விஜய் டிவி நிறுவனம் தனது சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை மார்ச் 1-2 தேதிகளில் கொழும்புவில் நடத்தவிருப்பதாகவும், அவ்வாறு நடத்துவது தமிழர்களை இழிவுபடுத்துவது போலாகும் என்றும்.. அந்த முயற்சியை விஜய் டிவி கைவிட வேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் வ.கெளதமனும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் சமீபத்தில் அறிக்கை விட்டிருந்தனர்.
இப்போது அதற்கு விஜய் டிவி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும்.
உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல் கடமையாக வைத்திருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலகத் தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற சில உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.
மார்ச் 1-2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற இசை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல.. இதற்கு முன் விஜய் தொலைக்காட்சி இலங்கையில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தியதும் இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.
விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று குறிப்பிட்டுள்ளது.
கொழும்புவில் நடக்கும் அந்த இசை நிகழ்ச்சியின் விளம்பர வடிவமைப்பிலும், பிரச்சாரத்திலும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி என்றே குறிப்பிட்டதால்தான் அங்கேயிருந்து கிடைத்தத் தகவலால் இங்கேயுள்ள தலைவர்கள் இதனைக் கண்டித்தார்கள்.
நாளை துவங்கவிருக்கும் நிகழ்ச்சியின்போது விஜய் டிவியின் பங்களிப்பு என்ன என்பது தெரிந்துவிடும்..!