full screen background image

விஜய் டிவிக்கு இயக்குநர் வ.கௌதமன் திடீர் எதிர்ப்பு..!

விஜய் டிவிக்கு இயக்குநர் வ.கௌதமன் திடீர் எதிர்ப்பு..!

விஜய் டிவி நிறுவனம் தனது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்தப் பகுதியை இலங்கையில் நடத்தவுள்ளது. இதற்காக கொழும்புவில் அடுத்த மாதம் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் கொழும்புவிலும், தமிழர் வாழும் பகுதிகளிலும் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் இந்த நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்துவதற்கு தமிழ் ஈழ உணர்வாளரும், திரைப்பட இயக்குநருமான வ.கெளதமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது.

Gowthaman (1)

“2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னமும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்கவில்லை. அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை. ஒட்டு மொத்த இனப் படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000-க்கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது.. உலகம் முழுவதும் அறிந்த உண்மை. 2009-2014 வரை கடந்த 5 ஆண்டுகளாக உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் தனி ஈழத்திற்காகவும், முள்ளிவாய்க்கால் பயங்கரத்திற்காகவும் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் தருணத்தில், தமிழகத்தில் இருந்து இயங்கி வரும் விஜய் டிவி, தன்னுடைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

மார்ச் 10, 2014 அன்றைக்கு ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நீதி கேட்டு நடக்கவிருக்கும்ம் நேரத்தில் விஜய் டிவியின் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கொழும்புவிலேயே நடப்பது வேதனையானது. கொடூரமானது.

மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து விஜய் டிவி, பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை st.Joseph கல்லூரியிலும் இந்நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக அறிகிறோம். இலங்கையில் தமிழர்கள் ஆடிப் பாடி பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக உலகத்திற்கு காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாகதான் இந்தத் திட்டம் நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது மிகக் கொடுமையானது.

தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு.. சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார். இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும், அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது.

எங்கள் பிணங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை விஜய் டிவி புரிந்து கொள்ளும் என நம்புகிறொம். இதையும் மீறி அந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டபடி நடந்தால், மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..!

இவ்வாறு தனது எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் வ.கவுதமன்.

Our Score