனால்தான் அவனைத் தேடி சென்னைக்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார்.

அருந்ததியின் காதலனை தேடி தம்பி ராமையாவும், சஞ்சய்யும், முருகதாஸும் அலைகிறார்கள். அதேபோல் செக் பவுன்ஸ் ஆகி திரும்பி வந்துவிட்டதால் மிக கோபமான சங்கிலி தனது அடியாட்களுடன் சஞ்சய்யையும், முருகதாஸையும் கொலை வெறியோடு தேடியலைகிறான்.

கடைசியில் என்ன ஆகிறது..? அருந்ததியின் காதலனை கண்டுபிடித்தார்களா..? சஞ்சய், முருகதாஸ் கதி என்ன ஆனது என்பதெல்லாம் திரையில் பார்த்து சிரித்தபடியே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான்..!

வழக்கமான வட்டி, பணம், குடும்ப விஷயமாகத்தான் போகுமோ என்றெண்ணும் நேரத்தில் எண்ட்ரி கொடுக்கும் தம்பி ராமையாதான் படத்தின் கலரையே மாற்றியிருக்கிறார். படம் எடுக்கும் நிகழ்வுடன் துவங்கி எதற்காக எடுக்கிறார் என்பதையே சொல்லாமல் ஹீரோயினுக்கே தெரியாமல் ஷூட் செய்யும் யுக்திகள் பலவும் கலகலப்பானவை.

சஞ்சயை ஹீரோயின் பின்னாலேயே செல்ல வைப்பது.. பேருந்தில் “ஐ லவ் யூ” சொல்ல வைப்பதற்காக மல்லாடுவது.. பஸ் டிக்கெட்டின் பின்புறத்தில் எழுதி கொடுக்கச் சொல்வது.. காலையில் கோலம் போடும் காட்சியை ரசனையாக படமாக்குவது.. பேருந்தில் அருந்ததி ஓடி வந்து ஏறுவதற்குள் ஹீரோவை ஏற வைத்து அதையும் ஒரு அவசர கதியில் ஷூட் செய்து கொள்வது என்று இப்போதைய இளைய இயக்குநர்களுக்கு ஒரு முன் மாதிரியான இயக்குநராக சுவையான காட்சிகளை அமைத்துக் காண்பித்திருக்கிறார் தம்பி ராமையா. இந்தக் காட்சிகளை அமைத்த இயக்குநர் வின்சென்ட் செல்வாவுக்கு பாராட்டுக்கள்..!

தம்பி ராமையாவின் நடிப்பும், மாடுலேஷனுமே அந்தக் காட்சியை லயிக்க வைத்துவிடுகிறது. மனிதர் நடிப்பில் பின்னியெடுக்கிறார். தொடர்ந்து ஹோட்டலிலும் அவரது ஆக்சன் காட்சிகளே படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கின்றன.

ஹீரோ சஞ்சய் புதுமுகம். ஓரளவுக்கு நடித்திருக்கிறார். தன்னால் என்ன வருமோ.. அதைக் கொடுத்திருக்கிறார். ஹீரோயின் அருந்ததி நாயர்.. மலையாளத்துக்கே உரித்தான முகம். கண்களே ஆயிரம் கதைகள் பேசும். குளோஸப் காட்சிகளில் அத்தனை அழகும் அவரது முகத்திலேயே இருக்கிறது. நடிப்பும் ஓரளவுக்கு வந்து இயல்பாக நடித்திருக்கிறார். இத்தனை இளம் வயதிலேயே முதிர்ச்சியான நடிப்பை கிளைமாக்ஸில் காட்டியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.

ஆடுகளம் முருகதாஸும், யோகி பாபுவும் காமெடியன்கள் இல்லாத குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். குணச்சித்திரமும், காமெடியும் கலந்த கலவையாக இருவரும் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

இடைவேளைக்கு பின்பு ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளத்தையே ஹோட்டலில் அங்கும், இங்குமாக ஓடவிட்டு நகைச்சுவையை மிளிர வைத்திருக்கிறார் இயக்குநர். முருகதாஸ், சோனாவின் அறையில் கப்போர்டில் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சியும், அறைக்குள் ஒவ்வொருவரையும் வரவழைத்து அடித்து மயக்கமடைய வைத்து தூக்கிப் போடும் காட்சியிலும் செம ரகளை..!

எஸ்.டி.மிச்சலின் ஒளிப்பதிவு அருமை. கிராமத்தையும் அழகுற படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அதேபோல் ஹோட்டல் காட்சிகளிலும் இயற்கையான ஒளியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் திரைக்கதையில் இடர்ப்பாடு இல்லாமல் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார். நன்று..!

ரோபோ சங்கர், மயில்சாமி, மனோபாலா, சோனா, டெல்லி கணேஷ் என்று இன்னொரு கூட்டணியும் காமெடி செய்திருக்கிறது. ரோபோ சங்கர் பேசும் அந்த ஒரு நீண்ட வசனமே அவரது நடிப்புக்கு சான்று..!

ஹோட்டல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை கலந்து அடித்திருந்தால் நன்றாக இருக்கும். அதற்கான பிளாட்பார்ம்கள் நிறைய இருந்தும் இயக்குநர் பயன்படுத்தாமல் போய்விட்டார்.

இன்றைக்கும் இசை என்றாலே இளையராஜாதான் என்பதை சமீபத்திய பல திரைப்படங்கள் காட்டுகின்றன. இந்தப் படத்திலும் இளையராஜாவின் மூன்று சாகாவரம் பெற்ற பாடல்கள் இடைச்செருகலாக இடம் பிடித்திருக்கின்றன. படத்தின் இசையமைப்பாளரான ஆர்.தேவராஜின் பாடல்கள் ஓகே என்றாலும் இசைஞானிக்கு முன்பு எல்லாம் தூள்.. தூள் ரகம்தான்.

முகநூல் பழக்கத்தில் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடி வரும் பெண்களுக்கு தேவையான மெஸேஜை சொல்ல நினைத்த இயக்குநருக்கு மேலும் ஒரு ஷொட்டு. அதையும் கிளைமாக்ஸில் சிறப்பான திரைக்கதையிலும், வசனத்திலும் அந்த விழிப்புணர்வு செய்தியைச் சொல்லியிருக்கிறார். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்..!

‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ பார்த்து மகிழலாம்..!

Our Score