full screen background image

படையாண்ட மாவீரா – சினிமா விமர்சனம்

படையாண்ட மாவீரா – சினிமா விமர்சனம்

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ள திரைப்படம் ‘படையாண்ட மாவீரா’.

இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார் வ.கௌதமன்.

‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் மூன்றாவது திரைப்படம்தான் இந்த ‘படையாண்ட மாவீரா’.

இந்தப் ‘படையாண்ட மாவீரா’வின் நாயகியாக பூஜிதா பொன்னாடா நாயகியாக நடித்திருக்கிறார். மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், “தலைவாசல்” விஜய், ஏ.எல்.அழகப்பன், மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க, நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப்படுத்தியுள்ளார்.

இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவு – வெற்றிவேல் மகேந்திரன், கோபி ஜெகதீஸ்வரன், கலை இயக்கம் – மோகன், வசனம் – பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு – ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

அரசியல் வியாதிகளின் வாழ்க்கை சரித்திரத்தை சொல்லும்பொழுது பத்திரிகையாளர்கள் அந்த அரசியல் தலைவர் நோக்கி முன்வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் அந்த தலைவரின் தொண்டர்கள் அவரைப் பற்றிய விமர்சனங்களை எப்போதும் ஏற்க மாட்டார்கள். அப்படி ஒரு கொள்கையோடு உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்தப் படையாண்ட மாவீரா’ திரைப்படம்.

வன்னியர் சங்கத் தலைவராக இருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் துணை தலைவராகவும் பதவி வகித்த காடுவெட்டி குரு என்கின்ற ஒரு அரசியல்வாதியை பற்றிய படம்தான் இது.

அரசியல் வட்டாரத்தில் தடாலடியானவர். எதையும் வெட்டுண்ணு, துண்டு இரண்டாக பேசக் கூடியவர். முகத்திற்கு நேராக தன்னுடைய எதிர்ப்பை காட்டுபவர். மிகுந்த கோபக்காரர். மிகப் பெரிய இளைஞர் சமுதாயத்தையே தன்னுடைய ஜாதிக்கார இளைஞர்களை கட்டமைத்து வைத்திருக்கிறார். அவருக்கென்று ஒன்று நேர்ந்தால் அது இளைஞர்கள் பொங்கி எழுவார்கள். இது மாதிரியான பேச்சுக்களின் மூலமாக காடுவெட்டி குரு என்கின்ற அந்த மனிதரை நாம் அறிந்திருப்போம்.

ஆனால் இப்போது அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? எவ்வளவு வல்லவர் தெரியுமா? என்றெல்லாம் சொல்வதைப்போல இந்தப் படத்தை அவரைத் தூக்கி உயர்த்தி பிடிக்கும் அளவுக்கு சிறந்த மனிதராக வடிவமைத்து படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வா.கௌதமன். இதில் இடைச் செருகலாக காடுவெட்டி குருவின் காதல் கதையாக ஒரு கதையும் இணைந்துள்ளது.

வருடக்கணக்கில் சிறையில் இருந்தார் குரு. அவர் மீது பல முறை குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் மீது வழக்குகள் பதிவாகின. நீதிமன்றத்திற்கு அலைந்து, அலைந்து அவர் தன்னுடைய உடல் நிலையை சரியாக கவனிக்காமல் போய் இறுதியில் வீர மரணம் அடைந்தார் என்று இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

அந்த காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் இயக்குநர் வா.கௌதமனே நடித்திருக்கிறார். இவர் கொஞ்சம் விஜயகாந்த் மாதிரியான சாயலில் இருப்பதால் தான் ஹீரோவாக நடித்தால் படம் நிச்சயமாக எடுபடும் என்று துணிந்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார். அவர் பேசும் உணர்ச்சிகரமான வசனங்கள் காட்சிகளின் கட்டமைப்பில் வீரமாகத் தெரிகிறது. தான் சார்ந்த மக்களுக்காக இல்லாமல் தன் சமுதாயம் தாண்டிய மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பேசுகின்றேன் என்று அவர் பேசுகின்ற பல வீர ஆவேச பேச்சுக்கள் சிறந்த இயக்கத்தின் மூலம் கேட்க வைத்திருக்கிறது. பார்க்க வைத்திருக்கிறது.

கௌதமனின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. இறுதிவரையில் ஒரு மிகப் பெரிய தலைவர் எப்படி நடந்து கொள்வாரோ, அது போலவே திரைக்கதையை அமைத்து தன்னுடைய குருவுக்கு குரு வணக்கம் செய்திருக்கிறார் கௌதமன்.

ஹீரோயினாக நடித்திருக்கும் புஜிதா பொன்னாடாவுக்கு மிகப் பெரிய அளவு நடிப்பை காட்டுகின்ற ஸ்கோப் இல்லை, இருந்தாலும் இந்தப் படத்தில் மிக அழகான நாயகி என்கின்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார். மிக அழகான முகம், கலையான முகம், கேமராவுக்கு ஏற்ற முகம்.. காதல், பாடல் காட்சிகளில் மிக நாகரிகமான ஒரு காதலை காட்டியிருக்கிறார். அதன் பின்பு சிறு சிறு காட்சிகளில் வந்து போயிருக்கிறார். அவ்வளவுதான்.

கௌதமனின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரகனி சில காட்சிகளே ஆனாலும் ஒரு போராளியை வளர்த்துவிட்டுச் செல்லும் ஒரு போராளி தந்தையாக வாழ்ந்து நடித்திருக்கிறார்.

