‘துருவங்கள் பதினாறு’ பாணியில் விமலின் அடுத்த படம்…!

‘துருவங்கள் பதினாறு’ பாணியில் விமலின் அடுத்த படம்…!

‘பசங்க’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘களவாணி’ மூலம்  மக்களின்  மனதில்  இடம்  பிடித்தவர்  நடிகர் விமல்.  இதுவரை  22  படங்கள்  இவரது  நடிப்பில்  வெளிவந்துள்ளது.  அவற்றில்  ‘களவாணி’,  ‘வாகை சூட வா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘கலகலப்பு’, ‘மாப்ள சிங்கம்’, ‘மஞ்சப் பை’ ஆகிய  படங்கள்  பெரிய  வெற்றி படங்களாக  அமைந்தன.  பல  படங்கள்  சுமார்  ரகமாக  இருந்தாலும்  தயாரிப்பாளர்களுக்கு  நஷ்டத்தைக் கொடுக்கவில்லை. 

 திருட்டு விசிடி முன் கூட்டியே  வெளிவந்தும்  ‘மாப்ள சிங்கம்’  திரைப்படம்  தமிழக  திரையரங்குகளில்  5 கோடி ரூபாய் வசூல் செய்தது.   நல்ல  கதையம்சம்  கொண்ட  படங்களாக  இருந்தால்  வசூல்  சக்கை  போடுபோடும்  என்பதற்கு  ‘தேசிங்கு ராஜா’,  ‘கலகலப்பு’, ‘ மாப்ள சிங்கம்’, ‘மஞ்சப் பை’ போன்ற படங்கள் உதாரணமாகும். 

இவரது நடிப்பில் வெளிவந்த ‘காவல்’ திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி ஆகும்.

இந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தும் வகையில் இயக்குநர் பூபதி பாண்டியன்  இயக்கத்தில்  ‘மன்னர் வகையறா’  என்ற  படத்தை  தயாரித்து  வருகிறார்  விமல். 

அந்தப் படம் தன்னுடைய  சொந்தப்  படமாக  இருந்தாலும்  தனக்கான  முக்கியத்துவத்தை  குறைத்துக் கொண்டு  ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்வண்ணன்,  ரோபோ ஷங்கர்,  சிங்கம் புலி,  வம்சி கிருஷ்ணா, கார்த்திக்,  நீலிமா ராணி, ஜெயப்பிரகாஷ்,  என பல நட்சத்திர  பட்டாளங்களை  உடன்  வைத்துக் கொண்டு  பயணம்  செய்கிறார் விமல். 

இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தை முடிப்பதற்காக  கடந்த டிசம்பர்  12  முதல்  படப்பிடிப்பை  நடத்த  ஆயத்தமான  நிலையில்  வர்தா  புயலால்  படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.  டிசம்பர்  12  அன்று  S.K.R.  பொறியியல்  கல்லூரியில்  படப்பிடிப்பு  நடத்த  இருந்த  நிலையில் புயலால்  மரங்கள்  விழுந்துவிட்டதால்  படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ‘மாப்ள சிங்கம்’ படத்திற்கு பிறகு ‘மன்னர் வகையறா’ படத்தின் வெளியீட்டிற்கு  பிறகே அடுத்த  படத்தில்  நடிப்பது  என்று  முடிவெடுத்திருந்த  நடிகர்  விமல்  ‘மன்னர்  வகையறா’  திரைப்படத்தில் நிறைய  நட்சத்திரங்கள்  நடித்து  வரும்  காட்சிகள்  பெருமளவில்  இருப்பதால்  அவர்களை  ஒருங்கிணைத்து படப்பிடிப்பை  நடத்த  காலதாமதமாகி  வருவதால்  நடுவில்  ஒரு  சிறிய படத்தை  முடித்துவிட  திட்டமிட்டுள்ளார். 

 தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ பாணியில் குறும்பட இயக்குநரான  ‘தரண்’  சொன்ன  கதை  பிடித்துப்  போனதால் அந்தக் கதைக்கு  ஓகே  சொல்லியவர் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில்  இந்தப் படத்தில் நடிக்க தேதி  கொடுத்துள்ளார். இந்த  படத்தை  மெரினா  பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிக்கிறார். 

‘துருவங்கள் பதினாறு’ படத்தில் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த  திரில்லர் படத்தில்  கலக்க  உள்ளார்.  நட்சத்திரங்கள்,  டெக்னீஷியன்களை  தேர்வு  செய்யும்  பணி  தற்போது  நடந்து வருகிறது. 

மார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Our Score