கேப்டன் விஜயகாந்தின் ‘வல்லரசு’, ‘நரசிம்மா’, ‘தென்னவன்’, ‘சுதேசி’, ‘அரசாங்கம்’, ‘விருதகிரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த கேப்டன் சினி கிரியேஷன்ஸ், இப்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இதில் நாயகிகளாக ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நேகாவும், ‘மிஸ் பெங்களூர்’ பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன், தேவயானி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ், ‘தலைவாசல்’ விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பூபதி ஒளிப்பதிவு செய்ய ஜே.கே. கலை இயக்கம் செய்திருக்கிறார். சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், நடனம் – ஷோபி, அபி, நோபல். கவிஞர்கள் நா.முத்துக்குமார், விவேகா, பா.விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். நவீன் கிருஷ்ணாவின் கதை-திரைக்கதைக்கு வேலுமணி வசனம் எழுதியிருக்கிறார். அறிமுக சுரேந்தர் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான ஆழியார் டேம், வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 20 நாட்கள் நடைபெற்றது. அங்கே சுமார் ஒரு கோடி செலவில் ஆயிரம் துணை நடிகர்கள் முன்னிலையில் இருநூறு நடன கலைஞர்கள் பங்கேற்க ஆறு நாட்கள் ஒரு பாடல் மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. இப்பாடலுக்கு நடன இயக்குனர் ஷோபி அவர்கள் நடனம் அமைத்தார். இதில் நாயகன் சண்முகப்பாண்டியனும், நாயகி நேகாவும் பங்கேற்று மிகச் சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்கள்.
தற்போது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு வெளிநாடு சென்றுள்ளார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காக்கிலும் 35 நாட்கள் படமெடுத்து படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலை தயாரிப்பாளர் சுதீஷ் அவர்களின் நட்பிற்காக பாடிக் கொடுத்தார். இதில் சிறப்பு தோற்றத்தில் கேப்டன் விஜயகாந்த்தும் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேப்டன் விஜயகாந்தும் மலேசியா சென்றுள்ளார்.