இளம் வயது காடுவெட்டி குருவாக நடித்திருக்கும் கௌதமனின் மகன் தமிழ் கௌதமனின் நடிப்பும் ஆச்சரியம்தான். இந்த சின்ன வயதில் இந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது. அவரிடத்தில் இருந்து அந்த நடிப்பை வரவழைத்து மிக அழுத்தமாக தன்னுடைய மகனை ஒரு தேர்ந்த நடிகராக இந்த படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் கவுதமன்.

மேலும் கெளதமனின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் சில பல காட்சிகளில் கண்ணீர்விட்டு அழுதே பரிதாபத்தை வரவழைத்து இருக்கிறார். கௌதமன் கூடவே வரும் நண்பரான மன்சூர் அலிகான் குணச்சித்திர நடிப்பைக் காண்பித்து ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறார். ஆடுகளம் நரேன், மதுசூதனன் ராவ் இருவரும் வில்லத்தனத்தை எந்த அளவுக்கு காட்ட முடியுமோ அந்த அளவுக்குக் காட்டி இருக்கிறார்கள்.

படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். ஒரு களப் போராளி என்ன மாதிரியான மன நிலையில் இருப்பானோ.. என்ன விதமாக பேசுவானோ அதில் துளிகூட குறையாமல் அடித்தட்டு மக்களுக்கும் புரியும் வகையில் வீராவேசத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருக்கும் வசனங்களை அளித்திருக்கும் வசனகர்த்தா பாலமுரளி வர்மனுக்கு நமது மிகப் பெரிய பாராட்டுக்கள்.!

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் அழகு என்றே சொல்லலாம். கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் மிக எளிதாக நம்முடைய காதுகளில் நுழைந்து மனதில் இடம் பிடித்துவிட்டது. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை முதல் காட்சி யிலிருந்து இறுதிவரையில் கொஞ்சம்கூட ஈவிரக்கம் இல்லாமல் உசுப்பி விட்டுக்கொண்டே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் முழுவதையும் நிச்சயமாக ஒரு பார்க்கும் வகையில் கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார். பாடல் காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதம் சிம்ப்லி சூப்பர் என்றே சொல்லலாம். அதே போல் சண்டை காட்சிகளிலும் மிக கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கும் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளையும் சிறப்பாகத் தொகுத்து அளித்திருக்கும் படத் தொகுப்பாளர் ராஜா முகமதுவை மனதார பாராட்டுகிறோம்.

வன்னியர் பெல்ட் என்று சொல்லப்படும் தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் காடுவெட்டி குரு என்கின்ற பெயர் கேட்டவுடன் என்ன மாதிரியான மனநிலை அந்தப் பகுதி மக்களுக்கு வருமோ அதையெல்லாம் மாற்றி அமைக்கும் வகையில் இந்தப் படம் 101% நல்லவர் என்று காடுவெட்டி குருவுக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது.

தன்னுடைய மக்களுக்காக இல்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடிய மாவீரன் குரு என்கிறார் இயக்குநர். தன்னுடைய மண்ணுக்காகவும் தன்னுடைய மண்ணில் இருக்கும் விவசாயத்தை அளிக்கக் கூடாது. என்னுடைய மண்ணை வளமாக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாக உழைத்தவர் காடுவெட்டி குரு என்று இந்த இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். மேலும் 100 கோடி ரூபாய் பணத்தை காட்டிய பொழுதும்தான் சார்ந்த கட்சிக்கு துரோகம் செய்யாமல் தன்னை சுற்றி இருக்கும் மக்களுக்கு துரோகம் செய்யாமல் மிக எளிமையாக வாழ்ந்த மறைந்தவர் என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் இதை காடுவெட்டி குருவைப் பற்றி அவர் சமுதாயத்தை தவிர மற்ற சமுதாய மக்கள் அவர் உயிருடன் இருந்த காலத்தில் எப்படியெல்லாம் எதிர்த்து பேசினார்கள். போராடினார்கள். அவருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள் என்பதையெல்லாம் இந்தப் படத்தில் சொல்லி இருக்க வேண்டும். அதுதான் சிறந்த படைப்புத் திறன்.

ஆனால் படத்தின் கதை, திரைக்கதையை கடைசிவரையிலும் ஒரு பக்கச் சார்பாகவே கொண்டு சென்று முடித்திருக்கிறார் இயக்குநர். இது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. அவரைப் போற்றி பாராட்டி புகழ வேண்டும் என்கின்ற ஏதோ ஒரு கட்டாயத்தில் கெளதமன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் போலும்..!

கடன் 30 வருடங்களாக தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வந்த பத்திரிகையாளன் என்ற முறையில் நிச்சயம் காடுவெட்டி குருவுக்கு மைனஸ் பாயிண்டுகளும் உள்ளன. கருப்பு பக்கங்களும் உள்ளன என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதையெல்லாம் சொல்லாமல் தவிர்த்துவிட்டு தன்னுடைய வசதிக்கேற்ப படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கெளதமனுக்கு நம்முடைய வன்மையான கண்டனங்கள்.

இந்த காடுவெட்டி குரு கொஞ்சம் உண்மையையும், நிறைய பொய்யையும், பேச வேண்டிய விஷயங்களை மறைத்தும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

RATING : 3.5 / 5

Our Score